நேபாளப் பெருவெள்ளம்: 85 தமிழர்களின் நிலை என்னவானது?மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!நுங்கம்பாக்கம் சாலைக்கு இயக்குநர் பாக்யராஜ் பெயர்இன்றுமுதல் அக்.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்றும் நாளையும் வரிவசூல் மையம் செயல்படும்: மாநகராட்சி அறிவிப்புதனியாா் பால் விலை மீண்டும் உயா்வு: ஆவின், தனியாா் லிட்டருக்கு ரூ.30 வரை விலை வித்தியாசம்

நியமனதாரர் (நாமினி) சட்டப்பூர்வ வாரிசு அல்லர்! அவர்களுக்கு என்ன அதிகாரம்? நீதியும் நியாயமும் - 6

நியமனதாரர் சட்டப்பூர்வ வாரிசு அல்லர், அவர்களுக்குரிய அதிகாரம் மற்றும் விருப்புறுதியின் அவசியம் பற்றி...

நியமனதாரரின் அதிகாரம்

நியமனதாரரின் அதிகாரம் - AI -Dinamani

Published On :

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான போரால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் இரண்டு நாடுகளுக்கு மட்டுமானதல்ல. உலகின் மொத்தப் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது. நாடுகளுக்கு இடையேயான இந்தப் போக்குகளை; வீடுகளுக்குள் எழும் சொத்துகளின் சிக்கல்களோடும் தனிநபர்களுக்குள் எழும் சிக்கல்களோடும் நாம் பொருத்திப் பார்க்க முடியும். வீடுகளுக்கான பொருளாதாரக் கட்டமைப்பு வலுவாகும்போதுதான் நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பும் மேம்பாடு அடைகிறது. ஒரு சிறிய புரிதலில் இவை எல்லாம் சாத்தியமே.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில், ஒருவருடைய மரணத்திற்குப் பிறகுதான் அவருடைய சொத்துகள் குறித்த விவரம் முழுமையாகத் தெரிய வருகிறது. அடுத்த தலைமுறைக்கான சொத்துரிமை மாற்றம் குறித்த புரிதலும் இந்திய மக்களிடையே மிகக் குறைவாகவே காணப்படுகிறது. இதனால், குடும்பங்களில் சிக்கல்களும் சட்டப் போராட்டங்களும் தலைதூக்குகின்றன. இது அந்தக் குடும்பத்தின் பொருளாதாரத்தை மட்டுமல்லாமல் சமுதாயத்தின் பொருளாதாரத்தையும் பாதிப்பதாக அமைந்துவிடுகிறது.

அப்படிப் புரிதல் இல்லாத குடும்பங்களில் ஒன்றுதான் நடுப்பட்டி தங்கதுரையின் குடும்பம். திருச்சியிலிருந்து திண்டுக்கல் செல்பவர்கள் நடுப்பட்டி என்ற கிராமத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். மலைகள் சூழ்ந்த அழகிய குறிஞ்சி நிலம். அந்தக் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் முன்மாதிரியாக இருந்தது தங்கதுரை குடும்பம். யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கதுரையின் மகன் கண்ணன் மாரடைப்பால் மரணம் அடைந்துவிட்டார்.

கண்ணனின் திடீர் மறைவால் மனைவி கவிதா, இரண்டு குழந்தைகள், தாய், தந்தை அனைவரும் நிலைகுலைந்து போனார்கள். தனது கடும் உழைப்பால், பொருளாதாரத்தைச் சேர்த்து அந்தக் குடும்பத்தை கௌரவமான நிலைக்குக் கொண்டு வந்திருந்தார் கண்ணன். எல்லோரும் பெருமைப்படும் அளவிற்கு வளர்ச்சி அடைந்திருந்தார். அவர் எவ்வளவு பணம் வைத்திருந்தார்; எங்கு வைத்திருந்தார் என்ற விவரம் எதுவும் குடும்பத்தினருக்குத் தெரியாது. தான் சம்பாதித்தச் சொத்துகள் குறித்து கண்ணன் எந்தவித ஆவணங்களையும் எழுதிவைக்கவில்லை. அவருடைய மரணமும் அதன் பின்னால் எழுந்த சிக்கல்களும் மொத்தக் குடும்பத்தையும் அசைத்துப் பார்த்துவிட்டது.

கணவனை இழந்த துக்கத்தில் இருந்த கவிதா, மெதுவாக மீண்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினார். கண்ணனின் வங்கிக் கணக்குகள், காப்பீட்டு பாலிசிகள் என ஒவ்வோர் ஆவணமாக எடுத்துப் பார்த்தார். வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் தொடர்பான எல்லா ஆவணங்களிலும் திருமணம் ஆகிச் சென்ற தனது சகோதரி முத்துலெட்சுமியை நியமனதாரராக (nominee) நியமித்திருந்தார் கண்ணன். மனைவியின் பெயரை நியமனதாரராகக் குறிப்பிட்டுப் பதிவு செய்தால் தாய் வருத்தப்படுவார்; தாயின் பெயரை நியமனதாரராகக் குறிப்பிட்டால் மனைவி வருத்தப்படுவார் என்ற எண்ணத்தில் சகோதரியை நியமனதாரராக நியமித்திருந்தார். நியமனதாரராக (nominee), தான் நியமிக்கப்பட்டிருப்பதை அறிந்த முத்துலெட்சுமி கண்ணனின் சொத்துகளுக்கு உரிமை கோரினார். நியமனதாரருக்கு சட்டப்பூர்வமாக என்ன அதிகாரம் என்பதை முத்துலெட்சுமி அறிந்திருக்கவில்லை. விளைவு, இரண்டு குடும்பங்களுக்கு இடையேயான சிக்கலாக மாறியது. வேறு வழியின்றி, மரபுரிமைச் சான்று (Succession certificate) கோரி கவிதா நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.

இந்து வாரிசு உரிமைச் சட்டப்படி மனைவி, குழந்தைகள், தாய் ஆகியோர் கண்ணனின் சொத்துகளுக்கு வாரிசுகள் ஆவார்கள். நியமனதாரராக (nominee) நியமிக்கப்பட்டவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பதை கண்ணனின் சகோதரி புரிந்து கொள்ளாததன் விளைவு கண்ணன் சேமித்து வைத்த பொருளாதாரத்தை முடக்கியது. கணவனை இழந்த கவிதா ஒரே நேரத்தில் அச்சத்தையும் பாதுகாப்பற்ற சூழலையும் எதிர்கொண்டார். வழக்கு நீண்டுகொண்டே சென்றது. குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்பட்டது. குடும்பத்தின் பொருளாதாரம் தடுமாறியது. அந்தக் குடும்பத்தின் மீதான மதிப்பும் மரியாதையும் அந்தக் கிராம மக்களின் கழிவிறக்கமாக மாறிப்போனது. ‘இந்து வாரிசு உரிமைச் சட்டப்படி, மறைந்த கண்ணனின் சொத்துகளுக்கு அவருடைய சட்டப்பூர்வமான வாரிசுகள்தான் உரிமை கோர முடியும். நியமனதாரர் உரிமை கோர இயலாது’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தச் சிக்கல் கண்ணனின் குடும்பத்தினருக்கு மட்டுமானதல்ல. பெரும்பாலான இந்தியக் குடும்பங்களிலும் இந்தச் சிக்கல்கள்தான் நீடிக்கிறது. சட்டத்தைப் புரிந்து கொள்வதில் நபர்களுக்கு இடையே ஏற்படும் சிக்கல்கள் அந்தக் குடும்பத்தையும் சமுதாயத்தையும் சேர்த்தே பாதிக்கின்றன.

வேகமாக வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதார கட்டுமானத்தில், அடுத்த தலைமுறைக்கான சொத்துரிமை மாற்றம் என்பது எளிமையானதாக இருக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் அவ்வாறு இல்லை என்பதுதான் உண்மை. அம்பானி, அதானி முதல் கடைக்கோடி கிராமத்தில் வாழும் மனிதன் வரை சொத்துரிமை மாற்றங்கள் எளிமையாக நடைபெறுவதில்லை. சச்சரவுகள் மூலமாகவோ அல்லது நீண்ட சட்டப் போராட்டங்கள் வாயிலாகவோதான் பெரும்பாலான சொத்துரிமை மாற்றங்கள் நடைபெறுகின்றன. இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் மரபுரிமை (inheritance law) தொடர்பான சட்டங்களைப் புரிந்துகொள்வதன் வாயிலாக சொத்துரிமை மாற்றங்களை எளிதாக்கிக் கொள்ள முடியும். குடும்பங்களில் ஏற்படும் பொருளாதாரத் தேக்கத்தை தடுக்க முடியும். குடும்பப் பொருளாதாரமும் நாட்டின் பொருளாதாரமும் ஒரே நேரத்தில் மேம்பாடு அடையும்.

நியமனதாரர் என்பவர் யார்? (Who is a nominee?)

ஒருவருடைய வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் அல்லது முதலீடு யாருக்குச் சென்றடையும் என்றால் நியமனதாரருக்குச் (nominee) சென்று சேரும் என்றுதான் பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். ஆனால், சட்டம் அப்படிச் சொல்வதில்லை. நியமனதாரர் (nominee) என்பவர் குறிப்பிட்ட அமைப்பு அல்லது நிறுவனத்திடம் இருந்து அந்தச் சொத்தை பெற்றுக் கொள்வதற்கான அதிகாரம் படைத்தவர். அவ்வளவே. அதன் உண்மையான உரிமையாளர் என்பவர் வாரிசுகளாகவோ அல்லது அந்தச் சொத்தைப் பொருத்து எழுதி வைக்கப்பட்ட உயிலில் குறிப்பிடப்படும் நபர்களாகவோ இருப்பார்கள்.

வங்கிக் கணக்கு, மியூச்சுவல் பண்ட், காப்பீட்டு பாலிசி போன்றவற்றில் ஒருவர் முதலீடு செய்யும்போது நியமனதாரர் என்று ஒருவரை நியமிக்க வேண்டும். அது கட்டாயம். அதன் உரிமையாளர் இறக்க நேரிடும்போது, அந்தச் சொத்தைப் பெற்றுக்கொள்ளும் அதிகாரம் மட்டுமே நியமனதாரருக்கு உண்டு. ஒருவருடைய இறப்பிற்குப் பின்னால் சொத்தை யாரிடம் கொடுப்பது என்பதில் நிதி நிறுவனங்களுக்கு எழும் சந்தேகத்தையும் தாமதத்தையும் தவிர்ப்பதற்கான ஓர் ஏற்பாடுதான் நியமனதாரர். வங்கிகளும் நிதி நிறுவனங்களும் நிர்வாக வசதிக்காகவே நியமனதாரரை நியமிக்கக் கோருகின்றனர். நியமனதாரருக்கான நடைமுறை அந்தப் பணத்திற்கான உண்மையான உரிமையாளரை முடிவு செய்யாது. இறந்துபோனவரின் சட்டப்பூர்வமான வாரிசுகளுக்காக (Legal heirs) அல்லது இறந்துபோனவரின் விருப்புரிமை (Will) பெற்ற நபருக்காக அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் நபராக மட்டுமே நியமனதாரர் இருப்பார். உரியவர்களிடம் பணத்தைக் கொடுக்கத் தவறினால் நியமனதாரர் தண்டணைக்குரியவராகிறார்.

சட்டப்பூர்வ வாரிசு என்பவர் யார்? (Who is a legal heir?)

சட்டப்பூர்வ வாரிசு என்பது, உங்கள் மறைவுக்குப் பிறகு உங்கள் சொத்துகளைச் சட்டப்படி உரிமையாக்கிக்கொள்ளும் நபர் அல்லது நபர்களைக் குறிக்கும். யார் சட்டப்பூர்வ வாரிசாக இருப்பார்கள் என்பது, உங்களிடம் உயில் உள்ளதா என்பதைப் பொருத்தே அமையும். நீங்கள் உயில் எழுதியிருந்தால், அதில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் உங்கள் சொத்துகளைப் பெறுவார்கள். நீங்கள் உயில் எழுதவில்லை என்றால், உங்கள் சொத்துகளை யார் அடைவது என்பதைச் சட்டமே தீர்மானிக்கிறது.

இந்தியாவில், 1956-ஆம் ஆண்டின் இந்து வாரிசுரிமைச் சட்டத்தின்படி (Hindu Succession Act, 1956) இந்துக்கள், சமணர்கள், பௌத்தர்கள் மற்றும் சீக்கியர்கள் மரபு வழியாகச் சொத்துரிமை பெறுகிறார்கள். இதில் வீரசைவர், லிங்காயத் அல்லது பிரம்ம சமாஜம் அல்லது ஆர்ய சமாஜத்தைப் பின்பற்றுபவர்களும் அடங்குவார்கள்.

1925-ஆம் ஆண்டின் இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின்படி (Indian Succession Act, 1925), கிறிஸ்துவர்கள் மற்றும் பார்சிகள், மறைமுகமாக யூதர்கள் மற்றும் இந்து அல்லது இஸ்லாமிய தனிநபர் சட்டங்களின் வரம்பிற்குள் வராத பிறரும் மரபு வழியாகச் சொத்துரிமை பெறுகிறார்கள்.

இந்தியாவில் முஸ்லிம்களின் வாரிசுரிமை மற்றும் சொத்துரிமை விவகாரங்கள் முஸ்லிம் தனிநபர் சட்டத்தால் (Muslim Personal Law (Shariat) Application Act, 1937) நிர்வகிக்கப்படுகின்றன. மேற்கண்ட சட்ட நடவடிக்கைகளின்படி வாழ்க்கைத் துணை, குழந்தைகள் மற்றும் தாய் ஆகியோர் வாரிசு உரிமையில் முன்னுரிமை பெறுகின்றனர்.

எளிமையாகச் சொன்னால், நியமனதாரர் (nominee) பணத்தைப் பெற்றுக்கொள்கிறார்; ஆனால் சட்டப்பூர்வ வாரிசுதான் அப்பணத்தின் உண்மையான உரிமையாளர் ஆவார்கள். எனவே, நியமனதாரரும் சட்டப்பூர்வ வாரிசும் வெவ்வேறு நபர்களாக இருந்தால், நியமனதாரர் அந்தச் சொத்தை உரிய சட்டப்பூர்வ வாரிசுகளிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும், நீங்கள் உயில் எழுதியிருந்தால், நியமனதாரரைவிட அந்த உயிலுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். உயிலில் குறிப்பிடப்பட்டுள்ள நபரே அச்சொத்தின் இறுதிச் சட்டப்பூர்வ உரிமையாளர் ஆவார்.

நடைமுறையில் சில வங்கிகள் எதிர்காலச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து ஆட்சேபனையில்லை என்று சான்று அல்லது ஈட்டுறுதிப் பத்திரம் எழுதி வாங்கிக் கொண்டு பணத்தை விடுவிக்கிறார்கள். இந்த நடைமுறைகளிலும் சிக்கல்கள் எழுந்தால் நீதிமன்றத்தின் மூலம் மரபுரிமைச் சான்று பெற்றுத் தருமாறு கூறி பணத்தை நிறுத்தி வைத்துவிடுகிறார்கள்.

நடைமுறைகளில் எழும் சிக்கல்களைத் தவிர்க்கும் பொருட்டு 1984-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் சர்பாதி தேவி /எதிர்/ உசா தேவி (Sarbati Devi Vs Usha Devi) என்ற வழக்கில் காப்பீட்டுப் பாலிசியில் நியமனதாராக நியமிக்கப்பட்டவர் சட்டப்பூர்வ வாரிசுகளின் அறங்காவலர்கள் மட்டுமே, அவர் ஒருபோதும் உரிமையாளர் ஆக மாட்டார் என்று தெளிவுபடுத்தியது (A nominee under an insurance policy is only a trustee for the legal heirs, not the final owner of the money). சட்டம் தெளிவாக வரையறை செய்துள்ளபோதிலும், மக்களிடையே தெளிவு பிறக்கவில்லை, நியமனதாரர்களுக்கும் வாரிசுகளுக்கும் இடையேயான சச்சரவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

நியமனதாரருக்கும் சட்டப்பூர்வமான வாரிசுகளுக்கும் சிக்கல்கள் தொடர் கதையானதால், 2023-ஆம் ஆண்டு மாண்புமிகு உச்ச நீதிமன்றம், சக்தி எஸ்டானி /எதிர்/ ஜெயானந்த் சல்கோன்கர் (Shakti Yezdani Vs Jayanand Salgaonkar) என்ற வழக்கில் நியமனதாரரின் உரிமையைத் தெளிவுபடுத்தி உள்ளது. வாரிசுரிமைச் சட்டம் அல்லது உயில் ஆகியவற்றை மீறாத வகையில், ஒரு நபர் இறந்தவுடன் அவருடைய நியமனதாரர், வங்கி, காப்பீடு, நிதி நிறுவனங்கள் போன்றவற்றில் இருந்து எளிமையாகச் சொத்தைப் பெறுகின்ற நபர் ஆவார் என்று கூறியிருக்கிறது. இருந்தபோதிலும் இந்தியாவின் பெரும்பாலான குடும்பங்களில் நியமனதாரருக்குத்தான் முழு அதிகாரம் இருப்பதாகக் கருதிக்கொண்டு மிகப் பெரும் பொருள் செலவில் சட்டப்போராட்டங்களை நீதிமன்றத்தில் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். நமது சமூக அமைப்பின் பொதுப் புத்தியில் ஏற்பட்டுள்ள புரிதல் குறைபாடு இது.

நியமனதாரர் தொடர்பான புரிதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கிறது. ஏனெனில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வங்கிக் கணக்குகள், டீமேட் கணக்குகள், பரஸ்பர நிதிகள் மற்றும் காப்பீட்டுத் திட்டங்களில் தங்களை இணைத்துக்கொள்ளுகின்றார்கள். இவை அனைத்தும் மின்னணுப் பரிமாற்றங்களாகவும் இருக்கின்றன. அனைவரும் தங்களுடைய கணக்குகளில் நியமனதாரரைக் குறிப்பிட்டு நியமிக்கின்றார்கள். நியமனதாரரே போதுமானது என்று பலரும் நம்புகிறார்கள். அது போதுமானதல்ல. தற்போதுள்ள நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்க்க வேண்டும் என்றால், சொத்தின் உரிமையாளர் தனக்குப் பின்னர் அந்தச் சொத்து யாருக்குச் சேர வேண்டும் என்பது குறித்து ஒரு விருப்புறுதி (Will) ஆவணத்தை எழுதி வைக்க வேண்டும். உண்மையில் மிகச் சிலரே ஒரு முறையான விருப்புறுதி (Will) ஆவணத்தை உருவாக்குகிறார்கள்.

உங்கள் மரணத்திற்குப் பிறகு உங்கள் சொத்துகள் உண்மையில் எவ்வாறு கைமாறும் என்பதையும், உங்கள் நியமனங்களும் விருப்புறுதி ஆவணமும் சரியாகப் பொருந்துகின்றனவா என்பதையும், உங்கள் சட்டப்பூர்வ வாரிசுகள் யார் என்பதையும், புரிந்துகொள்வதற்கும் அது தொடர்பாக வழிகாட்டுவதற்கும் ஏராளமான நிதி ஆலோசனை அமைப்புகள் செயல்படுகின்றன. அவை சட்டப்படியான அமைப்புகள்தானா என்பதைக் கண்டறிந்து ஆலோசனை பெற வேண்டும். இத்தகைய ஆலோசனைகள் குடும்ப உறுப்பினர்கள் சொத்துக்காகச் சண்டையிடும் சூழ்நிலைகளைத் தவிர்க்க உதவும்.

திட்டமிட்டுச் செயல்பட்டால் வாழும்போதும் வாழ்க்கைக்குப் பின்னரும் நம்முடைய மரபுரிமை சார்ந்தவர்களுக்கு நல்வழி காட்ட முடியும். வங்கிக் கணக்குகள், பரஸ்பர நிதிகள், காப்பீட்டு பாலிசி, பி.எஃப். கணக்குகள், டீமேட் கணக்குகள் ஆகியவற்றில் சரியான நபரைத்தான் நியமனதாரராக நியமித்துள்ளோமா? என்று பார்க்க வேண்டும். நியமனதாரரை நியமிப்பதைவிட முக்கியமானது விருப்புறுதி ஆவணம் எழுதுவது; தனக்குப் பிறகு தன்னுடைய சொத்துகள் யாருக்குச் சேர வேண்டும் என்பதை விருப்புறுதி ஆவணத்தில் (விருப்புறுதி (Will) ஆவணம் - உயில் பற்றிய சட்ட நுட்பங்களைப் பின்னர் தனியொரு கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்) தெளிவாக எழுதி வைத்துவிட வேண்டும். இது பெரும்பாலான சட்டப் போராட்டங்களைத் தவிர்த்துவிடும்.

பெற்றோர்கள் சேர்த்த சேமிப்புகளை புதிய தலைமுறையினர் செயலிகள் (App) மற்றும் இணையவழித் திரைகள் (Online Dashboards) வாயிலாக நிர்வகிக்கப் பழகுகிறார்கள் என்பது வரவேற்கத்தக்கது. ஆனால், அதில் உள்ள தொழில் நுட்பங்களையும் சட்ட நுட்பங்களையும் புரிந்து கொண்டு முறையாகக் கையாள்வது முக்கியமானது.

சொத்துகள் குறித்த திட்டமிடலும் புரிதலும் வசதி படைத்த குடும்பங்களுக்கு மட்டுமே உரியது அல்ல. அது அனைவருக்கும் பொதுவான ஏற்பாடு. தெளிவான ஏற்பாடுகள் இல்லாதபட்சத்தில், ஒரு சாதாரண வங்கிக் கணக்கு, காப்பீட்டுத் திட்டம் அல்லது வீடு கூட சர்ச்சைக்குரியதாக மாறக் கூடும்.

நீதிக்கான குரல் ஒலிக்கும்...

நியாயத்திற்கான பயணம் தொடரும்...

கட்டுரையாளர் : வழக்குரைஞர், சமூக செயற்பாட்டாளர்

Tamilmani Arumugam, Advocate.

advocatetamilmani@gmail.com

Summary

Regarding the nominee not being the legal heir, and the necessity of the authority and will pertaining to them...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.