சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் வியாழக்கிழமை காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (செப்.26) முதல் அக்.1- ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புதன்கிழமை இரவு பூந்தமல்லி, கரையான்சாவடி, மாங்காடு, திருவேற்காடு, அய்யப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், வேலப்பன்சாவடி, குமண்சாவடி, திருமழிசை, செம்பரம்பாக்கம், ஆவடி, அம்பத்தூர் ஆகிய இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
ஆவடியில் 13.4 மி.மீ மழை
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அம்பத்தூர், ஆவடியில் 13.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. வானரகத்தில் 12.66 மி.மீ, மலர் காலனியில் 12.3 மி.மீ., மணலி, திரு.வி.க.நகர் பகுதிகளில் 9 மி.மீ மேல் மழை பதிவாகியுள்ளது. அண்ணாநகர், கத்திவாக்கம், கொளத்தூர், கோடம்பாக்கம் பகுதிகளில் 8 மீ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் வியாழக்கிழமை காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
35 விமானங்களின் சேவை பாதிப்பு
சென்னை புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் 35 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
தில்லி, மும்பை, பெங்களூருவில் இருந்து வந்த 12 விமானங்கள் தரையிறங்க மிகவும் தாமதமானது. திருச்சி-சென்னை விமானம் பெங்களூருவுக்கு திருப்பிவடப்பட்டது.
சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கவில்லை
சென்னையில் உள்ள அனைத்து சுரங்கபாதைகளும் போக்குவரத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது. எந்த சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை.
பெரம்பூர் சுரங்கப்பாதையில் தேங்கி இருந்த மழை நீர் வெளியேற்றப்பட்டது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.