ரூ.120 கோடி செலவில் கல்விசார் கட்டடங்கள்: முதல்வர் திறந்துவைத்தார்

உயர்கல்வித் துறை சார்பில் ரூ.120.54 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(பிப். 14) திறந்துவைத்தார்.
ரூ.120 கோடி செலவில் கல்விசார் கட்டடங்கள்: முதல்வர் திறந்துவைத்தார்
Updated on
2 min read

உயர்கல்வித் துறை சார்பில் ரூ.120.54 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(பிப். 14) திறந்துவைத்தார்.

உயர்கல்வித் துறை சார்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் 120 கோடியே 54 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், உள்விளையாட்டு அரங்கங்கள், கழிவறைத் தொகுதிகள், விடுதிக் கட்டடம் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான கட்டடங்கள் போன்ற பல்வேறு கட்டடங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குதல், அதன் வாயிலாக ஆராய்ச்சி, புதுமைப் படைப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை உறுதி செய்தல், “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல், அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயில “புதுமைப் பெண்” திட்டம் மற்றும் மாணவர்கள் உயர்கல்வி பயில “தமிழ்ப்புதல்வன்” ஆகிய திட்டங்களின் கீழ் மாதம் ரூ.1,000/- உதவித் தொகை வழங்குதல், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு சலுகைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது.

திறந்துவைக்கப்பட்ட கட்டடங்கள்

கோயம்புத்தூர் மாவட்டம், புலியகுளம் - அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 12 கோடியே 90 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் செலவிலும், கரூர் மாவட்டம், தரகம்பட்டி - அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ராமேஸ்வரம் - பாரத ரத்னா டாக்டர் ஏ.பி. ஜெ. அப்துல்கலாம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தலா 12 கோடியே 46 லட்சம் ரூபாய் செலவிலும் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம், தளி - அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 14 கோடியே 74 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள கல்லூரிகளுக்கான புதிய கல்விசார் கட்டடங்கள்;

சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் 8 கோடியே 65 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் செலவிலும், கோயம்புத்தூர் அரசு பொறியியல் கல்லூரியில் 8 கோடியே 54 லட்சம் 86 ஆயிரம் ரூபாய் செலவிலும், திருச்சிராப்பள்ளி அரசு பொறியியல் கல்லூரியில் 8 கோடியே 56 லட்சம் ரூபாய் செலவிலும், மற்றும் தஞ்சாவூர் அரசு பொறியியல் கல்லூரிகளில் 8 கோடியே 59 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள உள்விளையாட்டு அரங்கங்கள்;

புதுக்கோட்டை, மா.மன்னர் கல்லூரியில் 6 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மின்னணு நூலகத்திற்கான கட்டடம்; திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் காஜாமலை வளாகத்தில் 8 கோடியே 83 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மகளிர் விடுதிக் கட்டடம்;

மயிலாடுதுறை மாவட்டம், புத்தூர் - ஸ்ரீனிவாசா சுப்பராயா பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 4 கோடியே 59 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 9 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 5 ஆய்வகக் கட்டடங்கள்; பர்கூர் - அரசு பொறியியல் கல்லூரியில் 4 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 8 கூடுதல் வகுப்பறைகள், கழிவறைத் தொகுதி மற்றும் 2 ஆய்வகக் கட்டடங்கள்;

தருமபுரி - அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டாவது மற்றும் மூன்றாவது தளங்களில் 2 கோடியே 68 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை, ஆய்வகம் மற்றும் கழிவறை தொகுதிக்கான கட்டடங்கள்; மதுரை - ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 3 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 12 வகுப்பறைகள் மற்றும் கழிவறைத் தொகுதிக் கட்டடங்கள்; தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி - அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 12 வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் கழிவறைத் தொகுதிகள்;

என மொத்தம் 120 கோடியே 54 லட்சம் 17 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித்துறை கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., உயர்கல்வித் துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப., தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஜெ.இன்னசன்ட் திவ்யா, இ.ஆ.ப., கல்லூரி கல்வி ஆணையர் எ.சுந்தரவல்லி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com