திமுக-காங்கிரஸ் உடனான கூட்டணி பேச்சுவார்த்தைகள் சுமூகமாக போய்க் கொண்டிருக்கிறது: கனிமொழி எம்.பி.

திமுக - காங்கிரஸ் இடையேயான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக போய்க் கொண்டிருக்கிறது என்று கனிமொழி தெரிவித்தது தொடர்பாக...
திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி
திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி
Updated on
2 min read

தூத்துக்குடி: திமுக - காங்கிரஸ் இடையேயான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக போய்க் கொண்டிருக்கிறது என்று திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக கூட்டணி வியூகம் குறித்து விவாதிப்பதற்காக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் திமுக எம்.பி. கனிமொழியும் தில்லியில் சந்தித்து பேசியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸுடன் நல்லுறவைப் பேணும் முயற்சியின் ஒரு பகுதியாக திமுக தரப்பில் புதன்கிழமை நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது எந்த முடிவும் எட்டப்படவில்லை.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இரு தலைவர்கள் சந்திப்பின் போது தொகுதிப் பங்கீடு குறித்து எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. கூட்டணி குறித்து பேசுவதற்காக காங்கிரஸ் தலைவரால் அமைக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துமாறு ராகுல் காந்தி, கனிமொழியிடம் கேட்டுக்கொண்டார். இதையடுத்து இரு தலைவர்களின் சந்திப்பு சுமூகமாக நடந்ததாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், திமுக - காங்கிரஸ் இடையேயான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக போய்க் கொண்டிருக்கிறது. அனைத்து பேச்சுவார்த்தைகளும் முடிந்த பிறகு, கட்சித் தலைவர் அறிவிப்பை வெளியிடுவார் என்று திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

மேலும், திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு பல்வேறு மாவட்டங்களில் மக்களைச் சந்தித்து கருத்துகளைக் கேட்டு வருகிறது. திருநெல்வேலியில் மக்கள் திரளாக வந்து மனுக்களை அளிப்பது குறித்துப் பேசிய கனிமொழி, "திமுக தேர்தல் அறிக்கை மீது மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு மனுக்களைத் தருகிறார்கள். அடுத்தது அமையப்போவது திமுக ஆட்சிதான் என்ற உறுதியான நம்பிக்கையுடன் மக்கள் தங்கள் கோரிக்கைகளை எங்களிடம் முன்வைக்கிறார்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கூடிய ஒரே இயக்கம் திமுக தான் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள் என்று தெரிவித்தார்.

புதிய கட்சிகள் கூட்டணியில் இணைவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "நிச்சயமாக புதிய கட்சிகள் வந்து இணைய வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அது குறித்து எங்களின் தலைவர், தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள்தான் இறுதி முடிவை எடுப்பார்," என்று கூறினார்.

கருத்துக் கணிப்புகள்

சமீபத்திய கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணிக்குச் சாதகமாக இருப்பது குறித்த கேள்விக்கு, "கருத்துக் கணிப்புகள் வந்தாலும் வராவிட்டாலும், தேர்தல் களம் திமுக கூட்டணிக்குச் சாதகமாக இருப்பதை எங்களால் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. மக்களின் பேராதரவு எங்களுக்கே இருக்கிறது," எனத் தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்.

ராகுல் காந்தி சந்திப்பு - காங்கிரஸ் கூட்டணி

சமீபத்தில் ராகுல் காந்தியைச் சந்தித்தது குறித்துப் பேசிய அவர், அந்தச் சந்திப்பு மிகவும் சுமுகமாக இருந்ததாகக் குறிப்பிட்டார். காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு நிலவுகிறதா என்ற கேள்விக்கு, "காங்கிரஸ் இயக்கத்தோடு திமுக பல ஆண்டுகளாகத் தடையற்ற, சுமுகமான கூட்டணியில் இருந்து வருகிறது. எங்களுக்குள் எந்தவிதமான மோதல் போக்கும் இல்லை. கூட்டணி மிகவும் பலமாக உள்ளது என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தன்மானம் மற்றும் சுயமரியாதை

சுயமரியாதை மற்றும் தன்மானம் குறித்த ஒரு கேள்விக்கு பதிலளித்த அவர், "எல்லோருக்கும் தன்மானம் என்பது முக்கியமானதுதான். சுயமரியாதை இயக்கத்தில் தன்மானம் முக்கியம் இல்லை என்று யாரும் சொல்லப்போவதில்லை," என்று சுருக்கமாகப் பதிலளித்தார்.

மாநிலத்தில் 20 ஆண்டு கால கூட்டணிக் கட்சிகளான திமுகவும் காங்கிரஸும் இந்த முறை பேரவைத் தேர்தலில் ஒருவித சங்கடமான நிலையில் உள்ளன. ஏனெனில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு, அதிக இடங்களில் போட்டி, உள்ளாட்சியில் பிரதிநிதித்துவம் என்பதில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைமை உறுதியாக இருந்து வருகிறது. ஆனால் அதற்கு திமுக தரப்பில் இசைவு அளிக்காமல் மறுக்கப்பட்டு வருகிறது.

ஜார்க்கண்ட் ஃபார்முலாவை தமிழகத்திலும் செயல்படுத்த வேண்டும் என்று பல தலைவர்கள் தெரிவித்தபோது, ​​காங்கிரஸ் தலைமை, அனைத்து முக்கிய மாநிலத் தலைவர்களின் கருத்துகளை அறிவதற்காக ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. ஒவ்வொரு தலைவரின் கருத்தையும் கேட்ட பிறகு, இறுதி முடிவை எடுக்கும் பொறுப்பு தலைமைக்கு விடப்பட்டது.

திமுகவுடனான கூட்டணி குறித்து, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் செய்தியாளர்களுடன் பேசுகையில், "நாங்கள் திமுகவின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம், ஏனெனில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடங்கவில்லை. கடந்த இரண்டு மாதங்களாக நாங்கள் அவர்களுக்காகக் காத்திருக்கிறோம். எங்கள் எதிர்க்கட்சி மிகவும் வேகமாக செயல்பட்டு வருகிறது," என்றார்.

"நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நவம்பர் மாதம் ஒரு கூட்டணிக் குழுவை அமைத்தோம். டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை முடித்து, கூட்டணியை உறுதி செய்ய வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்திருந்தோம். ஏன் தாமதம் ஏற்படுகிறது என்று தெரியவில்லை. அவர்கள் கூட்டணி பேச்சுவார்த்தைகளை விரைந்து முடிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் கூறினார்.

இந்தியத் தேர்தல் ஆணையம் தமிழகத்தில் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேதியை இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், வரும் ஏப்ரல்-மே மாதத்தில் தேர்தல் நடைபெறலாம் என்ற நிலையில் இந்த நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன.

இதற்கிடையில், 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையில், 2021 தேர்தலில் திமுக 133 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 18 இடங்களிலும், பாமக 5 இடங்களிலும், விசிக 4 இடங்களிலும், மற்றவர்கள் 8 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.

Summary

DMK MP Kanimozhi on Friday said talks between the Dravida Munnetra Kazhagam and the Indian National Congress were progressing smoothly.

திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி
பாஜகவுடன் இருப்பவர்கள் அனைவருமே ஊழல்வாதிகள்; என்டிஏ ஒரு துரோகக் கூட்டணி! - முதல்வர் பேச்சு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com