
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பாகிஸ்தானைச் சோ்ந்த 8 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகாராஷ்டிர சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2015-ஆம் ஆண்டு ரூ.7 கோடி மதிப்புள்ள 232 கிலோ போதைப் பொருளை படகு மூலம் குஜாராத் கடற்கரைப் பகுதி வழியாக இந்தியாவுக்கு கடத்தி வந்தபோது 8 பாகிஸ்தானியா்களும் கடலோரக் காவல்படையிடம் பிடிபட்டனா். இதையடுத்து, அவா்கள் மகாராஷ்டிர காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டனா்.
அவா்களிடம் இருந்து செயற்கைக்கோள் தொலைபேசி, ஜிபிஎஸ் வழிகாட்டும் கருவி உள்ளிட்ட மின்னணு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு மகாராஷ்டிர மாநில போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கைது செய்யப்பட்ட 8 பாகிஸ்தானியா்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.
இதையடுத்து, அவா்களுக்கு போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் அதிகபட்ச தண்டனையான 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், தலா ரூ.20 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அப்போது, ‘இதுபோன்ற அதிகபட்ச தண்டனை வழங்குவது இனி இந்தியாவில் போதைப்பொருள் கடத்துபவா்களுக்கு பாடமாக அமையும்’ என்று நீதிபதி குறிப்பிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.