கல்லூரிக்குள் நுழைந்த மலைப்பாம்பு: உயிருடன் பிடித்துக் கொடுத்த பாட்டனி புரொஃபஸர்!

கல்லூரிக்குள் நுழைந்த மலைப்பாம்பு: உயிருடன் பிடித்துக் கொடுத்த பாட்டனி புரொஃபஸர்!

பிடாரனுக்காக காத்திருக்காமல் கல்லூரி புரஃபஸரே களத்தில் இறங்கி பாம்பு பிடித்தது அதிசயமல்லாமல் வேறென்ன?
Published on

அலகாபாத், சியாமா பிரசாத முகர்ஜி அரசு கல்லூரி வளாகத்தில் நேற்று திடீரென 12 அடி நீள மலைப்பாம்பு ஒன்று நுழைந்து விட்டது. அழையா விருந்தாளியாக உள்ளே வந்து விட்ட திருவாளர் மலைப்பாம்பைக் கண்டு மாணவர்களும், ஆசிரியப் பெருமக்களும், அலுவலக உதவியாளர்களும் மிரட்சியில் தெறித்து ஓட அதே கல்லூரியில் பாட்டனி (தாவரவியல்) துறை பேராசிரியரான NB சிங் சிறிதும் பதற்றமின்றி மலைப்பாம்பை நேக்காகப் பிடித்து பாம்புக்கும், கல்லூரிக்கும் எவ்வித சேதாரங்களும் இன்றி வனத்துறையினரிடம் ஒப்படத்திருக்கிறார்.

பிடிபட்ட மலைப்பாம்பின் எடை 40 கிலோகிராம். கல்லூரிக்குள் மலைப்பாம்பைக் கண்டதும் பயத்தில் அலறிய மாணவர்களில் ஒருவர் புரஃபஸரை அலைபேசி மூலம் தொடர்பு கொண்ட அந்தத் தகவலைப் பகிர்ந்து கொண்ட அடுத்த நொடியில் அவர் துரிதமாக சம்பவ இடத்துக்கு விரைந்து பாம்பு பிடித்த காட்சி தான் இன்று சமூக வலைத்தளங்களில் வைரல் வீடியோவாகச் சிலாகித்துப் பகிரப்பட்டுக் கொண்டு இருக்கிறது. ஏன், என்றால் பாம்பைப் பிடிக்க பிடாரனைத் தேடுவது தான் வழக்கமான விஷயம், ஆனால் இங்கே பிடாரனுக்காக காத்திருக்காமல் கல்லூரி புரஃபஸரே களத்தில் இறங்கி பாம்பு பிடித்தது அதிசயமல்லாமல் வேறென்ன?

அந்த வீடியோவுக்கான லிங்க்...

மலைப்பாம்பைக் கண்டு அஞ்சாமல், தைரியமாகக் களத்தில் இறங்கி பாம்பு பிடித்துக் கொடுத்த புரஃபஸர் NB சிங் இதுவரை டஜன் கணக்கில் இப்படி பாம்பு பிடித்துக் கொடுத்தவராம். அவர் இந்த முயற்சியில் இறங்குவதற்கான முக்கியக் காரணமே, அச்சத்தில் இருக்கும் மனிதர்களிடம் இருந்து பாம்பையும் காப்பாற்ற வேண்டும், அதே சமயம் மிரட்சியில் இருக்கும் மலைப்பாம்பிடம் இருந்து மனிதர்களையும் சேதமின்றி காப்பாற்ற வேண்டும். அதோடு மலைப்பாம்புகள் மட்டுமல்ல எந்த ஒரு விலங்கினமும் நம்மால் தொந்திரவுக்கு உள்ளாக்கப்படும் போது தான் ஆபத்தானவையாக மாறுகின்றனவே தவிர, மற்றபடி அவற்றால் மனிதர்களுக்கு எவ்விதத் தொல்லையும் இல்லை என்பதை மனிதர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். என்பதே தனது நோக்கம் என்கிறார்.

மலைப்பாம்புகள் இந்தியாவின் நீளமான பாம்பு வகைகளில் ஒன்று. பொதுவாக இவற்றில் விஷமிருப்பதில்லை. ஆனால், இரையை பிடித்து வாலால் இறுக்கிச் சுழற்றி, நசுக்கி இரையைக் கொன்று விழுங்கக் கூடியது மலைப்பாம்பு. இவ்வகைப் பாம்புகள் ஆப்ரிக்கா, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியக் காடுகளில் அதிகம் காணப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com