குண்டூர் மருத்துவர்கள் நிகழ்த்திய ‘பாகுபலி பிரெய்ன் சர்ஜரி’!

பாகுபலி திரைப்படத்தால் தான் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடிக்க முடிந்தது என்பதால் குண்டூர் மருத்துவர்கள். வினயாவுக்கு நடத்தி முடித்த அறுவை சிகிச்சைக்கு ‘பாகுபலி பிரெய்ன் சர்ஜரி’ என்று
குண்டூர் மருத்துவர்கள் நிகழ்த்திய ‘பாகுபலி பிரெய்ன் சர்ஜரி’!

திரைப்படங்கள், பொதுமக்களிடையே ஏற்படுத்தும் தாக்கங்கள் சொல்லி மாளாது. அதீத வன்முறை மற்றும் ஆபாசமான திரைப்படங்களைப் பார்த்து அதன் ஆதிக்கத்தில் கெட்டுக் குட்டிச்சுவர் ஆனவர்களும் உண்டு. ஒரு சில நல்ல திரைப்படங்களால் மனம் திருந்தி, வாழ்விற்கான உத்வேகம் பெற்று எதிர்கால வாழ்வை நன்றாக அமைத்துக் கொண்டவர்களும் கூட உண்டு. அப்படி ஒரு செய்தியைப் பற்றித்தான் இப்போது நாம் அறிந்து கொள்ளப் போகிறோம். ஆந்திராவைச் சேர்ந்த 43 வயது செவிலியரான வினயா குமாரியின் வாழ்வில் ஒரு திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் இன்று அவரது உயிரையே காப்பாற்றித் தந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை. ஆம்;

ஆந்திர மாநிலம், குண்டூரைச் சேர்ந்த செவிலியரான வினயாகுமாரிக்கு மூளையில் கட்டி. வலிப்பு நோய்க்காக சிகிச்சை எடுத்துக் கொள்ளச் சென்ற போது தான் மூளையில் அபாயகரமான கட்டி இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. கட்டியை உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றியாக வேண்டும். அதிலும் மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்தாலும் கூட நோயாளி விழிப்புடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்திருந்தனர். மூளைக்கட்டியை அகற்றும் சிக்கலான அறுவை சிகிச்சையின் போது நோயாளி தூங்கி விட்டால் கட்டியை அகற்றுவதால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து துல்லியமாக அறிந்து கொள்ள முடியாது... எனவே அம்மாதிரியான அறுவை சிகிச்சையின் போது நோயாளி மயக்கத்தில் இருந்தாலும் விழிப்புடன் இருப்பது அவசியம் என்றிருக்கிறார்கள் மருத்துவர்கள். அதெப்படி மயக்க மருந்து அளித்தால் வலியத் தூக்கம் கண்களைத் தழுவுமே! அப்படியிருக்கையில் விழிப்பு நிலையில் இருப்பது எப்படி சாத்தியம்?! என வினயா குடும்பத்தினருக்கு குழப்பமாகி விட்டது.

அப்போது தான் மருத்துவர்களுக்கு உதித்தது ஒரு மகத்தான ஐடியா! வினயாவுக்கு மயக்க மருந்து கொடுத்து வழக்கம் போல அறுவை சிகிச்சையைத் தொடங்கி விட்டு, தங்களிடமிருந்த மடிக்கணினியில் ‘பாகுபலி தி கன்க்ளூசன்’ திரைப்படத்தை ஓட விட்டு, வினயாவை அதைப் பார்த்துக் கொண்டிருக்க அனுமதித்திருக்கிறார்கள். மூளைக்கட்டியை அகற்றும் சிக்கலான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிய ஒன்றரை மணி நேரமானது. அதுவரை வினயா மயக்கமடையவே இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். மயக்க மருந்தால் உடல் மரத்துப் போய் வலியின்றி இருந்தாரே தவிர, வினயாவுக்கு சுயநினைவு இருந்தது. எனவே அவரால் படத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டு இடையிடையே அதில் இடம்பெற்ற பாடல்களைக் கூட ஹம் செய்திருக்கிறார். ஒரு வழியாக படமும் முடிந்தது. அதோடு சேர்ந்து வினயாவின் மூளைக்கட்டியும் வெற்றிகரமாக நீக்கப்பட்டது. 

பாகுபலி திரைப்படத்தால் தான் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடிக்க முடிந்தது என்பதால் குண்டூர் மருத்துவர்கள். வினயாவுக்கு நடத்தி முடித்த அறுவை சிகிச்சைக்கு ‘பாகுபலி பிரெய்ன் சர்ஜரி’ என்று பெயரிட்டு தங்கள் வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள்.

Image Courtesy: Times of India

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com