
நாட்டின் வருங்காலத் தலைவர்கள் வகுப்பறைகளில் உருவாகிறார்கள் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், இன்றைய வகுப்பறைச் சூழல் அத்தகைய நிலையில் இல்லை.
புதிய மின்னணு கருவிகள், தொழில்நுட்பம், ஊடகம், நுகர்வு கலாசாரம். இவற்றுக்காக பணத்தைத் தேடி நடைபெறும் ஓட்டம். பிள்ளைகளையும் ஓடச் சொல்லி துரத்தும் மனப்பான்மை. இவையெல்லாம் சேர்ந்துதான் இன்றைய வகுப்பறையை வன்முறை மிக்கதாக மாற்றியிருக்கின்றன. புகை, மதுப்பழக்கம் தொடங்கி ஆசிரியர், மாணவர் உறவு சீர்கேடு வரை இது அதிகரித்துக் கொண்டே போகிறது.
இந்நிலை மாற, வகுப்பறை கல்வித்திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும். நீதிபோதனை வகுப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பாடத்தில் உளவியலை சேர்க்க வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்தச் சூழலில் தான் வகுப்பறை கல்வியில் உளவியலின் அவசியம் என்ன என்பதை அறிந்துகொள்ள சென்னை டேலன்ட் பேக்டரி (Talent Factory) இயக்குநர் சுரேகாவை அணுகினோம்.
""பொதுவாக, அவசரமான, வேகம் நிறைந்த, கருவிகளால் சூழப்பட்ட இந்த உலகில் அனைவருக்குமே மன நலன் குறித்த விழிப்புணர்வுக்கான தேவை வந்திருக்கிறது.
இன்று நமது பள்ளிகளும், ஊடகங்களும், பலதரப்பட்ட மின்னணுச் சாதனங்களும் அறிவை வளர்ப்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றன. 30 ஆண்டுகளுக்கு முன்பு 10-ஆம் வகுப்பின் பாடத்திட்டம் இப்போது 6-ம் வகுப்பு மாணவனுக்கே கற்றுக்கொடுக்கப்படுகிறது. அதுதான் அறிவு வளர்ச்சி என நாம் பெருமிதப்பட்டுக்கொள்கிறோம். ஆனால், அதே சமயத்தில் அவர்களுக்கு 10-ம் வகுப்பு மாணவனுக்கு இருக்க வேண்டிய மன முதிர்ச்சி கற்றுக் கொடுக்கப்படுகிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
நம் பள்ளிச் சிறார்களுக்கு நாம் மன நலக் கல்வி அளிப்பதே இல்லை.
கல்வி என்ற பெட்டிக்குள் மூளை வளர்ச்சிக்கான அனைத்துக் கருவிகளும் உள்ளன. ஆனால், மன வளர்ச்சிக்கென ஒரு கருவிகூட இல்லை. அதற்கான ஒரே ஒரு கருவியை வைத்தால்கூட அது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
வீட்டில் செல்லமாக வளர்க்கப்படும் அறிவாளிச் சிறுவன், நண்பர்களிடமோ, ஆசிரியர்களிடமோ லேசாக அடி வாங்கிவிட்டால், அறிவுக்கெல்லாம் அப்பாற்பட்டு துவண்டுபோய், சுருண்டுவிடுவது ஏன்? மூன்று தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் எடுத்துவிட்டு, ஒரு தேர்வில் குறைவாக மதிப்பெண் எடுத்ததற்காக, தற்கொலை வரை செல்ல அந்த மாணவியை எது தூண்டியிருக்கும்? தன்னை எப்போதும் குறை சொல்லும் ஆசிரியையை கொல்லும் அளவுக்கு ஒரு மாணவனிடம் வன்மத்தைத் தூண்டியது எது?
இவை எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வு, பள்ளிகளில் மனநல வகுப்புகளும், மனநலம் குறித்த உளவியலும் பாடமாக வைக்கப்பட வேண்டும் என்பதுதான். 12-ஆம் வகுப்பில் உளவியலை ஒரு பிரிவாகவே தொடங்கலாம்.
ஆனால், நம் பள்ளிக்கூடங்களில் இத்தகைய உளவியல் கல்வியை கற்றுத் தர அரசு முடிவெடுத்தாலும், ஆசிரியர்கள் கிடைப்பது அரிதாக இருக்கும். ஏனெனில், உளவியல் படிப்பைத் தேர்ந்தெடுப்பவர்கள் குறைவு.
எனவே உளவியல் கல்விக்கான தேவை அதிகமாக உள்ளது. இன்னும் 10 ஆண்டுகளில் 20 லட்சம் உளவியல் முதுகலை, முனைவர் பட்டங்கள் பெற்ற வல்லுநர்களின் தேவை அதிகரிக்கவே வாய்ப்பு இருக்கிறது.
இந்தியாவில், 24 மாநிலங்களில் சுமார் 360-க்கும் அதிகமான கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உளவியல் கற்றுத் தரப்படுகிறது. தமிழகத்தில் 29 கல்வி நிறுவனங்களில் இந்தப் பாடம் உள்ளது. இதில், சென்னையில் மட்டும் சுமார் 14 நிறுவனங்கள் உளவியலைக் கற்பிக்கின்றன.
உளவியல் சமூக அறிவியல் பாடமாகக் கருதப்படுவதால், அதற்கான ஆர்வம் குறைவாகவே உள்ளது. ஆனால், வருங்காலத்தில் தேவை அதிகமாகவே உள்ளது''என்றார் சுரேகா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.