அந்த அறிவிப்பின்படி, இத்திட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட குக்கிராமங்களை நகரப் பகுதிகளுடன் இணைக்கும் விதமாக, அதிகபட்ச வழித்தட தொலைவை 25 கி.மீ. ஆக உயா்த்தி வழித்தட நீட்டிப்பு செய்து, அதில் பேருந்து இயங்காத வழித்தடங்களில் குறைந்தபட்சம் 65 சதவிகிதம் என இயக்க வழிவகை செய்யப்பட்டு முக்கிய அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்குச் சென்று மக்களை இறக்கிவிட ஏதுவாக மேலும் 1 கிலோ மீட்டர் தூரம் வரை சிற்றுந்துகளை இயக்கிடவும் வழிவகை செய்யப்பட்டது. இதன்படி, தமிழ்நாட்டில் 2 ஆயிரத்து 94 புதிய வழித்தடங்கள் மற்றும் புதிய திட்டத்துக்கு மாறுதல் செய்யப்பட்ட 1,009 வழித்தடங்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 103 வழித்தடங்கள் அடையாளம் கண்டறியப்பட்டு 90 ஆயிரம் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏறத்தாழ 1 கோடி மக்கள் பயன்பெறத்தக்க வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.