மசோதாவை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை: ஆளுநர் தரப்பு வாதம்
அனைத்து சூழ்நிலைகளிலும் மசோதாவை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு வாதம் நடைபெற்று வருகிறது.


அனைத்து சூழ்நிலைகளிலும் மசோதாவை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும் ஆளுநருக்கு 4 முக்கிய அதிகாரங்கள் உள்ளதாகவும் உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு வாதம் நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுவருவதாகவும், தமிழகத்தின் மூன்று பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களின் நியமன விவகாரத்தில் ஆளுநர் தலையீடு அதிகரிப்பதாகவும் கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்குகளை நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை விசாரணை நடைபெற்ற நிலையில் இன்றும் விசாரணை தொடர்ந்தது. நேற்றைய விசாரணையில், மசோதாக்களை நிறுத்தி வைத்திருப்பது ஏன்? என ஆளுநர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தார்.
இன்றைய விசாரணையில் ஆளுநர் தரப்பு பல்வேறு வாதங்களை முன்வைத்துள்ளது.
'ஆளுநர் எல்லா சூழ்நிலைகளிலும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர வேண்டும் என்ற அவசியம் இல்லை.
ஆளுநருக்கு 4 முக்கிய அதிகாரங்கள் உள்ளன. மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவது, நிறுத்தி வைப்பது, திருப்பி அனுப்புவது, அதிருப்தியை தெரிவிப்பது.
தமிழக அரசின் மசோதாக்களில் இருதரப்புக்குமான சாதகமான பரிந்துரைகளை சேர்க்கவே ஆளுநர் முயற்சிக்கிறார்.
ஆளுநர் சில முரணான காரணங்களுக்காக ஒப்புதல் வழங்காமல் இருப்பார் என்றால், அரசு மற்றும் ஆளுநர் என இரு தரப்பும் இணைந்து முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம்.
குறிப்பாக, இதன் மீது முடிவெடுக்க குடியரசுத்தலைவருக்கு அனுப்புங்கள் என்று மாநில அரசே ஆளுநரைக் கேட்கலாம். எனவே, இதில் எதுவும் மாநில உரிமையைப் பறிப்பதாக கருத முடியாது.
ஆளுநர் அரசியலமைப்பு பிரிவு 200-ல் விதி 1-ன் கீழ் முடிவெடுத்தே ஆக வேண்டும் என்று கூறுவது, பிரிவு 200-ஐ முரணாக திரித்து கூறுவதாகும்' என்று ஆளுநர் தரப்பு கூறியது.
முன்னதாக நீதிபதிகள், 'ஆளுநர் எதுவும் விளக்கமளிக்காமல் மசோதாவை திரும்ப அனுப்பினால், அவர் மனதில் என்ன இருக்கிறது என்பது எப்படி தெரியும்?
மசோதாவில் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை என்றால் அரசுக்கு எப்படித் தெரியும்?
சம்மந்தப்பட்ட மசோதா மீதுதான் ஒப்புதல் கொடுக்க முடியாது என்பதை ஆளுநர் எப்படி உணர்ந்தார்?
கடந்த 2023 ஆம் ஆண்டு மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட பின்னர், தற்போது வரை என்ன நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டுள்ளார்? 2 ஆண்டுகளாக மசோதாக்கள் அவரிடம் உள்ளதா?
மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காதது குறித்து ஆளுநர் மற்றும் அரசுக்கு இடையே தகவல் பரிமாற்றம் இருந்ததா?' என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மசோதாக்கள் அனுப்பப்பட்ட 2 மாதங்களில் தனது முடிவை ஆளுநர் தெரிவித்து விட்டார் என கூறிய ஆளுநர் தரப்பு, 'துணைவேந்தர் நியமனத்தில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த நடைமுறை மத்திய சட்ட விதிமுறைகளுக்கு எதிராக உள்ளது. அவற்றுக்கு ஆளுநர் எவ்வாறு ஒப்புதல் அளிப்பார்?' என்று கேட்டது.
"பல்கலைக்கழக மசோதா மத்திய சட்டத்துக்கு எதிராக இருந்தால் அடுத்த நடவடிக்கை என்ன? மாநில அரசு எப்படி செயல்படும் என்று நினைக்கிறீர்கள்? ஆளுநர் அரசுக்கு முட்டுக்கட்டையாக உள்ளார். மசோதா விவகாரத்தில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்க முடியாது" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...