
எழுத்தாளர் நாறும்பூநாதன்(64) மறைவுக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன்(64) ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) உயிரிழந்தாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அன்னாரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இவரின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
எழுத்தாளரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின்மாநில நிர்வாகியுமான நாறும்பூநாதன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
நாறும்பூநாதன் நெல்லை வட்டாரத்தை மையப்படுத்திய தனது இலக்கியப் படைப்புகளாலும், சமூகச் செயற்பாடுகளாலும் நன்கு அறியப்பட்ட முற்போக்கு இயக்க எழுத்தாளராக விளங்கியவர் ஆவார். நமது அரசு நடத்தும் பொருநை இலக்கியத் திருவிழாவிலும் அவர் மிக முக்கியப் பங்காற்றினார் என்பதை நன்றியோடு இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.
நாறும்பூநாதன் இலக்கியப் பங்களிப்புகள், சமூகச் செயற்பாடுகள், பள்ளி மாணவர்களிடையே இலக்கிய ஆர்வத்தைத் தூண்டுவதற்கான அவரது முன்னெடுப்புகள் ஆகிய தமிழ்ப் பணிகளைப் பாராட்டி 2022 ஆம் ஆண்டுக்கான உ.வே.சா. விருதினை நமது அரசின் சார்பில் வழங்கியிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்துயர்மிகு தருணத்தில், அவரது குடும்பத்தினருக்கும், அரசியல் - இலக்கியத் துறை நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் உரித்தாக்கிக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.