நேர்மை நாணயம் இருந்தால் மோடி தமிழக மக்களின் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட்

அரசியல் நேர்மை நாணயம் இருந்தால் தமிழ்நாட்டு மக்களின் வினாக்களுக்கு பிரதமர் மோடி விடையளிக்க வேண்டும்....
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர்  மு.வீரபாண்டியன்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்கோப்புப்படம்
Updated on
2 min read

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள தமிழ்நாட்டுக்கு வெள்ளிக்கிழமை(ஜன.23) வரும் பிரதமர் மோடி, அரசியல் நேர்மை நாணயம் இருந்தால் தமிழ்நாட்டு மக்களின் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

தேச விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து, ராணுவம் அமைய வித்திட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாளை, தேர்தல் பரப்புரைக் கூட்டத்திற்கு தேர்வு செய்திருப்பது ஏதேச்சையாக அமைந்திருக்க முடியாது.

கடந்த காலங்களில் 40-க்கும் மேற்பட்ட முறை பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு திரும்ப, திரும்ப வந்து வாய்சவடால் அடித்த போதும், மக்கள் அவரது பேச்சை நம்பவோ, ஏற்கவோ இல்லை. தமிழக வளர்ச்சிக்கும், மக்கள் நலனுக்கும் துரோகமிழைத்து வரும் நிலையில் என்ன பேச வருகிறீர்கள் என, மக்கள் வினா எழுப்புகின்றனர்.

சென்னை பெருநகர மெட்ரோ ரயில், இரண்டாம் திட்டம் உட்பட 25 வகையான திட்டங்களுக்கு ரூ 14 ஆயிரத்து 200 கோடி ஒதுக்கியதாக புழுகினீர்களே! அதன் உண்மை விபரத்தை தெரிவிப்பீர்களா? மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்து வருகிறீர்களே!

மிக் ஜாம் புயல் பேரிடர் பேரழிவை ஏற்படுத்திய போது, அதன் பாதிப்பில் இருந்து மீண்டெழுந்து நிற்க ரூ 37 ஆயிரத்து 907 கோடி நிதியை, மாநில அரசு திரும்ப, திரும்பக் கேட்ட போதும், வெறும் ரூ 276 கோடியை மட்டும் கொடுத்து வஞ்சித்து விட்டீர்களே! மேலும், தொடர்ந்து ஏற்பட்ட பெஞ்சல் புயல் பேரிடர் ஏற்படுத்திய சேதாரத்துக்கு ரூ 6 ஆயிரத்து 675 கோடி நிவாரண நிதி கேட்டதற்கு, இதுவரை வாய் திறக்காமல் வஞ்சித்து வருகிறீர்களே, அது பற்றி பேசப் போகிறீர்களா?

அவசர, அவசரமாக அறிவிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி விதித்து, தமிழ்நாட்டின் வரிவிதிப்பு வாய்ப்புகளை வெட்டிக் குறைத்ததில் ரூ 20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுத்தினீர்களே!

நிதி ஆணையம், தமிழ்நாட்டுக்கு பகிர்ந்தளிக்க பரிந்துரைத்த நிதியினையும் தமிழ்நாட்டுக்கு தராமல் ஆண்டுக்கு, ஆண்டு குறைத்து விட்டீர்களே!

தமிழ்நாடு அரசு, மத்திய அரசுக்கு செலுத்தும் வரி வருவாய் பங்கின் ஒவ்வொரு ஒரு ரூபாயிலும், 29 காசு மட்டுமே தமிழ்நாட்டுக்கு வழங்கி வரும் நிலையில், ஆனால், இதே போல் உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருந்து ஒரு ரூபாய் பெற்று கொள்ளும் ஒன்றிய அரசு, அந்த மாநிலத்திற்கு மட்டும் ரூ 2.73 காசு திருப்பி வழங்கி பாரபட்சம் காட்டப்படுகிறதே! அது பற்றி பேசுவீர்களா?

இரு மொழிக் கொள்கையை உறுதியுடன் பின்பற்றி வரும் தமிழ்நாடு அரசு, மும்மொழி திட்டத்தில் இந்தி மொழியை திணிக்க, தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் எனவும், பிஎம்ஸ்ரீ கல்வி திட்டத்தை ஏற்க மறுக்கும் தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதி ரூ 2152 கோடியை நிறுத்தி வைத்து நிர்ப்பந்தித்து வரும் பாஜகவின் மொழி வெறியை, மாநில உரிமையை பறிக்கும் அதிகார வெறியை விளக்கப் போகிறீர்களா?

நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை “வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதிலும், தோல் மற்றும் தோல் அல்லாத காலணி உற்பத்தியில் முன்னேறி வரும் தமிழ்நாட்டுக்கு வெகுவாக பாராட்டு வழங்கிய தகவலை மறுத்து, பொய்யான, அப்பட்டமான அவதூறு பரப்புரையில் ஈடுபட்டு, அரசியல் சாசன அதிகார அத்துமீறலை செய்து வரும் ஆர்.என்.ரவியை ஊக்கப்படுத்தி வருகிறீர்களே!

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழ் மொழி குறித்தும், அதன் சிறப்பு குறித்து மேடையில் உருகி வழியும் பிரதமர் அவர்களே, 2014 - 15 முதல் 2024- 25 வரையான இந்தக் காலகட்டத்தில் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ரூ 2 ஆயிரத்து 533 கோடியை அள்ளிக் கொடுத்து ஊக்கப்படுத்தும் பாஜக ஒன்றிய அரசு, அதே காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய ஐந்து மாநில மொழிகளுக்குமாக சேர்த்து ரூ 147 கோடி மட்டுமே கொடுத்துள்ளதே!

தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 33 லட்சம் ஊரகப் பகுதி தொழிலாளர்களின் சட்டபூர்வ வேலை பெறும் உரிமையை பறிக்க, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை நீக்கி விட்டு, வெற்று வெங்காய சருகான ஜி ராம்ஜி திட்டத்தை அறிவித்துள்ளீர்களே!

இப்படி, அடுக்கடுக்காக எழும் வினாக்களுக்கு அரசியல் நேர்மையும், நாணயமும் இருந்தால் பிரதமர், மதுராந்தகம் கூட்டத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. அதுவல்லாமல், “செப்பும் மொழி பதினெட்டு உடையாள், எனிற் சிந்தை ஒன்றுடையாள்“ என்ற பாரதியின் பெயரையும், வான்புகழ் கொண்ட வள்ளுவரையும் சாட்சிக்கு வைத்து தமிழ்நாட்டை மீண்டும், மீண்டும் ஏமாற்றவும், வஞ்சிக்கவும் செய்வீர்கள் எனில் தமிழ்நாட்டு மக்கள் அளிக்கும் தண்டனை கடுமையாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

Summary

If he has honesty and integrity, Modi should answer the questions of the people of Tamil Nadu says Communist Party of India

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர்  மு.வீரபாண்டியன்
அனுமதி பெறாத மாம்பழம் சின்னத்தை மேடையில் பயன்படுத்துவதா? - ராமதாஸ் கண்டனம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com