Enable Javscript for better performance
Have you remember kodikai pazham (botanical name - pithecellobium dulc|கொடிக்காய் பழம் ஞாபகமிருக்கா?- Dinamani

சுடச்சுட

  

  ஜங்கிள் ஜிலேபி... கொடுக்கா புளி ஞாபகமிருக்கா?

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 20th June 2018 07:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kodikai_pazam

   

  நன்றாக ஞாபகமிருக்கிறது. ஆனால், ருசி பார்த்துத் தான் பல ஆண்டுகளாகி விட்டது. எங்கள் ஊரில் ஒரே ஒரு கொடுக்காய்ப் புளி மரம் தான் உண்டு. அதில் விளைந்து தான் நாங்கள் கொடுக்காய் பழம் சாப்பிட்டாக வேண்டுமெனில், நாங்கள் ஜென்மத்துக்கும் கொடுக்காய் சாப்பிட்டிருக்கவே இயலாது. ஆனால், அப்போதெல்லாம் எங்கெங்கேயோ இருந்தெல்லாம் கூடை, கூடையாகக் கொடுக்காய் பறிந்து வந்து பள்ளிக்கூட வாசல்கள் தோறும் கூறு கட்டி விற்பார்கள். ஒரு கூறு விலை 25 பைசாக்கள். அப்படிச் சாப்பிட்டுப் பழகியது. பள்ளிக்கூட நாட்களைப் போலவே கொடுக்காய்ப் பழ ஞாபகங்களும் கூட அப்படியே ஏதோ ஒரு யுகம் போலும் கடந்து கரைந்து போய்விட்டன. இன்று மகளை பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்துப் போய் விட்டுவிட்டு மீண்டும் அலுவலகம் வருகையில் வழியில் ஒரு மனிதர் மஞ்சள் பை நிறைய சிவந்த கொடுக்காய் பழங்களைத் திணித்து எடுத்துச் செல்வதைக் கண்டேன்.

  பிஞ்சு கொடிக்காய்
  கொடுக்காய்ப் பிஞ்சு...

  இந்தக் கொடுக்காய் பழத்தைச் சுற்றித்தான் எத்தனை, எத்தனை ஞாபகங்கள். அதில் சுவாரஸ்யமான ஒன்று... கொடுக்காய் பழத்தை தின்று விட்டு உள்ளே கறுப்பாக இருக்கும் அதன் விதையின் மேல்தோலை உறிப்போம். உள்ளே முதலில் மெல்லிய பிரெளன் நிறத்தோல் வரும் அதற்கும் அப்பால் வெள்ளை நிற விதை இருக்கும். இந்த வெள்ளை தெரியாமல் பிரெளன் நிறம் மட்டுமே தெரியுமாறு தோலை உறித்து அதை ஜன்னல் திட்டிலோ அல்லது நிலைக்கதவின் மேலிருக்கும் திட்டிலோ வைக்க வேண்டும். எத்தனை விதைகளை இப்படி வைக்கிறோமோ அத்தனை சொந்தக்காரர்கள் கூடிய விரைவில் நம் வீட்டுக்கு வருவார்கள் என்று குழந்தைகளுக்கிடையே ஒரு நம்பிக்கை.

  கொடுக்காயினுள்ளிருக்கும் கருநிற விதை...

  குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதையாக இந்த நம்பிக்கை சில சமயங்களில் எங்களுக்கு நிறைவேறவும் செய்திருக்கிறது. இதில் ஒரே ஒரு கண்டிஷன் உண்டு. அது, கொடிக்காய் விதையை உறிக்கும் போது விதையின் உள்ளிருக்கும் வெள்ளை நிறம் தென்பட்டு விடக்கூடாது. அப்படி வெள்ளை வந்து விட்டால் பிறகு சொந்தக்காரர்கள் வரமாட்டார்கள். இப்படியெல்லாம் நம்பிக்கொண்டு கிலோக் கணக்கில் கொடுக்காய் விதைகளை உறித்து ஜன்னல் திட்டில் வைத்துக் கொண்டு திரிந்திருக்கிறோம் அந்த நாட்களில். இப்போது நினைத்துப் பார்த்தால் சிரிப்பாகக் கூட இருக்கிறது.

  கொடுக்காய் பழ சீசன்...

  மாம்பழம் போலவே கொடுக்காய் பழத்துக்கும் சீசன் உண்டு. ஃபிப்ரவரி முதல் ஜூன் மாதம் வரை தேனி, திண்டுக்கல், மதுரை, கம்பம், போடி வட்டாரங்களில் கொடுக்காய் பழம் விளையும்.

  இந்த கொடுக்காய்ப் பழங்களை முன்பெல்லாம் எவ்வித மருத்துவ நோக்கமும் இன்றி சும்மா கிடைக்கிறதே என்று ஆசைக்கு உண்ட காலமிருந்தது. ஆனால், இப்போது உண்பவர்கள் அதன் மருத்துவ பலன்களை அறிந்து வைத்துக் கொண்டு சாப்பிடத் தொடங்கி இருக்கிறார்கள். இது ஆறுதலான விஷயம். நாவல் பழங்களை நீரழிவு நோய்க்கு மருந்து என பலர் உண்ணத்தொடங்கி இருக்கிறார்கள். சென்னையில் கூட வீதிக்கு வீதி நாவல் பழம் விற்பவர்களைக் காண முடிகிறது. கிராமங்களில் நாவல் மரங்களையும், கொடுக்காய் மரங்களையும் வயல் வரப்புகளில் வேலிகளைப் போல வளர்ப்பார்கள். இந்த மரங்களை வளர்ப்பதில் வியாபார நோக்கம் அவர்களுக்கு இருந்ததில்லை. 

  கொடுக்காய் மரத்தின் கிளைகளில் முட்கள் நிறைந்திருக்கும் எனவே அதை ஒரு இயற்கை அரண் எனக் கருதி கிராமங்களில் வேலியாக வளர்ப்பது வழக்கம். ஆனால், அதிக மரங்கள் இல்லாததால் இதற்கு நிலவும் தட்டுப்பாட்டின் காரணமாக கொடுக்காய் பழம் கிலோ 200 ரூபாய்க்கும் மேலாக இப்போது விற்கப்படுகிறது. இனிமேல் அப்படியின்றி கொடுக்காய் பழ மரத்தையும் வியாபார நோக்கத்தின் பேரில் நிறைய வளர்க்கத் தொடங்கினார்கள் எனில் அதன் மூலம் லாபம் கிடைப்பதோடு அதனாலான மருத்துவப் பலன்களும் பலருக்கும் பரவலாகக் கிடைக்கத் தொடங்கும்.

  கொடுக்காப்புளியின் வேறு பெயர்கள்...

  கொடுக்காய் புளிக்கு கோணப்புளியங்கா, சீனிப் புளியங்கா, கொறுக்கா புளி, என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்தியில் இதன் பெயர் ஜங்கிள் ஜிலேபி.

  கொடுக்காயின் மருத்துவ குணங்கள்...

  மருத்துவக் குணம் வாய்ந்த கொடுக்காய் தற்போது மிகவும் அரிதாகி வரும் நிலையில், கிலோ ரூ.200 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொடுக்காயை பொறுத்தவரை மரத்திலே பழுத்து காய்த்திருக்கும் நிலையில் மழை, காற்று அதிகம் அடித்தாலும், கீழே விழாமல் தொங்கி கொண்டிருக்கும். இதனால் இந்த மரத்தினை 'உதிரா மரம்' என்றும் பெயருண்டு. கொடுக்காய் சாப்பிடுவதன் மூலம் சிறுவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது, அதோடு கொடுக்காய் நீர்க்கடுப்பு, ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்த கூடிய மருத்துவக் குணம் வாய்ந்தது என மருத்துவர்கள் கூறுகின்றனர். அவை தவிர...

  • வாத நோய் மற்றும் மூட்டுவலி தீர மருந்தாகிறது.
  • நெடுநாள் ஆரோக்யம் குன்றி சிகிச்சையில் இருந்து தேறியவர்களுக்கு உடல் சூட்டினால் ஏற்படும் வயிற்றைப் போக்கைத் தவிர்க்கும் சக்தியும் கொடுக்காய் புளிக்கு உண்டு.
  • ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.
  • பெண்களின் கருப்பை நோய்கள் மற்றும் உள்ளுறுப்பு புண்களை ஆற்றும் திறனும் உண்டு.
  • உடல் எடை குறைப்பிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
  • கொடுக்காய் புளி விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்யில் இருந்து குளியல் சோப்புகள் தயாரிக்கப்படுகிறது.
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai