தலைவர்களின் டின்னர் மெனு கார்டில் இருந்து ஒரு ரெசிப்பி!

இனிப்பும், புளிப்பும், துவர்ப்பும், காரமுமாக குழம்பு வாசம் மூக்கைத் துளைக்கும். மேலாக பொடியாக நறுக்கிய ஒரு கைப்பிடி  கொத்துமல்லித் தளை தூவி பரிமாறலாம்.
தலைவர்களின் டின்னர் மெனு கார்டில் இருந்து ஒரு ரெசிப்பி!

பச்சை சுண்டைக்காய் பறித்து குழம்பு வைத்து சாப்பிட்டிருக்கிறீர்களா?

தேவாமிர்தமாக இருக்கும்.

நேற்று மொத்த தமிழகத்தையும் திரும்பிப்பார்க்கச் செய்ததே தலைவர்கள் சந்திப்பு எனும் ஒரு மாபெரும் நிகழ்வு. அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வில் இரவு விருந்தில் பரிமாறப்பட்ட உணவு வகைகளில் இந்த சுண்டைக்காய் குழம்பும் இருந்தது. 

சுண்டைக்காய் நம் தமிழ்நாட்டுப் பாரம்பர்ய உணவு வகைகளில் முக்கியமானது.

பச்சை சுண்டைக்காய் அரைத்த குழம்பு...
பச்சை சுண்டைக்காய் அரைத்த குழம்பு...

தேவையான பொருட்கள்:

  • பச்சை சுண்டைக்காய்: 1 கப்
  • சின்ன வெங்காயம்: 1/4 கிலோ
  • பச்சை மிளகாய்: 1
  • தக்காளி: 2
  • குடம்புளி: 4 சுளை (வெந்நீரில் ஊற வைத்துக் கொள்ளவும்)
  • பூண்டு: 4 பல்
  • இஞ்சி: 1 துண்டு
  • மிளகு: 1 டீஸ்பூன்
  • சீரகம்: 1 டீஸ்பூன்
  • வெந்தயம்: 1/2 டீஸ்பூன்
  • கடலைப் பருப்பு: 1/2 டீஸ்பூன்
  • புதினா: 1 கைப்பிடி
  • கரம் மசாலா: 1 டீஸ்பூன்
  • குழம்பு மசால்பொடி: 2 டீஸ்பூன்
  • பெருங்காயத்தூள்: 1 சிட்டிகை
  • உப்பு: தேவையான அளவு
  • நல்லெண்ணெய்: தேவையான அளவு
  • வெல்லம்: ஒரு சிறு துண்டு (துருவியது)
  • கடுகு & உளுந்தம் பருப்பு: தாளிக்க
  • கறிவேப்பிலை: ஒரு ஆர்க்

அரைக்கத் தேவையானவை:

மிளகு, சீரகம், கடலைப்பருப்பு, புதினா, இஞ்சி, பூண்டு அனைத்தையும் மிக்ஸியில் இட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

செய்முறை:

பச்சை சுண்டைக்காயை நன்கு கழுவி சுத்தம் செய்து ஒரு பெளலில் எடுத்துக் கொள்ளவும். சிலர் காயின் நடுவே கீறுவார்கள். அப்படிச் செய்யலாம், செய்யாமலும் விடலாம். எப்படியானாலும் காய் வதக்கும் போதே அது வெந்து விடும். 

முதலில் அடுப்பில் வாணலியை ஏற்றி கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு வெந்தயம், கடுகு உளுந்தம் பருப்பைப் போட்டு தாளித்துக் கொண்டு பிறகு நீளவாக்கில் கீறிய சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் சுண்டைக்காயைப் போட்டு வதக்கவும். சுண்டைக்காய் அரைகுறையாக வதங்கிக் கொண்டிருக்கும் போதே அதில் நறுக்கிய தக்காளியைப் போட்டு உப்பை போடவும். தக்காளி மிருதுவாகி சாறு தெறிக்க வதங்கும் போது அத்துடன் கரம் மசாலாத்தூள், குழம்பு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்துக் கிளறி ஊற வைத்து மசித்த குடம்புளியை நன்கு அரைத்து அதையும் விட்டு மூடி போட்டு வேக வைக்கவும். மசாலாக் கலவை நன்கு வெந்து சுண்டைக்காயுடன் சேர்ந்த வாசனை வந்ததும்  மூடியை நீக்கி அரைத்து வைத்த மேற்கண்ட மசாலாவையும் அதனுடன் சேர்த்து மீண்டும் சற்றுத் தண்ணீர் சேர்த்து ஒரு ஸ்பூன் நெய் விட்டு மூடி போட்டு வேக விடவும்.

இப்போது குழம்பு நன்கு வெந்ததும் மேலாக எண்ணெய் மிதந்து வரும். அது தான் பக்குவம். அப்போது மேலாக பெருங்காயத்தூள் மற்றும் வெல்லத்தூள் தூவி குழம்பை பாத்திரத்தில் இருந்து இறக்கி விடலாம்.

இனிப்பும், புளிப்பும், துவர்ப்பும், காரமுமாக குழம்பு வாசம் மூக்கைத் துளைக்கும். மேலாக பொடியாக நறுக்கிய ஒரு கைப்பிடி  கொத்துமல்லித் தளை தூவி பரிமாறலாம்.

குழம்பு அதிகம் தேவைப்படாது. 1 ஸ்பூன் குழம்பை வைத்தே ஒரு பானைச் சோற்றை உண்டு விடலாம்.

சுண்டைக்காய் ஹெல்த் பெனிஃபிட்ஸ்..

  • சுண்டைக்காய் வயிற்றுப் பூச்சிகளை அழிக்க வல்லது.
  • நீரழிவு நோயாளிகளுக்கு மிகச்சிறந்த நிவாரணம்
  • சுண்டைக்காயை மோருடன் கலந்து சாப்பிட்டு வர பேதி குணமாகும்.
  • சுண்டைக்காய் மூலநோய்க்கு மருந்து.
  • நாவின் சுவை உணர்வை அதிகரிக்கும்.
  • எலும்புகள் உறுதியடையும்,. குரல் வளம் அதிகரிக்கும்.
  •  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com