
அவிநாசி: அவிநாசி அருகே சேவூரில் தெரு நாய் கடித்து ஒருவர் பலியான சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம், சேவூர் ஊராட்சி, தேவேந்திர் நகர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் அற்புதராஜ் (42). இவரை கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன் தெரு நாய் கடித்ததாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அவர், உடல்நலனில் எந்தவித பாதிப்புமின்றி வழக்கம்போல இருந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த வாரம் திடீரென அற்புதராஜுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவரது உறவினர்கள் அற்புதராஜை, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். அப்போது சிகிச்சை அளித்த மருத்துவர், நாய் கடித்து, சிகிச்சை பெறாததால் அற்புதராஜ் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, உடனடியாக அற்புதராஜ் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு நாள்கள் தொடர் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை உயிரிழந்தார்.
மேலும், மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் அற்புதராஜ் உறவினர்கள் உள்ளிட்டோருக்கு கோவை மருத்துவமனையில் உரிய தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தெருநாய் கடித்து அற்புதராஜ் உயிரிழந்த சம்பவம் சேவூர் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆகவே உடனடியாக தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள்,மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக, நாய் கடித்து சிகிச்சை பெறாமல் உள்ளவர்கள் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.