

அதிமுகவில் செங்கோட்டையனை நீக்கியது அவர்களுடைய உள்கட்சி பிரச்னை என்று தெரிவித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், செங்கோட்டையன், டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை பாஜகவில் இணைப்பது குறித்து பிறகு தெரிவிக்கிறேன் என கூறினார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, தஞ்சையில் என்ன நடக்கிறது என்றே இங்குள்ள மாவட்ட ஆட்சியருக்கு தெரியவில்லை. இப்படிப்பட்ட ஆட்சியர் இருந்தால் எப்படி மக்களுக்கு நன்மை கிடைக்கும். பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு விவசாயிகளின் பாதிப்பு குறித்து கணக்கெடுத்து அரசு அனுப்ப வேண்டியது மாவட்ட ஆட்சியரின் கடமை. அந்தக் கடமையை மாவட்ட ஆட்சித்தலைவரோ, முதல்வரோ, துணை முதல்வரோ செய்யவில்லை. ரயில் நிலையத்தில் வந்து பார்த்துவிட்டு சினிமாவிற்கு சென்றுவிட்டார். இந்த ஆட்சியின் நிர்வாக திறமையின்மைக்கு ஒரு சான்று.
உள்கட்சி பிரச்சனை
அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை நீக்கியது அவர்களுடைய உள்கட்சி பிரச்னை.
கோயில் கோபுரங்கள் இடிந்து சேதம் அடைந்து காணப்படுகின்றன. முதலில் அமைச்சர் சேகர்பாபு கோயில் பிரச்னைகளை பார்க்கட்டும் அடுத்த கட்சி பிரச்னையை அவர் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்றார்.
ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் ஆகியோரை பாஜகவில் இணைப்பீர்களா என்ற கேள்விக்கு?
இது நல்ல கேள்வி ஆனால் பதில் பிறகு சொல்கிறேன்.
வடக்கு தெற்கு எனவும், மொழிவாரியாக திரித்து பேசுவதும், தமிழகத்தில் வன்மத்தை ஏற்படுத்துவது கலைஞர் காலத்தில் இருந்து தொன்று தொட்டு செய்து கொண்டிருக்கிறார்கள்.
டெல்டாகாரன் என சொல்லிக் கொள்ளும் முதல்வர் குறைந்தபட்சம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரமாவது வழங்க வேண்டும். இதில் அரசியல் இல்லை, பாகுபாடில்லை கொடுத்தால் முதல்வரை நானே பாராட்டுவேன்.
பாஜக வேறு, அமலாக்கத்துறை வேறு, தேர்தல் ஆணையம் என்ற அமைப்பு வேறு. இதில் நாங்கள் எதிலும் தலையிட முடியாது, செய்திகளை பார்த்து தான் தெரிந்து கொண்டேன். தமிழகத்தில் நகராட்சித் துறையில் பணியாளர்கள் நியமனத்தில் ரூ.888 கோடிக்கு மேலாக ஊழல் நடந்திருப்பதாக சொல்கிறார்கள், விசாரணை முடிந்த பிறகு தான் உண்மை தெரிய வரும் என நயினார் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.