உலகில் அதிக மக்கள் பேசக்கூடிய மொழியைக் கற்க ஆசையா?

உலகில் அதிக மக்கள் பேசக்கூடிய மொழியைக் கற்க ஆசையா?

உலகில் அதிகம் மக்களால் பேசப்படக்கூடிய மொழி என்ற பெருமை சீனாவின் மாண்டரீன் மொழிக்கே உரியது.
Published on

உலகில் அதிக மக்களால் பேசப்படக் கூடிய மொழி எது? 

பெரும்பாலானோர் ஆங்கிலம் என்று பதில் சொல்வீர்களானால்.. அது தவறு.

உலகில் அதிகம் மக்களால் பேசப்படக்கூடிய மொழி என்ற பெருமை சீனாவின் மாண்டரீன் மொழிக்கே உரியது. சீனாவின் கலாச்சாரம், சீன மக்களின் வாழ்க்கைமுறை, அவர்களது பழக்க வழக்கங்கள் பழம்பெருமை வாய்ந்த சீனப் பண்பாடு இத்தனையையும் அறிந்து கொள்ள விரும்புபவர்கள் மாண்டரின் மொழியைக் கற்றுக் கொண்டால் மட்டுமே அதனை எளிதாகக் கைக்கொள்ள முடியும். உலகிலேயே கற்பதற்குக் கடினமான மொழி என்றால் அது சீனமொழியே என்போரும் உண்டு. ஏனெனில் சீன மொழியில் எழுத்துருவங்கள் ஒவ்வொன்றும் படம் வரைவதைப் போல சித்திர வடிவமாகவே இருக்கும். அவற்றை படித்து மனதில் இருத்துவது கடினம் என்று நினைப்போரும் உண்டு. ஆனால், இந்த எண்ணத்தைப் பொய்யாக்கும் வகையில் இந்தியாவிலேயே முதன்முறையாக சீனமொழியான மாண்டரினைக் கற்றுத் தர கொல்கத்தாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று முடிவெடுத்துள்ளது.

அதன்படி மாண்டரின் கற்றுத்தர இந்தியாவின் முதல் கன்ஃபூசியஸ் பள்ளியொன்று கொல்கத்தாவில் நிறுவப்பட்டுள்ளது.  சீனாவுக்கான இந்தியத் தூதரான ஜெனரல் மா ஷான்வூ இந்த நிறுவனத்தைத் தொடங்கி வைத்தார். சீனாவில் இயங்கும் யுன்னான் நார்மல் பல்கலைக்கழகமும், கொல்கத்தாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றும் இணைந்து இந்த முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் மூலமாகக் கற்பவர்களுக்கு மொழிப்பாடம் மட்டுமன்றி சீன நடனம் மற்றும் மார்சியல் ஆர்ட்ஸ் என்று சொல்லப்படக் கூடிய தற்காப்புக் கலை உள்ளிட்டவையும் கற்றுத்தரப்படவிருக்கிறதாம். 

உலக மக்கள் தொகையில் முதலிரண்டு இடத்தைப் பெற்று கடல் போலப் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கும் இந்திய மற்றும் சீன மக்களிடையே நட்புறவை வளர்க்க இது ஒரு சிறிய முயற்சியே, இந்தியா, சீனா இடையே நட்பை வளர்க்க இந்தச் சிறு முயற்சி உதவலாம் என இந்தியாவுக்கான சீனத்தூதர் மா ஷான்வூ தெரிவித்தார்.

கன்ஃபூஷியஸ் என்பது ஒரு வாழ்க்கை முறைத் தத்துவம். அந்த தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த இப்பள்ளிகளில் கலாச்சாரம், இலக்கியம், புவியியல் உள்ளிட்ட பாடங்களுடன் இந்தோ, சீன கூட்டுக் கலாச்சாரத்தை வளர்த்தெடுக்க உதவும் விதமாக கலை சார்ந்த விஷயங்களும் கற்றுத்தரப்பட உள்ளதாக இந்தியாவுக்கான சீனத்தூதர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com