5 ஏ.டி.எம்-களில் நூதன திருட்டு... இப்படியும் செய்வார்களா!

நாமக்கலில் பிடிபட்ட கன்டெய்னர் கும்பலுக்கு தொடர்பா? காவல் துறையினர் விசாரணை!
 5 ஏ.டி.எம்-களில் நூதன திருட்டு... இப்படியும் செய்வார்களா!
Published on
Updated on
2 min read

கோவையில் தொடர்ந்து 5 ஏ.டி.எம்.-களில் நூதன முறையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

குனியமுத்தூர் பகுதியில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு ஏ.டி.எம். மையத்தில் நூதன முறையில் பணம் திருட்டு நடைபெற்றது. அதில் ஏ.டி.எம். மைய எந்திரத்தின் பணம் வெளியே வரும் இடத்தில் மர்ம நபர்கள் டேப் ஒட்டி இருந்தனர்.

இதனால் வாடிக்கையாளர்கள் தனது ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுக்கும் போது எந்திரத்தில் இருந்து பணம் வெளியே வராது. அதே நேரத்தில் அந்த பணம் மீண்டும் எந்திரத்துக்குள் செல்லாமல் இடையில் சிக்கிக் கொள்ளும், வாடிக்கையாளர்கள் பணம் இல்லாமல் ஏமாற்றத்துடன் வெளியே சென்ற பிறகு, மறைந்து இருந்து நோட்டமிடும் அந்த நபர்கள் உடனடியாக ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்து தாங்கள் ஒட்டிய டேப்பை அகற்றுவர். டேப் அகற்றப்பட்டதும், எந்திரத்தில் இருந்து பணம் வெளியே வரும். இந்த பணத்தை எடுத்துக் கொண்டு அங்கு இருந்த அந்த நபர்கள் சென்று விடுவார்கள்.

வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணம் வராத நிலையில் வங்கிக் கணக்கிற்கு சம்பந்தப்பட்ட பணம் திரும்ப செல்லாததாலும், வங்கிக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, வங்கி அதிகாரிகள் போலீஸாரின் உதவியுடன் சம்பந்தப்பட்ட ஏ.டி.எம்.-களில் பதிவான காட்சிகளை சோதனை செய்தனர். இதில் இரண்டு இளைஞர்கள் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் வெளியே வரும் இடத்தில் டேப் ஒட்டி திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதை அடுத்து அந்த நபர்களின் புகைப்படங்களை வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் இருவரும் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் என்பது தெரிய வந்தது.

இவர்கள் குனியமுத்தூர் மட்டுமின்றி ரத்தினபுரி, கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு ஏ.டி.எம் களில் இதேபோன்று நூதன முறையில் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களை பிடிக்க மாநகர காவல் துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் கேரள மாநிலத்தில் ஏ.டி.எம் மையத்தில் நடந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு, பின்னர் நாமக்கல் போலீஸார் சுட்டுப் பிடிக்கப்பட்ட அசர் அலி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வருகிறார்.

இந்த நிலையில், கோவையில் நூதன திருட்டில் ஈடுபட்ட இளைஞர்களுக்கும், அசர் அலி உள்ளிட்ட வடமாநில கும்பலுக்கும் தொடர்பு இருக்குமா? என்ற கோணத்திலும் தனிப்படை போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

இதனைத் தொடர்ந்து, தனிப்படையினர் கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றனர். பின்னர் அங்கு இருந்து அசர் அலியிடம் இந்த இளைஞரின் புகைப்படத்தைக் காண்பித்து விசாரணை நடத்தினர்.

ஆனால் அசர் அலி இந்த இளைஞர்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியதாகத் தெரிகிறது. மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com