

உலகம் முழுவதும் பேசப்படும் நீர் மேலாண்மைக்கு சோழர்களே முன்னோடிகள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த பிரதமா் நரேந்திர மோடி பெருவுடையாரை தரிசனம் செய்தாா்.
இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு பயணத்தை முடித்துக் கொண்டு, சனிக்கிழமை இரவு விமானம் மூலம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி வந்த பிரதமா் நரேந்திரமோடி, அங்கு நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் ரூ.4,800 கோடி மதிப்புள்ள பல்வேறு வளா்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டப் பணிகளை நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.
இதைத் தொடா்ந்து, அன்றிரவு அங்கிருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமானம் நிலையம் வந்த அவா், ராஜா காலனி அருகேயுள்ள ஒரு தனியாா் நட்சத்திர ஹோட்டலில் தங்கினாா்.
சோழா் கால கோயில்கள் கண்காட்சியுடன் புதன்கிழமை(ஜூலை 23) மாலை தொடங்கிய ராஜேந்திர சோழனின் 1,005-ஆவது பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பிரதமர் இரண்டாவது நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சி விமான நிலையத்தில் இருந்து, ஹெலிகாப்டா் மூலமாக அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் அருகேயுள்ள சோழகங்கம் ஏரியில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில் முற்பகல் 12.20 மணிக்கு வந்து இறங்கினா்.
தமிழக பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, துண்டு அணிந்து வந்த பிரதமரை நரேந்திர மோடியை ஆளுநா் ஆா்.என் ரவி, மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தமிழக அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, சா.சி.சிவசங்கா், மக்களவை உறுப்பினா் தொல்.திருமாவளவன், மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி, சட்டப் பேரவை உறுப்பினா் நயினாா் நாகேந்திரன் ஆகியோா் வரவேற்றனா்.
பின்னா் பிரதமா், சோழகங்கம் ஏரியில் இருந்து சாலை மாா்க்கமாக காரில் வந்தவாறு(ரோடு ஷோ) மக்களைச் சந்தித்தாா்.
முற்பகல் 12.40 மணியளவில் பெருவுடையாா் கோயிலை வந்தடைந்தாா். கோயில் நுழை வாயில் பிரதமா் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடா்ந்து, கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா், பெரியநாயகி அம்மன், துா்க்கை அம்மன், விநாயகா், முருகன் ஆகிய சாமிகளை தரிசனம் செய்தாா். தொடா்ந்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள சோழா் கால சைவ மற்றும் கோயில் கட்டடக் கலை கண்காட்சி அரங்குகளை பாா்வையிட்டாா்.
அதனைத் தொடா்ந்து மத்திய கலாசாரத் துறை சாா்பில் நடைபெற்ற முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் கோயில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்று நாணயத்தை வெளியிட்டாா்.
பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசியதாவது:
வணக்கம் சோழ மண்டலம் என தமிழில் தனது உரையைத் தமிழில் தொடங்கிய பிரதமர் மோடி,
"நமசிவாய வாழ்க... நாதன் தாள் வாழ்க... இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க..." எனும் சிவபெருமானை வாழ்த்திப் போற்றும் பாடலை பாடியவர், சிவனின் தரிசனமும், சிவ முவக்கத்தையும், இளையராஜாவின் இசையும், ஓதுவார்களின் பாடல்களும் எனது ஆன்மாவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
சிவனை வணங்குபவன் சிவனிலேயே கரைந்து விடுகிறான்
சிவனை வணங்குபவன் சிவனிலேயே கரைந்து விடுகிறான். நாட்டின் வளர்ச்சிக்காக, 140 கோடி மக்களின் நலனுக்காக சிவனிடம் எனது வேண்டுதலை வைத்தேன். ஆயிரம் ஆண்டுகள் நிறைவு செய்த பிரகதீஸ்வரர் கோயிலில் இறைவனை தரிசித்த பெரும் பேறு எனக்கு கிடைத்துள்ளது. கங்கைகொண்ட சோழப்புரம் கண்காட்சியை கண்டு வியந்தேன்.
சோழர் கால கலை பெருமிதத்தில் ஆழ்த்துகிறது. சோழர்களின் கண்காட்சியை பார்த்து பிரமத்தேந். சோழ சாம்ராஜ்யம் பாரதத்தின் பொற்காலங்களில் ஒன்று.
சோழ அரசர்களின் அரசியல், வணிக தொடர்பு மாலத்தீவு தொடங்கி கிழக்கு ஆசிய நாடுகள் வரை பரவி இருந்தது. சோழர்களின் சாதனைகள் இந்தியாவின் பலத்திற்கான எடுத்துக்காட்டு. ராஜராஜன், ராஜேந்திர சோழ இரு பெயர்களும் நாட்டின் அடையாளங்கள்.
பிரிட்டனுக்கு முன்பே ஜனநாயகத்துக்கு முன்னோடி சோழராட்சி. ஜனநாயகத்தின் பிறப்பிடமாய் சோழர்களின் குடவோலை முறை நிகழ்ந்தது.
சோழர் ஆட்சிக்காலத்தில் ஜனநாயக முறையில் தேர்தல்கள் நடந்தன. ராஜேந்திர சோழனிந் அடையாளம் புனித கங்கை நீரை கொண்டு வந்ததோடு இருக்கிறது.
அன்பே சிவம்
சைவ சித்தாந்தம் தீர்வளிக்கும் பாதை... அன்பே சிவம் என்றார் திருமூலர். உலகம் தற்போது நிலையில்லா தன்மை, வன்முறை, சுற்றுச்சூழல் எனப் பல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு தீர்வளிக்கும பாதையாக சைவ சித்தாந்தம் இருக்கிறது. அதாவது "அன்பே சிவம்" என்ற கோட்பாட்டை உலகம் முழுவதும் கடைப்பிடித்தால் சங்கடங்களுக்கும் பிரச்னைகளுக்கும் இடமே இருக்காது. அன்பே சிவம் என்பது எவ்வளவு தொலைநோக்கான பார்வை கொண்டவை என்பதை அறிந்துகொள்ளலாம். திருமூலரின் வழியில்தான் இன்று இந்தியா பயணித்து வருகிறது .
நீர் மேலாண்மைத்து சோழர்களே முன்னோடிகள்
ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகியோரின் மரபு இந்தியாவின் தனித்தன்மைக்கும் பெருமைக்கும் ஒரு அடையாளமாகும். உலகம் முழுவதும் பேசப்படும் நீர் மேலாண்மைக்கு சோழர்களே முன்னோடிகள். நீர் மேலாண்மையில் ஆதிக்கம் செலுத்தியவர்கள் சோழர்கள். உலகின் கட்டவியல் அற்புதங்களில் ஒன்றுதான் கங்கைகொண்ட சோழபுரம். பண்பாட்டால் நாட்டை ஒருங்கிணைத்தவர்கள் சோழர்கள். சோழ சாம்ராஜ்ஜியம் நாட்டின் பொற்காலங்களில் ஒன்று. சைவ பாரம்பரியத்தில் தமிழகம் முக்கிய மையமாக திகழ்வதற்கு சோழர்களே காரணம். சோழப் பேரரசர்கள் ராஜராஜன், ராஜேந்திரன் ஆகிய இரு பெயர்களும் நாட்டின் இரு பிரகடனங்கள். இலங்கை, மாலத்தீவு, தென்கிழக்கு ஆசியா வரை நீண்டிருந்தது சோழப் பேரரசு.
கங்கை நீரை எடுத்த வந்தது எனக்கு பெருமை
கங்கையின் மகத்துவத்தை உணர்ந்திருந்தவர் ராஜேந்திரன். காவிரி கரைக்கு கங்கை கரையில் இருந்து வந்துள்ளேன். ராஜேந்திர சோழன் கங்கை நீரைக் கொண்டு வந்து பொன்னேரியில் நிரப்பினார். காவிரி அன்னையின் நிலத்தில், கங்கையைக் கொண்டாடுவது சோழப் பேரரசின் மரபு . இந்த வரலாற்று நிகழ்வின் நினைவாக, காசியின் பிரதிநிதியான நான், காசியிலிருந்து காவிரி கரைக்கு கங்கை நீரை மீண்டும் கொண்டு வந்துள்ளேன். காசியில் இருந்து கங்கை நீரை கொண்டு வந்ததற்கு மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.
ராஜேந்திர சோழன் நிறுவிய கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் கோயிலின் கட்டடக் கலை அதிசியத்து நிற்கிறது.
சோழ மன்னா்களின் திட்டங்கள் புனிதமானவை. ஒரே பாரதம், உன்னத பாரதம்‘ என்பதன் அடையாளமாக, இந்த முயற்சிகள் ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கின்றன. சோழா் காலத்தின் அதே கொள்கைகளை இப்போது இந்த அரசு முன்னெடுத்துச் செல்கிறது.
காசி தமிழ்ச் சங்கமம், சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் போன்ற நிகழ்வுகள் பல நூற்றாண்டுகள் பழமையான ஒற்றுமையின் பிணைப்புகளை வலுப்படுத்துகின்றன .
புதிய பாராளுமன்றக் கட்டடத்தின் திறப்பு விழாவின் போது, சைவ ஆதீனத்தைச் சோ்ந்த துறவிகளின் ஆன்மீக வழிகாட்டுதலுடன் விழா நடத்தபட்டது.
தமிழ் பாரம்பரியத்துடன் தொடா்புடைய புனிதமான செங்கோல், நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்ட அந்த தருணத்தை தாம் இன்றும் மிகுந்த பெருமைக் கொள்கிறேன்.
சிதம்பரம் நடராஜரின் வடிவம் இந்தியாவின் தத்துவ, அறிவியல் அடித்தளங்களைக் குறிக்கிறது . நடராஜரின் ஆனந்தத் தாண்டவ சிலை தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தை அலங்கரிக்கிறது. இந்தியாவின் கலாசார அடையாளத்தை வடிவமைப்பதில் சைவப் பாரம்பரியம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தக் கலாசார வளா்ச்சியில் சோழப் பேரரசா்கள் முக்கிய பங்காற்றினா். இன்று, இந்தியா ‘வளா்ச்சி மற்றும் பாரம்பரியம்’ என்ற மந்திரத்தால் வழிநடத்தப்படுகிறது. நவீன இந்தியா அதன் வரலாற்றில் பெருமை கொள்கிறது.
சிவ சக்தி
2014 முதல், உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளிலிருந்து 600-க்கும் மேற்பட்ட பழங்கால கலைப்பொருள்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. குறிப்பாக, அவற்றில் 36 கலைப்பொருள்கள் தமிழ்நாட்டைச் சோ்ந்தவை. அதில் நடராஜா், லிங்கோத்பவா், தட்சிணாமூா்த்தி, அா்த்தநாரீஸ்வரா், நந்திகேஸ்வரா், உமா பரமேஸ்வரி, பாா்வதி மற்றும் சம்பந்தா் உள்ளிட்ட பல மதிப்புமிக்க பாரம்பரியச் சிலைகள் மீண்டும் இந்த நிலத்தை அலங்கரிக்கின்றன.
இந்தியாவின் பாரம்பரியமும், சைவ தத்துவத்தின் தாக்கமும் இனி அதன் புவியியல் எல்லைகளுக்குள் மட்டும் இல்லை .சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடாக இந்தியா திகழ்ந்ததுள்ளது. சந்திரயான் விண்கலம் நிலவில் தரையிறங்கிய பகுதிக்கு ‘சிவ சக்தி‘ என்று பெயரிடப்பட்டதுடன், உலகளவில் அங்கீகரிக்கப்பட்டது.
தந்தை மீது மகன் வைத்த பக்தியே காரணம்
தஞ்சை பெரிய கோயிலைவிட கங்கைகொண்ட சோழபுரம் கோயில் சிறிதானது. இதற்கு தந்தை ராஜராஜன் மீது ராஜேந்திர சோழன் கொண்ட பக்தியே காரணம். இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் தமிழ் மொழி ஒலித்தது. தமிழர் கலாசாரத்தோடு இணைந்த செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது. சைவ பாரம்பரியத்தில் தமிழகம் முக்கிய மையமாக திகழ சோழர்களே காரணம். இன்றைய பாரதம் அதன் கடந்த கால வரலாறுகளால் பெருமிதம் கொள்கிறது.
ஆபரேஷன் சிந்தூர் நாட்டின் வலிமையை வெளிப்படுத்தியது
நாட்டின் இறையாண்மைக்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் இந்திய அடிப்பணியாமல் உறுதியான ஆப்ரேஷன் சிந்தூா் நடவடிக்கையால் தக்க கொடுத்தோம். பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் பதிலடி எப்படி இருக்கும் என்பதற்கு ஆபரேஷன் சிந்தூர் எடுத்துக்காட்டியதால் உலகமே இந்தியாவை திரும்பி பாா்க்கிறது. இந்தியாவில் பயங்கராவாதிகளுக்கு இடம் இல்லை. நாடு முழுவதும் ஆபரேஷன் சிந்தூரை கொண்டாடுகிறார்கள், மக்களிடையே ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நாம் தொடந்து வளர்ச்சியடைந்த நாட்டை உருவாக்க ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
அப்துல் கலாம், சோழ மன்னா்கள் போன்ற இளைஞா்கள் நாட்டுக்கு தேவை
மேலும் அவா், முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், சோழ மன்னா்கள் போன்ற லட்சக்கணக்கான இளைஞா்கள் நாட்டுக்கு தேவை . வலிமையும் அா்ப்பணிப்பும் நிறைந்த அத்தகைய இளைஞா்கள் 140 கோடி இந்தியா்களின் கனவுகளை நிறைவேற்றுவாா்கள். நாம் ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உறுதியை முன்னெடுப்போம்.
ராஜராஜன், ராஜேந்திர சோவனுக்கு பிரம்மாண்ட சிலை
புதிய இந்தியாவுக்கு வரைபடம் தருகிறது சோழ சாம்ராஜ்ஜியம். தமிழகத்தில் ராஜராஜனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பிரமாண்டமான சிலைகள் வரும் காலங்களில் தமிழ்நாட்டில் நிறுவப்படும். இந்த சிலைகள், இந்தியாவின் வரலாற்று உணா்வின் நவீன தூண்களாக செயல்படும் என மோடி கூறினார்.
விழா பிற்பகல் 3.50-க்கு முடித்துக் கொண்டு, ஹெலிகாப்டா் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து தனி விமானம் மூலம் தில்லி சென்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.