

மாத வருவாயை நம்பி மட்டும் வாழ்க்கை நடத்தும் தனிநபர்கள் பலரும், சேமிப்பு, முதலீடு, காப்பீடு போன்றவற்றை பற்றி அறியாமல், வரும் வருவாயை செலவழித்துக் கொண்டு அதன்போக்கில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
ஆனால், பொருளாதார வல்லுநர்களோ, மாத வருவாய் இருப்பவர்கள் பல்வேறு உக்திகளைக் கையாண்டு, அவர்களது நிதிநிலையை சீராக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகிறார்கள்.
எதிர்பாராத செலவுகள், துயரங்களை எதிர்கொள்ள எப்போதும் பொருளாதார ரீதியில் தயாராக இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களது ஆலோசனை.
அவர்கள் சொல்வது என்னவென்றால், அவசர நிதி என்ற ஒன்றை நிச்சயம் சாதாரண எளிய குடும்பத்தினர் சேமித்து வைக்க வேண்டும். அதாவது, ஒரு குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகளை 3 அல்லது 6 மாதங்கள் வரை செலவிடத் தேவையான குறைந்தபட்ச தொகை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
செலவிடும் தொகையை கட்டாயமாக 20 / 30 / 50 என்ற விகிதத்தில்தான் மேற்கொள்ள வேண்டும். அதாவது, முதல் செலவு 20 சதவீதம் அல்லது குறைந்தபட்சம் 10 சதவிகிதமாவது சேமிப்பில் வைக்க வேண்டும். 30 சதவிகிதம் தேவைக்கான செலவாக இருக்க வேண்டும். 50 சதவிகிதம் அத்தியாவசிய செலவுகளுக்கானதாக இருக்க வேண்டும்.
வரி செலுத்துபவராக இருந்தால், வரியைக் குறைக்கும் குறைந்தபட்ச முதலீடுகளில் முதலீடு செய்ய வேண்டும்.
ஆண்டுதோறும் வருவாய் உயர்வு மற்றும் செலவிடும் முறைகளை தனி நபர்களே தணிக்கை செய்து, எங்கு அதிகம் செலவிட்டோம், எதனை தவிர்த்திருக்கலாம் என்பதை எழுதி, அதனை திருத்த வேண்டும்.
குறைந்தபட்சம் ஒரு குறைந்த தொகையாவது கூடுதல் வருவாயாக இருக்க வழிவகை செய்ய வேண்டும். முதலீடு, சேமிப்பு, சிறு வணிகம் என எதுவாகவும் இருக்கலாம்.
மருத்துவக் காப்பீடு கட்டாயம் சிறு குடும்பங்களுக்கு இருக்க வேண்டும். ஆண்டுதோறும் ஒரு தொகையை செலுத்தி, குடும்பத்தின் மருத்துவப் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுங்கள்.
மாத ஓய்வூதியம் பெறுவதற்கான பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அவற்றில் ஏதேனும் ஒன்றை தவறாமல் கடைப்பிடிக்கலாம்.
பொருளாதார நிபுணர்கள் சொல்லும் இந்த குறைந்தபட்ச விதிகளில் பெரும்பான்மையானதை மக்கள் பின்பற்றினால், சாலச் சிறந்தது. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதே இவர்களது அறிவுரை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.