

காஸா நகரத்திலுள்ள மருத்துவமனையின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், மருத்துவப் பணியாளர் ஒருவர் பலியாகியுள்ளார்.
காஸா மீதான இஸ்ரேலின் போரில் தங்குமிடங்களை இழந்தும், படுகாயமடைந்தும் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் முவாஸி பகுதியிலுள்ள குவைத்தி ஃபீல்ட் மருத்துவமனையில் தஞ்சமடைந்து வந்தனர்.
இந்நிலையில், இன்று (ஏப்.15) அந்த மருத்துவமனையின் வடக்கு வாயிலின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அங்கு பணிப்புரிந்து வந்த மருத்துவப் பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலில் 9 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் அவர்கள் அனைவரும் அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மற்றும் பணிப்புரிந்த மருத்துவர்கள். குறிப்பாக இருவரின் உடல்நிலை அபாய நிலையில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து இஸ்ரேல் ராணுவத்தின் தரப்பிலிருந்து எந்தவொரு கருத்தும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
முன்னதாக, கடந்த 2023-ல் துவங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரில் காஸா நகரத்திலுள்ள ஏராளமான மருத்துவமனைகளின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்கள் நடத்தி தகர்த்துள்ளது.
இந்தத் தாக்குதல்கள் அனைத்திற்கும் அந்த மருத்துவமனைகளினுள் ஹமாஸ் படையினர் பதுங்கியிருந்தாகவும் அதனால் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டது.
இதனை முற்றிலும் மறுத்த அந்நகர மருத்துவப் பணியாளர்கள் இஸ்ரேல் தொடர்ந்து போர் குற்றங்களில் ஈடுபட்டு காஸாவின் சுகாதார வழிகளை முற்றிலும் அழித்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.
கடந்த ஏப்.13-ம் தேதி அன்று வடக்கு காஸாவிலுள்ள மக்களை வெளியேற உத்தரவிட்ட இஸ்ரேல் ராணுவம் அப்பகுதியிலிருந்த மிகப் பெரிய பொது மருத்துவமனையின் மீது தாக்குதல் நடத்தி அதனை தகர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:உக்ரைன் போருக்கு நான் காரணமல்ல; பைடன் மீது டிரம்ப் பழி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.