

லக்னௌ: தொழிலதிபரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் ஜான்சி மத்திய ஜிஎஸ்டி துணை ஆணையரும் 2016 பிரிவைச் சேர்ந்த ஐஆர்எஸ் பெண் அதிகாரியுமான பிரபா பண்டாரியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் அவரது வீட்டில் இருந்து ரூ.1.6 கோடி பணம், ஏராளமான தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
லஞ்ச பணத்தை தங்கமாக மாற்றித்தருமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதே, பிரபா பண்டாரிக்கு எதிரான வழக்கில் முக்கிய ஆதாரமாக உள்ளது என்று சிபிஐ அதிகாரிகள் கூறுகின்றனர்.
உத்தப்பிரதேசம் மாநிலம், ஜான்சி நகரில் செயல்பட்டு வரும் ஜிஎஸ்டி அலுவலகத்தில் துணை ஆணையராக ஐஆர்எஸ் பெண் அதிகாரி பிரபா பண்டாரி பணியாற்றி வந்தார். கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி அவரது தலைமையிலான அதிகாரிகள் ஜான்சி நகரில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பிளைவுட்ஸ், ஹார்ட்வேர் நிறுவனங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு நிறுவனங்களிலும் பல கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சட்ட நடவடிக்கைகளில் இருந்து விடுப்பிப்பதற்காக அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் லஞ்சம் கொடுப்பதற்கு முன்வந்துள்ளனர். இதுதொடர்பாக ஜிஎஸ்டி அலுவலக கண்காணிப்பாளர் அனில் குமாரை அவரது வீட்டில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது ரூ.1.5 கோடி கொடுப்பதாக பேரம் பேசப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பேரம் தொடர்பான ரகசிய தகவல் சிபிஐ அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் ஜான்சியில் முகாமிட்டு ஜிஎஸ்டி அலுவலக அதிகாரிகளின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்துள்ளனர்.
இதனிடையே, டிச.30 ஆம் தேதி வழக்குரைஞர் நரேஷ் குப்தா, ஜிஎஸ்டி கண்காணிப்பாளர் அனில் குமார், மூத்த அதிகாரி அஜய் சர்மாவை சந்தித்து முதல் தவணையாக ரூ.70 லட்சத்தை வழங்கியுள்ளனர். இதனை அங்கு மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள், அனில் திவாரி மற்றும் அஜய் குமார் சர்மா உள்ளிட்ட மூன்று பேரையும் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.
இதுதொடர்பாக அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, இரண்டு அதிகாரிகளும் உண்மையை ஒப்புக்கொண்டதுடன், இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் மூளையாகச் செயல்பட்டவர் தங்கள் உயர் அதிகாரியான துணை ஆணையர் பிரபா பண்டாரிதான் என்று தெரிவித்தனர்.
லஞ்சத்தை காட்டிக்கொடுத்த செல்போன் அழைப்பு
"ஆனால் சிபிஐ அதிகாரிகளுக்கு அவர்களது வாக்குமூலத்தை விட மேலான நேரடி ஆதாரம் தேவைப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட ஜிஎஸ்டி கண்காணிப்பாளர் அனில்குமாரை, அங்கேயே, தங்கள் கண் முன்பே, செல்போனை ஸ்பீக்கரில் போட்டு பண்டாரியை அழைத்து லஞ்சம் பெறப்பட்டுள்ளது தொடர்பாக தெரிவிக்குமாறு சொன்னார்கள், "அனில்குமார் செல்போன் அழைப்பை எடுத்த பண்டாரியிடம், முதல்கட்டமாக ரூ.70 லட்சத்தை கொடுத்துள்ளனர் என்று அனில்குமால் கூறியதும், பிரபா பண்டாரி, மிகவும் நல்லது, அந்த பணத்தை தங்கமாக மாற்றித் தன்னிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இந்த செல்போன் உரையாடல் முழுவதையும் பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள், இந்த உரையாடலை லஞ்சப் பரிவர்த்தனைக்கான முக்கிய ஆதாரமாக மாற்றினர். இந்த உரையாடல் மூலம் லஞ்ச கும்பலின் தலைவி பிரபா பண்டாரி என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்த சிபிஐ அதிகாரிகள், உரையாடலின் போது, பிரபா பண்டாரி தில்லியில் இருப்பதை உறுதி செய்து கொண்டனர்.
இதையடுத்து தில்லி விரைந்த சிபிஐ அதிகாரிகள், தில்லியில் சொகுசு வீட்டில் தங்கியிருந்த பிரபா பண்டாரியை கைது செய்தனர். மேலும் அவரது வீடு முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். நான்கு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனையில் ரூ.1.6 கோடி பணம், தங்கம், வெள்ளி நகைகள், பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களை கைப்பற்றினர். இது லஞ்ச வழக்கை மேலும் உறுதிப்படுத்தியது. பண்டாரியின் கணவர் ஒரு ராணுவ கர்னல் என்பதையும் சிபிஐ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இந்த வழக்கில் முதலில் ரூ.13 கோடி பேரம் பேசப்பட்டதாகவும், பின்னர், ரூ.1.5 கோடி லஞ்சமாக வழங்கினால், வழக்கை 'சமாளித்துவிடலாம்' என்று ஒரு மறைமுகமான ஒப்பந்தம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டிய சிபிஐ அதிகாரிகள், சோதனையில் கூடுதலாக ரூ.90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதன் மூலம், கைப்பற்றப்பட்ட மொத்த பணத்தின் மதிப்பு ரூ.1.6 கோடியாக உயர்ந்துள்ளது.
பண்டாரி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள சிபிஐ அதிகாரிகள், இதுதொடர்பாக பிற அதிகாரிகளின் தொடர்புகள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.