
சென்னை: மகாராஷ்டிரத்தில் காணப்படக்கூடிய ஜிபிஎஸ் நோய் பாதிப்பு தமிழ்நாட்டில் வருவதற்கு வாய்ப்பில்லை. வந்தாலும் அதை எதிர் கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளும் அரசு எடுக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதி உதவியுடன் ரூ.362.87 கோடி மதிப்பீட்டில் மக்கள் பயன்பாட்டிற்காக கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அதனை புதன்கிழமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் நிதி உதவியுடன் ரூ.200.06 கோடி மதிப்பீட்டில் கட்டடங்களும், ரூ.162 கோடியே 81 லட்சம் மதிப்பீட்டில் உபகரணங்களும் என்கிற வகையில் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தரைதலத்துடன் கூடிய ஆறு தளங்களும் 468 படுக்கை வசதிகளும் கொண்ட இந்த கட்டடத்தில், 200 படுக்கை வசதிகளும், 16 அறுவை அரங்கங்களும், ஒருங்கிணைந்த தீவிர மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு பயன்பாட்டிற்கு வருகிறது.
சிறுநீரகவியல், மயக்கவியல், நரம்பியல், இருதயவியல், இரைப்பை மற்றும் குடல் நோய் துறை போன்ற பல்வேறு துறைகள் படிப்படியாக இடமாற்றம் செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு வர இருக்கிறது.
திமுக அரசு பதவி ஏற்பதற்கு முன் 19 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் இருந்தன. தற்போது 19 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், தலைமை மருத்துவமனைகளுக்கு இணையான வசதி கொண்ட 6 மருத்துவமனைகள் என 25 மருத்துவமனைகளுக்கும் ரூ. 1018 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டடங்கள் கட்டும் பணி நடைபெற்ற வருகிறது. இரண்டு மூன்று மாதங்களில் எல்லா கட்டடப் பணிகளும் முடிவுற்று ஒவ்வொன்றாக திறந்து வைக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 45 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது. எங்கே விபத்து நடந்தாலும் உடனடியாக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் முழு வீச்சோடு சிகிச்சை அளிப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
எந்த நாடு, மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ்நாட்டில் அதிக விபத்துகள் ஏற்படக்கூடிய இடமாக கண்டறியப்பட்டுள்ள 500 (ஹாட்ஸ்பாட்டு) இடங்களில் விபத்து நிகழ்ந்தால் 702 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கு ரூ.1 லட்சம் முதல் 48 மணி நேரத்தில் அரசு தருகிறது. அது தற்போது 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இன்னுயிர் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டதற்கு பிறகு இதுவரை 3 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளனர். ரூ.283 கோடி இதற்காக செலவிடப்பட்டுள்ளது என்றார்.
மேலும் மகாராஷ்டித்தில் காணப்படக்கூடிய ஜிபிஎஸ் நோய் பாதிப்பு தமிழ்நாட்டிற்கு வருவதற்கு வாய்ப்பில்லை. வந்தாலும் அதை எதிர் கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளும் சுகாதாரத்துறை எடுக்கும்.
2553 மருத்துவப் பணியிடங்களுக்கு ஜனவரியில் தேர்வு நடத்தப்பட்டு மதிப்பிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிப்ரவரி 15-க்குள் முதல்வர் மூலம் பணி ஆணைகள் வழங்கும் நிகழ்வு சென்னையில் நடைபெறும்.
பொண்ணுக்கு வீங்கி நோய்க்கான தடுப்பூசியை தேசிய தடுப்பூசி பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரை நேரில் சந்திக்கும்போது வலியுறுத்தப்படும். அவரை சந்திப்பதற்கு நேரம் கேட்டுள்ளோம். தில்லி தேர்தல் பிப்ரவரி ஐந்து முடிந்தவுடன் பார்க்கலாம் என கூறியுள்ளார். அவரை சந்திக்கும் போது ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள 18 கோரிக்கை பட்டியல்களோடு இதுகுறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாக அவர் கூறினார்.