ஆளுநருக்கு எதிராக ஏப். 25-ல் இந்திய கம்யூ. கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழக ஆளுநரைக் கண்டித்து ஏப். 25-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கறுப்புக்கொடி கண்டன ஆர்ப்பாட்டம்.
CPI
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன். (கோப்புப் படம்)
Published on
Updated on
2 min read

தமிழக ஆளுநரின் அரசியல் சாசன விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து ஏப். 25 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கறுப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மாநில தலைமை அலுவலகமான சென்னையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், கே. சுப்பராயன் எம்.பி., மாநில துணைச் செயலாளர் மு. வீரபாண்டியன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோ. பழனிசாமி, டி. ராமசாமி, பி. பத்மாவதி மற்றும் டி.எம். மூர்த்தி, எம். ரவி உள்பட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தமிழ்நாடு ஆளுநரின் அரசியல் சாசன விரோத நடிவடிக்கைகளை கண்டித்து, வரும் 25.04.2025 அன்று, தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கறுப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தமிழ்நாடு ஆளுநரின் அரசியல் சாசன விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து மாநிலம் முழுவதும் கறுப்புக்கொடி கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு பல்கலைக்கழக வேந்தர் பதவியில் தானே தொடர்வதாக அவரே கருதிக் கொண்டு செயல்படுவது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் சாரத்திற்கு எதிராக சவால் விடுவதாகக் கருத இடமளிக்கிறது.

தமிழ்நாடு பல்கலைக்கழக வேந்தராக ‘அரசு’ செயல்படும் என்பதுதான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பாகும். ‘அரசு’ என்பதன் மெய்ப்பொருள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு சட்டpபேரவையாகும்.

ஏனெனில், இந்திய அரசியலமைப்பு ஜனநாயக அரசியல் அமைப்பு என்பதால், தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத்தான் அதிக அதிகாரம் உள்ளது. தமிழ்நாடு ஆளுநர் என்பவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரல்ல. தமிழ்நாடு சட்டப்பேரவைப் பிரதிநிதிகளின் முடிவுகள் மூலம் அவர் வழிநடத்தப்படுகிறார்.

ஆனால், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு சட்டப்பேரவையின் வழிகாட்டுதல்களைப் பற்றிக் கவலைப்படாமல் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வருகிறார் என்பது அவருடைய தொடர்ச்சியான நடவடிக்கைகள் மூலம் தெளிவாகிறது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் எந்த இடத்திலும், தமிழ்நாடு பல்கலைக்கழக வேந்தராக ஆளுநரே தொடர்வார் எனக் குறிப்பிடப்படவில்லை. தீர்ப்பளித்த நீதிபதிகள் ஜே.பி பர்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு ஆளுநரின் செயல்பாடு சட்டத்திற்கு எதிரானது என்று தெளிவாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்நிலையில், துணைவேந்தர்களின் கூட்டத்தை ஊட்டியில் ஆளுநர் கூட்டியிருப்பதும், அதில் பங்கு பெற குடியரசுத் துணைத் தலைவரை அழைத்திருப்பதும் தனது சட்ட விரோத மனப்பான்மையிலிருந்து தமிழ்நாடு ஆளுநர் இன்னும் விடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின் உறைபொருளும், மறைபொருளும் சுட்டிக்காட்டுவது, தமிழ்நாடு பல்கலைக்கழகங்களின் வேந்தராக சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வேந்தராக தொடர முடியாது என்பதே ஆகும்.

எனவே, மாநில அரசு உரிய சட்ட ஆலோசனைகளைப் பெற்று, தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

மத்திய அரசு உடனடியாக சட்டவிரோதமாக செயல்பட்டு வருகிற ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற மாநில செயற்குழு வற்புறுத்துகிறது.

எனவே ஆளுநரின் சட்ட விரோத நடவடிக்கையையும், அதற்குத் துணையாக குடியரசுத் துணைத் தலைவரின் வருகையையும் கண்டித்து அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என தீர்மானிக்கப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணை வேந்தர்கள் மாநாடு நீலகிரியில் நடைபெற உள்ள நிலையில் ஏப். 25 ஆம் தேதி மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com