அபார சுவை கொண்டது ‘வெடி தேங்காய்’ அதை வீட்டில் தயார் செய்வது எப்படி?

அன்றொரு காலத்தில் நாமெல்லோரும் உளுந்துக் களி, புட்டு, பணியாரம், பால் கொலுக்கட்டை, இடியாப்பம், என பாரம்பரியமான கிராமத்து ஸ்னாக்ஸ் வகைகளை உண்டு களித்தவர்களே என்பதை எப்போதும் மறந்திடக் கூடாதில்லையா? 
அபார சுவை கொண்டது ‘வெடி தேங்காய்’ அதை வீட்டில் தயார் செய்வது எப்படி?

வாழ்வில் ஒருமுறையாவது வெடி தேங்காய் சாப்பிட்டிருக்கிறீர்களா? இதுவரை  இல்லாவிட்டாலும்  இனி அப்படியொரு ஆசையிருந்தால் மெனக்கெட்டு நமது சொந்த கிராமங்களுக்குச் சென்று அங்கே தோப்புகளில் நெருப்பு மூட்டம் போட்டு அதில் தேங்காயைச் சுட்டுத் தான் வெடி தேங்காய் சாப்பிட்டாக வேண்டுமென்பதில்லை. நகரங்களில் கேஸ் அடுப்புகளிலும் கூட வெடி தேங்காய் தயாரித்து சுவையாக சாப்பிடலாம். இன்று நகரங்களில் கேக் ஷாப்புகள், பேக்கரிகள், இனிப்பகங்கள், எல்லாம் பெருகி இங்கிருக்கும் ஒவ்வொரு மனிதனும் எதை உண்பதென அவை தீர்மானிக்கும் நிலை வரினும் அன்றொரு காலத்தில் நாமெல்லோரும் உளுந்துக் களி, புட்டு, பணியாரம், பால் கொலுக்கட்டை, இடியாப்பம், என பாரம்பரியமான கிராமத்து ஸ்னாக்ஸ் வகைகளை உண்டு களித்தவர்களே என்பதை எப்போதும் மறந்திடக் கூடாதில்லையா? 

தேவையான பொருட்கள்

  • தேங்காய் - 1 (முற்றலாகவோ, இளநீர்க்காயாகவோ இருக்கக் கூடாது)
  • வெள்ளை எள் - 2 டீஸ்பூன்
  • பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
  • பயத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
  • வெல்லம் - அரை அச்சு (நைஸாக பொடி செய்து கொள்ளவும்)

செய்முறை: 

தேங்காயில் நார் உறித்து மேலிருக்கும் சொரசொரப்பான பாகத்தை துருவியால் அகற்றி அதன் மேல்புறத்தில் இருக்கும் முக்கண் போன்ற பகுதியில் துளையிட்டு தேங்காயிலிருக்கும் நீரை முற்றிலுமாக வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு நீண்ட மரக்குச்சியை எடுத்து நுனிப்பகுதியை நன்கு செதுக்கி தேங்காயிலிட்ட துளையை அடைக்கும் விதத்தில் கூர்மையாகச் சீவிக் கொள்ளவும்.  இப்போது மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களில் வெல்லம் நீங்கலாக மீதமுள்ளவற்றை மிதமான சூட்டில் வாணலியில் வறுத்து ஆற வைத்து கொரகொரப்பாக அரைத்துக் கொண்டு வெல்லத்தை நசுக்கிக் கொள்ளவும். பிறகு வெல்லம் கலந்த அந்தக் கலவையை தேங்காயின் மேற்புறத்தில் இட்ட துளையின் வழியாக தேங்காயினுள் சேர்க்கவும். தேங்காயின் உட்புறம் முழுவதுமாக நிறைந்தவுடன் அதைக் கெட்டித்து முன்னதாக சீவி வைத்த குச்சியினுள் நுழைத்து இறுக்கமாகத் தள்ளவும்.

இப்போதும் தேங்காயின் கண் பகுதிக்கும், குச்சிக்கும் இடையே சிறு இடைவெளி தெரிந்தால் அதன் மீது கோதுமை மாவு உருண்டை கொண்டு சீல் செய்யவும். இப்போது தேங்காய் சுடுவதற்கு தயார். அடுப்பை ஏற்றி மிதமான நெருப்பில் குச்சியில் மாட்டிய தேங்காயை உருட்டி, உருட்டி சூடாக்கவும். தேங்காயும் சேர்ந்து எரியக் கூடும். அதற்காகத் தான் குச்சியை உருட்டி, உருட்டி காண்பிப்பது. தீயில் தேங்காயின் மேலோடு கருகிக் கொண்டே வரும். அதனால் பரவாயில்லை. அதை உடைத்துக் கீழே தான் வீசப்போகிறோம். எனவே மீண்டும் தேங்காயை நெருப்பில் சுட்டுக் கொண்டே இருக்கவும். எதுவரை என்றால், உள்ளே அடைத்துள்ள பொருட்களில் எள் இருக்கிறதே... அந்த எள் வெடிக்கும் சத்தம் மிதமாக வெளியில் நமக்குக் கேட்கத் தொடங்கும் வரை தேங்காயை சுடவும். பிறகு எடுத்து 30 நிமிடங்கள் சுட்ட தேங்காயை ஆற வைக்கவும். இப்போது தேங்காயின் மேலோட்டை உடைத்து நீக்கி விட்டு உள்ளிருக்கும் தேங்காய்ப்பூவை கத்தியால் துண்டுகளாக்கி சாப்பிடலாம். 

இந்தச் சுவைக்கு எந்த இனிப்பையும் ஈடு இணையாக்கவே முடியாது. அது ஓர் அபார ருசியுடனிருக்கும்.

பொதுவாக வெடிதேங்காய் வீட்டில் செய்தால் இப்படித்தான் செய்ய முடியும். இதையே தோப்புகளிலோ அல்லது வீட்டுக்கு வெளியே காலி இடங்களிலோ செய்தால் நெருப்பை இன்னும் அதிகப்படுத்தி தேங்காயை நன்கு சுடலாம். நெருப்பு அதிகரிக்கும் போது உள்ளிருக்கும் கலவையில் வெல்லம் கரைந்து வழித்து பருப்பு வெந்து அது சாப்பிட மேலும் சுவையாக இருக்கும்.

வெடி தேங்காயின் நியூரிஷனல் பெனிஃபிட்ஸ்:

தேங்காய் மிகச்சிறந்த நார்ச்சத்து மிக்க உணவு. அதோடு இதில் எள், வெல்லம், பொட்டுக்கடலை, பயத்தம் பருப்பெல்லாம் வேறு சேர்க்கிறோமில்லையா? அவையெல்லாமும் மிகச்சிறந்த புரதச் சத்து கொண்ட உணவுப் பொருட்கள். நாட்டு வெல்லத்தில் இருக்கும் இரும்புச் சத்தும் இன்ன பிற மினரல்களும் உடலும், உள்ளமும் உற்சாகமாக இயங்கத் தேவையான சக்தியை வழங்கக் கூடியவை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com