இந்தியாவில் உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் வரக் காரணமான உப்பு அரக்கனை தலையில் தூக்கிச் சுமப்பவை இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்களே!

மனிதன் தோன்றிய காலத்தில், நாளொன்றுக்கு அவன் பயன்படுத்திய உப்பின் அளவு வெறும் 1/2 கிராம் மட்டுமே! ஆனால், இன்று நாளொன்றுக்கு தனிநபர் ஒருவர் பயன்படுத்தும் தினசரி அளவு 12 கிராம் ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் வரக் காரணமான உப்பு அரக்கனை தலையில் தூக்கிச் சுமப்பவை இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்களே!
Published on
Updated on
2 min read

‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்று தான் இதுவரை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், சமைக்குப் போது மட்டுமல்ல சாப்பிடும் போதும் கூட உப்பே சேர்த்துக் கொள்ளத் தேவை இல்லை என்கிறார் இவர். அவர் யாரென்றால்? உப்பினால் அதிகரிக்கக் கூடிய உயர் ரத்த அழுத்தத்தை இல்லாமலாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் WASH எனும் உலக அமைப்பின் தலைமை நிர்வாகியான டாக்டர் கிரஹாம் மெக்கிரிகோர். கடந்த சனிக்கிழமையன்று சென்னை ஐஐடியில் நடைபெற்ற பதப்படுத்தப்படும் உணவுப் பொருட்கள் தயாரிப்பில் உப்பின் பயன்பாட்டைக் குறைப்பது எப்படி? எனும் தலைப்பிலான வொர்க்‌ஷாப் நிகழ்வில் பேசுகையில் அவர் அவ்விதமாகக் கூறினார். ஏனெனில் பதப்படுத்தலில் பயன்படுத்தப் படும் முதன்மையான சேர்மானம் உப்பே!

‘உப்பை மட்டும் உங்கள் உணவிலிருந்து நீங்கள் அப்புறப்படுத்தி விட்டீர்கள் என்றால், பிறகு உங்களை எந்தவிதமான ஆரோக்யக் குறைபாடுமே அண்டாது’ ஏனெனில், மனிதனின் உடல் ஆரோக்யத்தில் உப்பினால் உண்டாகக் கூடிய கெடுதல் மற்ற அனைத்து வகையான கெடுதல்களைக் காட்டிலும் அதிகம் என்கிறார் இவர். அதற்கு அவர் கூறும் சிறந்த உதாரணங்கள் நம்முடைய மூதாதையர்களான சிம்பான்ஸிகள் மற்றும் கொரில்லாக்கள். அவை, தங்களது உணவில் உப்பு சேர்த்துக் கொள்ளாததால் அவற்றின் ரத்த அழுத்தம் என்றென்றும் 90/60 எனும் ஆரோக்யமான அளவைத்தாண்டுவதே இல்லை. இந்த விஷயத்தில் மனிதர்களும் அவற்றைத் தாராளமாகப் பின்பற்றலாம் என்கிறார் மெக்கிரிகோர்.

மனிதன் தோன்றிய காலத்தில், நாளொன்றுக்கு அவன் பயன்படுத்திய உப்பின் அளவு வெறும் 1/2 கிராம் மட்டுமே! ஆனால், இன்று நாளொன்றுக்கு தனிநபர் ஒருவர் பயன்படுத்தும் தினசரி அளவு 12 கிராம் ஆக உயர்ந்துள்ளது. இதில் முக்கியமாக நாம் கவனித்தாக வேண்டிய விஷயம், மேற்கத்திய நாடுகளில் இயங்கும் பன்னாட்டு உணவுத் தொழிற்சாலைகளின் மிக மோசமான லாபி அந்தந்த நாட்டு அரசாங்கங்களை உப்புகெதிரான கொள்கைகளையும், தடைகளையும் கொண்டு வருவதை கடுமையாகத் தடுக்கிறது. ஐக்கிய நாடுகளில் பல ஆண்டுகளுக்கு நீடித்த தொடர் போராட்டத்தின் பின் தற்போது அங்கே சீரியல்கள் என்று சொல்லக் கூடிய சைவை உணவுப் பொருட்களில் மட்டும் கிட்டத்தட்ட 50% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதே போல ப்ரெட்டில் 30% குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், உணவு பதப்படுத்தலில் உப்பின் தேவை அதிகமிருப்பதால் பன்னாட்டு உணவுத் தொழிற்சாலைகள் தொடர்ந்து உப்பைக் குறைக்கும் முயற்சிகளுக்குக் பெருத்த தடையாகவே நீடித்து வருகின்றன. மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தாலொழிய இவ்விஷயத்தில் பூரண வெற்றி கிட்டாது.

WASH அமைப்பின் தொடர் போராட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு வொர்க் ஷாப்புகள் மூலமாகத் தற்போது உலகம் முழுவதும் ஆண்டு தோறும் 10,000 முதல் 11,000 உயிர்கள் காக்கப்பட்டு வருவது தனது அமைப்புக்குக் கிடைத்த வெற்றியாக மெக்கிரிகோர் கருதுகிறார்.

உப்பைக் குறைத்தால் உயர் ரத்த அழுத்தம் குறையுமென்கிறார்களே... உயர்ரத்த அழுத்தத்தால் அப்படி என்ன ஆகிவிடும் என்று அசட்டையாக இருப்பவர்கள் கவனத்துக்கு;

உயர் ரத்த அழுத்தப் பாதிப்பு அதிகம் இருப்பவர்களுக்குத் தான் ஸ்ட்ரோக் என்று சொல்லப்படக்கூடிய பக்கவாத நோய் தாக்கும் அபாயம் அதிகமிருக்கிறதாம்.

அப்படிப்பட்டவர்கள், தாங்கள் உட்கொள்ளும் உப்பின் அளவைக் குறைத்தாலே படிப்படியாகச் சில வாரங்களில் அவர்களது உயர் ரத்த அழுத்தப் பிரச்னையும் குறைந்து சீராகும்.

இந்தியாவில், இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் என்ற பெயரில் உலவும் அரக்கன் குறித்த கவனம் எவருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. உயர் ரத்த அழுத்த நோயாளிகள் இந்த இன்ஸ்டண்ட் நூடுல்ஸை வகையறாக்களைத் தவிர்த்து விடுவது நல்லது. அதிலிருக்கும் உப்பின் அளவு உணவுத் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு நிர்ணயித்திருக்கும் அளவை விட நிச்சயம் அதிகம். உணவைப் பதப்படுத்த உப்பைத் தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை, அதைத் தவிர வேறு பல முறைகளும் உள்ளன. அவற்றையும் முயற்சிக்கலாம். என்கிறார் மெக்கிரிகோர்.

உப்பு எனும் உயிர்கொல்லியிடமிருந்து மக்களைக் காப்பாற்றும் வழிகளுக்கான முதல் முயற்சியாக, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் மீது அதில் பயன்படுத்தப்பட்டுள்ள உப்பின் அளவு குறித்து தெளிவாக நுகர்வோர் எளிதில் அறியும் விதத்தில் முதலிடம் கொடுத்து வெளியிடப்பட வேண்டும். உப்பின் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்வதால் மனிதனின் ஆரோக்யத்தில் உண்டாகக் கூடிய நன்மைகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். இல்லையேல் உயர் ரத்த அழுத்தத்தின் காரணமாக பக்கவாதம் வரும் வாய்ப்பும், அதனால் மக்கள் அவதிப்படும் வாய்ப்புகளும் அதிக என்கிறார்கள் மருத்துவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com