திருப்பத்தூர் எஸ்.முத்துராமலிங்கம் மறைவு: முத்தரசன் இரங்கல்

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சிவகங்கை மாவட்ட முன்னணி தலைவர் திருப்பத்தூர் தோழர் எஸ்.முத்துராமலிங்கம் மறைவுக்கு முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன்
Published on
Updated on
1 min read

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சிவகங்கை மாவட்ட முன்னணி தலைவர் திருப்பத்தூர் தோழர் எஸ்.முத்துராமலிங்கம் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சிவகங்கை மாவட்ட முன்னணி தலைவர் திருப்பத்தூர் தோழர் எஸ்.முத்துராமலிங்கம் (71) சனிக்கிழமை காலை (ஜன.11) 9 மணியளவில் சென்னை, ராஜீவ்காந்தி அரசினர் பொது மருத்துவமனையில் காலமானார்.

இந்த நிலையில், முத்துராமலிங்கம் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகில் உள்ள காவனூர் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் தோழர் எஸ்.முத்துராமலிங்கம்.

சிறு வயதிலேயே கம்யூனிஸ்டு இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு அமைப்பில் இணைந்து செயல்பட்டு வந்தவர்.

விவசாயிகள் இயக்கத்தின் மூத்த தலைவர் மு.ஆதிமூலம், கூத்தக்குடி எஸ்.சண்முகம், மங்களசாமி, ஆர்.எச்.நாதன், மகாலிங்கம் போன்ற தோழர்களுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பை பெற்று சிறப்பாக பணியாற்றி வந்தார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்த காலத்தில் தீவிரமான இயக்கங்களை நடத்தியவர். இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு உறுப்பினர், சிவகங்கை மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர். மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் என்ற பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக செயல்பட்டு தனி முத்திரை பதித்தவர்.

முத்துராமலிங்கத்தின் வாழ்விணையர் மு.கண்ணகி இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக் குழு உறுப்பினர், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநிலச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் செயல்பட்டு வருபவர். இவர்களுக்கு ஜீவானந்தம் என்ற ஒரு மகன் இருக்கிறார்.

முத்துராமலிங்கத்தின் நல்லுடல் சென்னை மருத்துவமனையில் இருந்து, திருப்பத்தூருக்கு எடுத்துச் சென்று, அங்குள்ள இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் மக்கள் மரியாதை செலுத்த வைக்கப்படுகிறது. அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை(ஜன.12) பிற்பகல் 3 மணிக்கு அவரது நல்லுடல் சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்கு வழங்கப்படுகிறது.

அவரது மறைவுக்கு செவ்வணக்கம் கூறி, ஆழ்ந்த இரங்கலையும் அவரைப் பிரிந்து வாடும் அவரது வாழ்விணையர் மு.கண்ணகி, மகன் ஜீவானந்தம் உள்ளிட்ட குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.