ஃபேஸ்புக்கில் புதுசு... பேரன்ட்டல் கன்ட்ரோலுடன், 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பிரத்யேக சாட் மெசஞ்சர்!

ஃபேஸ்புக்கின் பிற பயனாளர்கள் கணக்குகளைப் போல இந்த மெசஞ்சர் கிட்ஸ் செயலியின் மூலமாக பெற்றோருக்குத் தெரியாமல் உலகம் முழுவதுமுள்ள 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பற்றிய தரவுகளைச் சேகரிப்பதோ
ஃபேஸ்புக்கில் புதுசு... பேரன்ட்டல் கன்ட்ரோலுடன், 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பிரத்யேக சாட் மெசஞ்சர்!
Published on
Updated on
2 min read

ஃபேஸ்புக்கைப் பொருத்தவரை புதிதாக பயனாளர் கணக்கு துவங்க வேண்டுமானால், சம்மந்தப்பட்ட நபருக்கு 18 வயது கடந்திருக்க வேண்டும் என்பது முக்கியமான கட்டுப்பாட்டு விதிகளில் ஒன்று. இதனால் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகள் மிகவும் தவித்துப் போனார்கள் என்று கருதியோ என்னவோ ஃபேஸ்புக் 13 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு எனப் புதிதாக சாட் மெசஞ்சர் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த செயலியின் மூலமாக 13 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகள் தங்களது பெற்றோரின் மேற்பார்வையின் கீழ் தேவையான போது தங்களது நண்பர்களுடன் உரையாடலாம். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலியை சிறுவர்கள் தங்களுக்கென பயனாளர் கணக்குத் தொடங்கி அதன் மூலமாக நிறுவிக் கொள்ளும் வசதி இல்லை. பெற்றோரின் பயனாளர் கணக்கின் துணைக்கணக்காகத் தான் இந்தச் செயலி கட்டமைக்கப் பட்டுள்ளது. எனவே பெற்றோர் மூலமாகத்தான் புதிய நண்பர்களைச் சேர்க்கவோ, நீக்கவோ, அனுப்பிய மெசேஜ்களை டெலிட் செய்யவோ முடியும்.

இப்படி பெற்றோர் கண்காணிப்பில் தான் எல்லாமே செய்ய முடியும் எனில் தனியாக டீன் ஏஜர்களுக்கென பிரத்யேக சாட் மெசஞ்சர் என இதற்கு ஏன் பெயரிட வேண்டும்? எல்லாமே பெரியவர்களுக்கான ஃபேஸ்புக் வடிவமைப்பு போலத்தானே இருக்கிறது என்று சலித்துக் கொள்ளும் சிறுவர், சிறுமிகளுக்கும் தகுந்த பதிலை தருகிறது ஃபேஸ்புக்!

அது என்னவென்றால்; இதுவரையில் பெற்றோர் பயன்படுத்தி வந்த ஃபேஸ்புக் பயனாளர் கணக்குகள் எல்லாம் பெரியவர்களின் வயதுக்கேற்ற முறையில் இருந்து வந்தது, ஆனால் சிறுவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய மெசஞ்சர் செயலியானது முற்றிலும் அவர்களுக்குப் பொருத்தமான சமூக வலைத்தள செயலிகளுடன் இருக்கும். இதற்கான ஐடியாவை குழந்தைகள் மனநல வல்லுனர் ஒருவரின் உதவியுடன் சிறுவர்களுக்குப் பிடித்தமான வகையில் ஃபேஸ்புக் உருவாக்கியுள்ளது.

சிறந்த நோக்கம் மதிப்பிழந்து விடக்கூடாது...

மெசஞ்சர் கிட்ஸ் ஐடியாவின் நோக்கமே, குழந்தைகள் எதை விரும்புகிறார்கள் என்று அறிந்து கொண்டு அதை அவர்களுக்குத் தருவது தான். படங்கள், ஈமோஜிக்கள், லைக்குகள், ஃபேஸ் ஃபில்டர்கள், விளையாட்டுத்தனம் நிறைந்த மாஸ்க்குகள் மட்டுமே இதன் சிறப்பம்சங்கள் என்று கூறி விட முடியாது. புதிதாக நட்புறவுகளை எப்படி உருவாக்குவது, அவற்றை நிர்வகிப்பது மற்றும் தேவைப்படும் போதெல்லாம் குழந்தைகள், பெற்றோருடன் தொடர்பு கொண்டு தங்களை வெளிப்படுத்திக் கொள்ளவும் இந்த மெசஞ்சர்கள் உதவும் என்கிறார் குழந்தைகள் மனநல வல்லுனரான மிஸஸ். லாவலீ.

மேலும் அவர் கூறூகையில்; பெற்றோரை சிறந்த கண்காணிப்பாளர்களாகக் கொண்ட இந்த மெசஞ்சர் கிட்ஸ் மிகச்சிறந்த டூல். ஆனால் இதைப் பெற்றோர் எவ்விதமாகத் தங்களது குழந்தைகளின் நட்புறவுகளை மேம்படுத்தவும், இணையத் தொடர்புகளுக்காகவும் பயன்படுத்தச் சொல்லி ஊக்குவிக்கக்கூடும் என்று ஃபேஸ்புக்கால் இப்போதும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை என்றும் தெரிவிக்கிறார்.

ஏனெனில் ஃபேஸ்புக் இதுவரை வெளியிட்டுள்ள அத்தனை புதுமையான தொழில்நுட்ப ஐடியாக்களிலுமே அவை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூல நோக்கம் நிறைவேற்றப்படவே இல்லை. உதாரணமாக ஃபேஸ்புக் லைவ் வீடியோ ஸ்ட்ரீமிங் மூலமாக எத்தனையோ புதுமையான விஷயங்களை உடனுக்குடனாகக் கற்றுக் கொள்ள வசதியுண்டு. ஆனால், மக்கள் அதை லைவ் தற்கொலை நிகழ்வுகளைப் பதிவு செய்யவும், ஆபாச வீடியோக்களை லைவாகப் பதிவு செய்யவும், குற்றச்செயல்களை லைவாகப் பதிவு செய்யவும் தான் பயன்படுத்துகிறார்கள். இதனால், அவற்றின் நிஜமான நோக்கங்கள் அடிபட்டுப் போகின்றன. அல்லது மதிப்பிழப்புக்கு உள்ளாக்கப்படுகின்றன.

தரவுகளைச் சேகரிக்காது...

ஃபேஸ்புக்கின் பிற பயனாளர்கள் கணக்குகளைப் போல இந்த மெசஞ்சர் கிட்ஸ் செயலியின் மூலமாக பெற்றோருக்குத் தெரியாமல் உலகம் முழுவதுமுள்ள 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பற்றிய தரவுகளைச் சேகரிப்பதோ அல்லது மார்கெட்டிங் விளம்பர யுக்திகளோ எதுவும் கையாளப் பட மாட்டாது என அறிவிக்கப் பட்டுள்ளது.

தற்போது அமெரிக்காவில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருக்கும் மெசஞ்சர் கிட்ஸ் செயலியை ஆப்பிள் தயாரிப்புகளான ஐ ஃபோன், ஐ பாட், மற்றும் ஐ பாட் டச் உபகரணங்களில் மட்டுமே தரவிறக்கிக் கொள்ள முடியும். ஆண்ட்ராய்டு ஃபோன்களுக்கான செயலி மிக விரைவில் மேம்படுத்தப்படும் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.