ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 72% வாக்குப் பதிவு

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் சுமார் 72 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாக்களிப்பதற்கு வாக்குச்சாவடியில் நிற்கும் பெண்கள்.
வாக்களிப்பதற்கு வாக்குச்சாவடியில் நிற்கும் பெண்கள்.
Published on
Updated on
2 min read

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் சுமார் 72 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவால் இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் புதன்கிழமை நடைபெற்றது. திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கி.சீதாலட்சுமி உள்ளிட்ட 46 பேர் போட்டியிட்டனர். அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன.

ஆண் வாக்காளர்கள் 1,10,128 பேர், பெண் வாக்காளர்கள் 1,17,381 பேர், மூன்றாம் பாலினம் 37 பேர் என மொத்தம் 2,27,546 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

காலையிலிருந்தே அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். 46 வேட்பாளர்கள் போட்டியிட்டதால் 3 வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனால் வாக்குப் பதிவு செய்வதில் சில வாக்காளர்களுக்கு தடுமாற்றம் ஏற்பட்டது.

72 % வாக்குப் பதிவு: வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் வாக்குப் பதிவு விவரங்களை வெளியிட்டது. இதன்படி காலை 9 மணிக்கு 10.95 சதவீதம், 11 மணிக்கு 26.03 சதவீதம், பகல் ஒரு மணிக்கு 42.41 சதவீதம், பிற்பகல் 3 மணிக்கு 53.63 சதவீதம், மாலை 5 மணிக்கு 64.02 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. மாலை 6 மணி நிலவரப்படி சுமார் 72 சதவீத வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2023- இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் 74.69 சதவீத வாக்குகள் பதிவாயின.

வாக்குச்சாவடி வாரியாக வாக்குப் பதிவு சதவீதத்தை கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. அதை இணையத்தில் பதிவேற்ற நள்ளிரவு 12 மணி வரை கால அவகாசம் இருக்கிறது. தவிர வாக்கு சதவீத விவரங்கள் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டு ஒப்புதலுக்கு பின்னரே இறுதி நிலவரம் அறிவிக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.

14 இடங்களில் இயந்திரக் கோளாறு: மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜகோபால் சுன்கரா ஈரோடு சம்பத் நகரில் உள்ள ஸ்ரீ அம்மன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி எண் 96- இல் வாக்குப் பதிவு தொடங்கியதும் வரிசையில் நின்று தனது வாக்கை செலுத்தினார்.

வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்த நிலையில், ஈரோடு மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ராஜகோபால் சுன்கரா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

எவ்வித பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கள்ள வாக்குப் போடப்பட்டதாக ஒரே ஒரு புகார் மட்டும் வரப் பெற்றிருக்கிறது. வாக்குப் பதிவு முகவர்கள் முன்னிலையில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர்தான் வாக்குப் பதிவு நடந்துள்ளது. இதனால் கள்ள வாக்குப் போட வாய்ப்பு இல்லை. 14 இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பிரச்னை ஏற்பட்டது. அவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டன என்றார்.

பெண் வாக்காளர் ஏமாற்றம்: ஈரோடு வளையக்கார வீதி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி எண் 168- இல் ஃபரிதா பேகம் என்பவர் தனது கணவருடன் வாக்களிக்க வந்தார். வரிசையில் நின்று வாக்களிக்கும் அறைக்குள் சென்று ஆவணங்களை சரிபார்த்தபோது அவரது வாக்கு ஏற்கெனவே செலுத்தப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஃபரிதா பேகம் வாக்குச்சாவடி அலுவலர்களிடம் முறையிட்டார். இருப்பினும் அவர் மீண்டும் வாக்கு செலுத்த முடியாது என்பதால் அவரது கணவர் மட்டும் வாக்கு செலுத்திவிட்டு சென்றார்.

ஆர்வத்துடன் வாக்களித்த வட மாநிலத்தவர்கள்: ஈரோடு கிழக்குத் தொகுதியில் வடமாநிலங்களைச் சேர்ந்த 7,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு வாக்குரிமை உள்ளது. ஈரோடு ஈஸ்வரன் கோயில் வீதி, என்.எம். எஸ். காம்பவுண்ட், கோட்டை வீதி, புது மஜீத் வீதி போன்ற பகுதிகளில் வட மாநிலத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி காலை முதலே வடமாநிலத்தவர்கள் குடும்பத்துடன் வந்து வாக்களித்தனர்.

பிப். 8-இல் வாக்கு எண்ணிக்கை: வாக்குப் பதிவு முடிந்தவுடன் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் "சீல்' வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஈரோடு அரசுப் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

வரும் 8- ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதற்காக ஈரோடு அரசுப் பொறியியல் கல்லூரியில் போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினரைக் கொண்ட ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் ஈரோடு, பவானி தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 40 தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.