தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை லண்டனில் உள்ள நிலையில், "பயமறியாதவர்களுக்கு எல்லையே இல்லை" என்ற வாசகத்துடன் கூடிய அவரது கம்பீரமான புகைப்பட சுவரொட்டிகள் கோவை அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் பாஜக தலைமைக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ள நிலையில் பாஜகவின் மாநில மையக் குழு ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் மே 20, 21-ஆம் தேதிகளில் நடைபெற்றது.
தேசிய அமைப்பு பொதுச் செயலா் பி.எல்.சந்தோஷ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், மத்திய இணையமைச்சா் எல்.முருகன், மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக மேலிடப் பொறுப்பாளா்கள் அரவிந்த் மேனன், சுதாகா் ரெட்டி, மகளிரணி தேசியத் தலைவா் வானதி சீனிவாசன், தோ்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளா்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய பிரமுகா்களும் இதில் பங்கேற்றனா்.
இதையடுத்து தமிழக பாஜகவில் அதிரடி மாற்றங்கள் நிகழவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவையில் பரபரப்பு
இந்த முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் தற்போது உயர் கல்விக்காக லண்டனில் தங்கி இருக்கும் அண்ணாமலை நேரடியாகப் பங்கேற்க இயலவில்லை.
இந்த நிலையில், அவர் தமிழகத்தில் இல்லாத இந்தச் சூழலிலும், அவரது தீவிர ஆதரவாளர்கள் கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் அவரது கம்பீரமான புகைப்பட சுவரொட்டிகளை ஒட்டி தமிழக அரசியல் களத்தில் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத கோயம்புத்தூரில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது தான் 'நெட்டிசன்'கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அண்ணாமலை ஆதரவு போஸ்டர் யுத்தம்
கோவை நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள அண்ணாமலையின் அதிரடி ஆதரவு சுவரொட்டிகள் தற்போது ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்திலும் "பரபரப்பு செய்தியாக" மாறி பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது.
அதாவது "பயமறியாதவர்களுக்கு எல்லையே கிடையாது" (Fearless Minds Have No Limits) என்ற அதிரடியான ஆங்கில வாசகத்துடன், அண்ணாமலையின் கம்பீரமான புகைப்படமும் அந்த சுவரொட்டிகளில் இடம் பெற்றுள்ளது மக்களையும் அரசியல் பிரமுகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
மேலும், இந்த சுவரொட்டிகளின் கீழே "தீரன் அண்ணாமலை படை" (Army of Dheeran Annamalai) என்ற பெயரில் வெளியிடப்பட்டிருப்பது கோவை அரசியலில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது.
அண்ணாமலை ஊரில் இல்லாத நேரங்களிலும் அவரது ஆதரவாளர்கள் கோவை மாநகர வீதிகளில் இதுபோன்ற சுவரொட்டிகளை ஒட்டி தங்களது பலத்தைக் காட்டியிருப்பது, பாஜகவில் ஒரு புதிய அரசியல் இருப்பை உணர்த்துகிறதா..? என்ற மில்லியன் டாலர் கேள்விகளை எழுப்பியுள்ளது.
Summary
Annamalai posters spark a new storm in Coimbatore politics...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







