/

விழுப்புரம்: அதிமுக அலுவலக சாவியை பழனிசாமி தரப்பிடம் ஒப்படைத்த சி.வி. சண்முகம் தரப்பு!

விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் சி.வி. சண்முகம் தரப்பினர் ஒப்படைத்தது குறித்து...

News image

சி.வி. சண்முகம். - கோப்புப்படம்

Updated On :30 மே 2026, 12:26 pm IST

விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் சி.வி. சண்முகம் தரப்பினர் ஒப்படைத்தனர்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களில் முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் தனி அணியாக செயல்பட்டு தவெகவுக்கு ஆதரவளித்தது. இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சி.வி. சண்முகம் இடையே பிளவு ஏற்பட்டது.

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியை எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து, மீண்டும் ஒரே அணியாக இணைந்தனா்.

ஆனால், மயிலம் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் மட்டும் எடப்பாடி கே.பழனிசாமியை சந்திக்க செல்லவில்லை. இருவருக்கும் இடையே தொடா்ந்து கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.

விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலக சாவி ஒப்படைப்பு

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் சி.வி. சண்முகம் தரப்பினர் சனிக்கிழமை ஒப்படைத்தனர்.

தவெகவுக்கு ஆதரவளித்த விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சி.வி. சண்முகம் இடையே பிளவு ஏற்பட்டதை அடுத்து விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவகம் யாருக்கு என்பதில் மோதல் போக்கு இருந்து வந்ததது.

இந்த நிலையில், கே.பழனிசாமி நியமித்த புதிய மாவட்ட செயலாளர் பசுபதியிடம் சாவியை சி.வி. சண்முகம் தரப்பினர் வழங்கினர்.

எனது கடமையை முழுமையாக செய்வேன்

முன்னதாக, தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்கும் பணியை சி.வி.சண்முகம் வெள்ளிக்கிழமை தொடங்கினாா்.

ஒலக்கூா் ஒன்றியத்துக்குள்பட்ட மேல்பாக்கம், நெய்குப்பி, வடபூண்டி, கொடியம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு திறந்த வேனில் சென்ற சி.வி.சண்முகம் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

அப்போது, என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த வாக்காளா்களுக்கு வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை நம்பி சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுத்த மக்களுக்கு எனது கடமையை முழுமையாக செய்வேன். உங்களுக்காக என்றென்றும் நான் உழைப்பதற்கு கடமைப்பட்டுள்ளேன்.

உங்களுக்குத் தேவையானது எதுவென்றாலும் யோசிக்காமல் என்னிடம் கேளுங்கள். என்னால் முடிந்த, என் சக்திக்கு முடிந்த அனைத்து உதவிகளையும் கண்டிப்பாக செய்துத் தர தயாராக இருக்கிறேன். மக்களின் பிரச்னைகளுக்கு அவா்களுடன் இருந்து தேவையானதை செய்து தருவேன் என்று சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

Summary

Regarding the handover of the keys to the Villupuram District AIADMK office by C.V. Shanmugam's faction to Edappadi Palaniswami's faction...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.