வாவ் சொல்ல வைத்த அசத்தல் மூலிகைத் துவையல்கள்!
ஆறே ஆறு மாதங்களில், சிறுசேரி பகுதியில் உள்ள பெரும்பாலான ஐடி பணியாளர்களின் பேராதரவைப் பெற்றுள்ளனர்


ஆறே ஆறு மாதங்களில், சிறுசேரி பகுதியில் உள்ள பெரும்பாலான ஐடி பணியாளர்களின் பேராதரவைப் பெற்றுள்ளனர் ஓரகத்திகளான நிவேதா, சத்யா ஆகிய இருவரும். அவர்களின் சாதனை என்ன? ரசாயன கலப்பில்லாமல் இவர்கள் தயாரித்துத் தரும் மூலிகைத் துவையலே அவர்களுக்கு கிடைத்த வரவேற்புக்கு காரணம். இது குறித்து அவர்களே கூறுகின்றனர்:
"எங்கள் குடும்பம், கூட்டுக் குடும்பம். மாமனார், மாமியார், மச்சினன் குடும்பம், நாத்தனார் குடும்பம் என அனைவரும் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வாழ்கிறோம். இதனால் எங்கள் வீட்டில் தினமும் மூன்று வேளையும் 25 பேருக்கு மேல் சமைக்க வேண்டியதிருக்கும். சமைத்து முடித்து அனைவருக்கும் பரிமாறிய பின் பல நேரங்களில் எங்களுக்கு சாதம் மட்டுமே மீதமிருக்கும். குழம்பு, பொரியல் எல்லாம் கிடைக்காது. இதனால் என் மாமியார் கிராமத்தில் இருப்பது போன்று பல விதமான துவையல்கள் செய்து பிரிஜ்ஜில் வைத்திருப்பார். பெரும்பாலான நேரம் எங்களுக்கு அந்த துவையல்கள்தான் கிடைக்கும்.
இந்நிலையில், எனக்கும், என் ஓரகத்திக்கும் வீட்டில் கிடைக்கும் ஓய்வு நேரங்களை பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ள வேண்டும். ஏதாவது கைத்தொழில் செய்து வீட்டிலிருந்தபடியே எங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. இதனால், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு ஏதாவது கைத்தொழில் பயிற்சி கற்றுக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம்.
ஒரு சிறு தொழில் பயிற்சியாளரை தேடிப்பிடித்து அவரை சந்தித்தோம். அவர், முதலில் எங்கள் குடும்பத்தைப் பற்றி விசாரித்தார். உடனே, "கூட்டுக் குடும்பம் என்றால், நீங்கள் நிறைய சமைக்க வேண்டியிருக்குமே'' என்றார். நாங்களும் விளையாட்டாக, ஆம் நிறைய சமைப்போம். ஆனால், பல நேரங்களில் எங்களுக்கு துவையல்தான் மிஞ்சும் என்றோம்.
உடனே அவர் சொன்னார், "அப்படியென்றால், நீங்கள் இந்தத் துவையல் வகைகளை தயார் செய்து உங்கள் பகுதியில் உள்ளவர்களுக்கு கொடுக்கலாமே, நல்ல வரவேற்பு இருக்குமே'' என்றார்.

நாங்களும் சரி சும்மா செய்துதான் பார்ப்போமே என்று, என் மாமியார் உதவியுடன் பிரண்டை துவையல், பூண்டு- மிளகு துவையல், இஞ்சி துவையல், வல்லாறை துவையல், புதினா துவையல், தூதுவளை துவையல், பாகற்காய் துவையல் என பலவகையான துவையல்களை செய்து டப்பாவில் அடைத்து எடுத்துக் கொண்டு.
எங்கள் வீடு சிறுசேரி பகுதியில் இருப்பதால், எங்கள் வீட்டிற்கு சற்று அருகிலேயே பெரிய பெரிய ஐடி நிறுவனங்கள் இருக்கிறது. அங்குச் சென்று இந்த துவையல்களை சாம்பிளாக கொடுத்துவிட்டு வந்தோம். உங்களுக்குப் பிடித்திருந்தால் சொல்லுங்கள் நாங்கள் கொண்டுவந்து தருகிறோம் என்று தொலைபேசி எண்ணையும் அவர்களிடம் கொடுத்துவிட்டு வந்தோம்.
இரண்டு நாள்கள் வரை எந்த தகவலும் இல்லை. சரி இனி அவர்கள் கூப்பிட மாட்டார்கள் என்று நினைத்து வழக்கமான வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தோம்.
மூன்றாவது நாள் ஒரு ஐடி நிறுவனத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. உங்களுடைய துவையல் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நீங்கள் நாளை 50 டப்பா துவையல் எடுத்து வர முடியுமா என்றார்கள். நாங்கள் அதுவரை பிசினஸாக செய்ததில்லை. வீட்டிற்காக கொஞ்சமாகத்தான் செய்து வைத்திருப்போம். திடீரென்று அவர் அழைத்ததும் எங்களுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. ஏதோ தைரியத்தில் சரி என்று சொல்லிவிட்டோம்.
கிடைத்த வாய்ப்பை தவற விடக்கூடாது என்று உடனடியாக மார்க்கெட்டுக்கு சென்று தேவையானவற்றை வாங்கி வந்து, சுத்தம் செய்து நான் பிரண்டை துவையல் செய்தால், என் ஓரகத்தி தூதுவளை துவையல் செய்வார், என் மாமியார் வல்லாறை துவையல் செய்வார் இப்படியே மாற்றி மாற்றி ஆளுக்கு ஒரு துவையலை விடிய விடிய செய்து டப்பாவில் அடைத்து எடுத்துக் கொண்டு மறுநாளே சென்றோம்.
எங்களைப் பார்த்ததும் அனைவரும் வந்து சூழ்ந்து கொண்டனர். அரைமணி நேரத்தில் அத்தனை துவையலும் விற்றாயிற்று. மேலும், துவையலுக்கு ஆர்டரும் கொடுத்தார்கள். நாங்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க ஆரம்பித்துவிட்டோம்.
அதிலிருந்து எங்களின் மூலிகை துவையலுக்கு ஐடி மக்களிடம் நல்ல வரவேற்பும் கிடைத்திருக்கிறது. எங்களுக்கு கணிசமான கையிருப்பும் சேர்ந்து உள்ளது. இனி நாங்கள் விரும்பியதை வாங்கிக்கொள்ளவும் முடியும் மற்றவர்களுக்கு வாங்கிக் கொடுக்கவும் முடியும்.
இந்த மூலிகை துவையல்களில் எந்தவித ரசாயனமும் கலக்காததால், 15 -20 நாள்கள் வரை மட்டுமே இதனை உபயோகிக்க முடியும். அதுதான் எங்கள் மூலிகை துவையலின் வெற்றி! என்று கண் சிமிட்டுகிறார் நிவேதா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...