இங்கிலாந்து அரச குடும்பத்தின் ராயல் விதிகளை புறக்கணித்தார் மேஹன் மார்க்கல்!
By RKV | Published On : 11th June 2018 11:26 AM | Last Updated : 11th June 2018 11:57 AM | அ+அ அ- |

குயின் எலிசபெத்தின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழா ’ட்ரூப்பிங் தி கலர்’ எனும் பெயரில் சமீபத்தில் அனுசரிக்கப்பட்டது. இது வருடா வருடம் நிகழும் சிறப்பு நிகழ்வு. அந்த விழாவன்று குயின் எலிசபெத் தலைமையிலான அரச குடும்பத்தினர் பக்கிங்ஹாம் அரண்மனையின் மேல்தளத்தில் இருக்கும் பால்கனியில் நின்று கொண்டு காட்சி தர... கீழே பிரிட்டிஷ் ராணுவத்தின் அணிவகுப்பு நடைபெறும். பிரிட்டிஷ் அரச குடும்பத்தினருக்குச் சொந்தமான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியின் அடிப்படையில் அந்த சிறப்பு நிகழ்வில் 1400 ராணுவ வீரர்கள், 200 குதிரை வீரர்கள் மற்றூம் 400 இசைக்கலைஞர்கள் அணிவகுத்துச் செல்ல அதை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் குயின் எலிசபெத்தின் அதிகாரப் பூர்வ பிறந்த தினத்தன்று அரச குடும்பத்தினர் அனைவரும் கண்டுகளிப்பதாகத் தெரிகிறது. இந்த ஆண்டும் அந்த விழா சிறப்புர அனுசரிக்கப்பட்டுள்ளது. ஆனால், விழாவின் அரச குடும்பத்தினருக்கு அதிருப்தி அளிக்கும் விதமாகப் புதிதாக அரச குடும்பத்தில் இணைந்துள்ளவரான மேஹன் மார்க்கலின் ஆடை வடிவமைப்பு இருந்ததாகத் தகவல்.
மேஹன், இளவரசர் ஹாரியை மணந்து பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் இளவரசியாக சமீபத்தில் தான் இணைந்தார். கடந்த மே மாதம் 19 ஆம் தேதி இளவரசர் ஹாரிக்கும், பிரிட்டிஷ் நடிகை மேஹன் மார்க்கவுக்கும் திருமணமானது. சமீபத்தில் தான் இந்த ஜோடி தங்களது தேனிலவு காலத்தில் இருந்து மீண்டு பக்கிங்ஹாம் அரண்மனைக்குத் திரும்பியிருக்கிறது.
இந்நிலையில் தனது மாமியார் டயானாவைப் போலவே மேஹனும் அரச குடும்பத்தின் ராயல் விதிகளை உடைத்துக் காட்டுவதில் விருப்பமுடையவர் போலத்தான் தெரிகிறது. மேஹன் தனது திருமண ஆடையாகத் தேர்வு செய்திருந்த வெட்டிங் கவுனில் திறந்த தோள்களுடன் காட்சியளித்தார். இது அரச குடும்பத்தின் விதிகளுக்குப் பொருந்தாதது. பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் இளவரசியாக நுழைபவர்கள் திறந்த தோள்களுடன் பொது இடங்களிலோ, பொது மக்கள் முன்னிலையிலோ காட்சியளிக்கக் கூடாது என்கிறது ராயல் விதி. ஆனால், மேஹன் தனது திருமணத்தின் போது மட்டுமல்ல, தற்போது குயின் எலிசபெத்தின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட போதும் அதே விதமாகத் தான் உடையணிந்து அணிவகுப்புகளைப் பார்வையிட்டுள்ளார்.
இளம்பிங்க் நிற கவுனில் இளவரசர் ஹாரியுடன், மேஹன் அமர்ந்து செல்லும் இந்த புகைப்படத்தில் மேஹன் அணிந்திருக்கும் விதமாக அரச குடும்பத்தினர் எவரும் உடையணியக் கூடாது. என்பதே விதி. ஆனால், மேஹன் அந்த விதியை இரண்டாம் முறையாக உடைத்திருக்கிறார். ஆடை விஷயத்தில் அவர் தனது கணவரின் அண்ணன் மனைவியும், பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மூத்த மருமகளுமான கேட் மிடில்டன் பாணியைப் பற்றிச் சற்றும் அலட்டிக் கொள்வதில்லை. மேஹன், ஆடை விஷயத்தில் தனக்கென தனி பாணியை உருவாக்கி அதைப் பின்பற்றி வருகிறார்.