

சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 28000 ரன்களைக் கடந்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வதோதராவில் இன்று (ஜனவரி 11) நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நியூசிலாந்து முதலில் விளையாடியது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் எடுத்தது. 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.
அதிவேகமாக 28000+ ரன்கள்
301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணி, 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ரன்களைக் கடந்துள்ளது.
ரோஹித் சர்மா 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து, கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஷுப்மன் கில் 71 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் அடங்கும்.
மறுமுனையில் அற்புதமாக விளையாடிய விராட் கோலி அரைசதம் கடந்தார். அவர் 26 ரன்கள் எடுத்திருக்கையில், சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 28000 ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
அவர் இந்த சாதனையை 624 இன்னிங்ஸ்களில் படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 28000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தன்வசம் வைத்திருந்தார். அவர் 644 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையைப் படைத்திருந்தார். தற்போது, அந்த சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.
சங்ககாரா சாதனை முறியடிப்பு
அரைசதம் கடந்த விராட் கோலி, இலங்கை அணியின் முன்னாள் வீரரான குமார் சங்ககாராவின் சாதனையை முறியடித்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்துள்ள இரண்டாவது வீரர் என்ற சங்ககாராவின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் சங்ககாரா 28,016 ரன்கள் குவித்துள்ளார். இன்றையப் போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலம், சங்ககாராவின் இந்த சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்துள்ள வீரர் என்ற அசைக்க முடியாத சாதனையை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் தன்வசம் வைத்துள்ளார். இதுவரை இந்திய அணிக்காக 664 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 34,357 ரன்கள் குவித்துள்ளார்.
இன்றையப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி, 7 ரன்களில் சதம் விளாசும் வாய்ப்பினை தவறவிட்டார். அவர் 93 ரன்களில் கைல் ஜேமிசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.