விளை நிலங்களுக்கு மத்தியில் வீட்டுமனைப் பிரிவுகள்: ராமதாஸ் கண்டனம்

ரியல் எஸ்டேட் என்ற பெயரில், விளை நிலங்களுக்கு மத்தியில் வீட்டுமனைப் பிரிவுகளை கட்டமைக்கும் வேலைகள் தொடங்கப்பட்டிருப்பது ஆபத்தான போக்கு. அது எந்நாளும் ஏற்புக்குரியது அல்ல
ராமதாஸ்
ராமதாஸ்கோப்புப் படம்
Published on
Updated on
2 min read

ரியல் எஸ்டேட் என்ற பெயரில், விளை நிலங்களுக்கு மத்தியில் வீட்டுமனைப் பிரிவுகளை கட்டமைக்கும் வேலைகள் தொடங்கப்பட்டிருப்பது ஆபத்தான போக்கு. அது எந்நாளும் ஏற்புக்குரியது அல்ல என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விளை நிலங்களுக்கிடையிலும், விளை நிலங்களுக்கு அருகிலேயும், வணிக நோக்கில் அடுக்ககம் (பிளாட் குடியிருப்புகள்) மற்றும் தனி வீடுகள் கட்டி விற்கும், 'ரியல் எஸ்டேட்' வணிகப் போக்கு சமீபகாலமாக அதிகரித்து உள்ளது.

மக்களை ஈர்க்கும் விதமாக அதற்கான விளம்பரங்களுக்கு மட்டுமே லட்சக்கணக்கில் கொட்டுகிறார்கள். அதிலும் ஒழுங்குமுறை அறவே இல்லை. ஒரே இடத்துக்கு முப்பது நபர்கள் 'பட்டா' வாங்கி வைத்திருக்கிறார்கள். முப்பது நபர்களுக்கு விற்றும் முடிக்கிறார்கள். அரசாங்கம் இதை தீவிரமாய் கவனத்தில் கொண்டால் ரியல் எஸ்டேட் மோதல்களும் படுகொலைகளும் நிகழாமல் பார்த்துக் கொள்ளலாம்.

விமான நிலையம், தொடருந்து ரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்றவற்றுக்கான அடித்தள அமைப்புக்கு நிலம் தேவை என்ற காரணிகளின் அடிப்படையில் ஏற்கெனவே விவசாய நிலங்கள் நிறைய பறிபோய் விட்டது.

ரியல் எஸ்டேட் என்ற பெயரில், விளை நிலங்களுக்கு மத்தியில் வீட்டுமனைப் பிரிவுகளை கட்டமைக்கும் வேலைகள் தொடங்கப்பட்டிருப்பது ஆபத்தான போக்கு. அது எந்நாளும் ஏற்புக்குரியது அல்ல. குறிப்பிட்டுச் சொல்வதெனில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், நாமக்கல் மாவட்டங்களில் இந்த போக்கு பரவலாகக் காணப்படுகிறது.

சதுரஅடி ரூ.175 மட்டுமே என்று ஆரம்பித்து, அதன் பின்னர், அரை ஏக்கர் பண்ணை நிலம் ரூ.3.5 லட்சம் என்கிற அளவு அதன் போக்கு நீள்கிறது. குடியிருப்புகளுக்கான இடத்தில் இதுபோன்ற விற்பனை செயல்பாடுகள் நடப்பது குறித்து நாம் சொல்ல ஒன்றுமில்லை.

அரசு - சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு ரியல் எஸ்டேட் வணிகம் செய்யாதோரை அரசாங்கம் பார்த்துக் கொள்ளும். நம்முடைய கவலையெல்லாம் விவசாய நிலங்களுக்கு மத்தியில் அமைக்கப்படுகிற குடியிருப்பு 'பிளாட்டு'கள் குறித்துதான். சில நாள்களாக நாமக்கல் மாவட்டத்தில் இதே போன்றதொரு விவகாரம் பிரமாண்டமாக வெடிக்கத் தொடங்கியுள்ளதை சுட்டிக் காட்ட கடமைப்பட்டுள்ளோம்.

நாமக்கல் மாவட்ட, புதுச்சத்திரம், தெற்கு வயக்காடு பகுதி விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்திருக்கிறார்கள். அந்த மனுவில், "எங்கள் பகுதிகளில் ரியல் எஸ்டேட் வணிகம் செய்வோர், விவசாய நிலத்தை ஒட்டிய பகுதிகளை, 'வீட்டுமனை' களாகப் பிரித்து - விற்று வியாபாரம் செய்யத் தொடங்கி உள்ளனர்.

இதுகுறித்து எல்லாமும் தெரிந்தும், எதற்கும் கவலைப்படாமல், சட்டத்திற்கு புறம்பாக ரியல் எஸ்டேட் வணிகம் செய்வோரின் செயல்பாடு அமைந்துள்ளது.

மேலும் இங்கு அமையவுள்ள, அமைந்துள்ள மனைகளுக்கான பொது சாலையை, ஒரு தனி நபரின் 'பட்டா' வில் உள்ள குறுகலான பத்துஅடி மட்டுமே கொண்ட பாதையில் இணைத்திருக்கிறார்கள்

இதனால் சுற்றுச்சூழல் மற்றும் கிணற்று நீர் மாசடைதலோடு அன்றாட விவசாய பணிகளும் பாதிக்கும். எங்களை (விவசாயிகள்) நிலை நிறுத்திக் கொள்ளவும், விவசாயத்தை காப்பாற்றவும் போராடவேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம். இதன் பொருட்டு, தமிழ்நாடு அரசு வீட்டுவசதி (ம) நகர்ப்புற வளர்ச்சி சட்டத்திற்கு புறம்பாக உள்ள இந்த வீட்டுமனைப் பிரிவுகளுக்கு எந்த அங்கீகாரமும், அனுமதியும் வழங்க வேண்டாம். எங்கள் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்காத நிலையில் அறவழியிலாவது, சட்டரீதியிலாவது போராடி எங்கள் நில உரிமையை வென்றெடுப்போம்" என்று அந்த மனுவில் தெரிவித்திருக்கிறார்கள்.

முதற்கட்டமாக நாமக்கல் மாவட்டத்தில்தான் இந்த விவகாரம் வெளியில் தெரியத் தொடங்கியுள்ளது.

பல மாவட்டங்களில் இதே பிரச்னை அணிவகுத்து நிற்கிறது. இதை இனிமேலும் தொடரவிடுவது நாட்டுக்கும், விவசாயத்துக்கும் நல்லதல்ல. போர்க்கால அடிப்படையில் இதற்கு விரைந்து தீர்வு காண முதல்வர் முன் வரவேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Summary

The construction of housing estates amidst agricultural lands in the name of real estate is a dangerous trend. It is never acceptable.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com