

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக விராட் கோலி 93 ரன்களும், கேப்டன் ஷுப்மன் கில் 56 ரன்களும் குவித்தனர்.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டி வதோதராவில் இன்று (ஜனவரி 11) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நியூசிலாந்து முதலில் விளையாடியது.
மூவர் அரைசதம்
நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டெவான் கான்வே மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் களமிறங்கினர். இந்த இணை அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 117 ரன்கள் சேர்த்தது. ஹென்றி நிக்கோல்ஸ் 69 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் அடங்கும்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டெவான் கான்வே 67 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். வில் யங் மற்றும் கிளன் பிலிப்ஸ் தலா 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ஒருபுறம் டேரில் மிட்செல் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபுறம் நியூசிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்துகொண்டே இருந்தது. மிட்செல் ஹே 18 ரன்களும், கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் 16 ரன்களும் எடுத்தனர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேரில் மிட்செல் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 71 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் எடுத்தது.
இந்தியா தரப்பில் ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
இதனைத் தொடர்ந்து, 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. 49 ஓவர்களில் இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 91 பந்துகளில் 93 ரன்கள் எடுத்து அசத்தினார். இதற்கு அடுத்தபடியாக ஷுப்மன் கில் 56 ரன்களும் ஸ்ரேயாஸ் அய்யர் 49 ரன்களும் எடுத்தனர்.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.