கர்ப்பிணியின் உடலுக்குள் புகுந்த உடைந்த ஊசி! அரசு மருத்துவமனை அவலம்!

கடந்த ஒரு மாதமாக வேலைக்கே செல்ல முடியாமல் தன் மனைவியை உயிருடன் காப்பாற்றுவதற்காக அவருடன் மருத்துவமனைகளில் அலைந்து கொண்டிருக்கிறார் கணவர் வடிவேல்.
கர்ப்பிணியின் உடலுக்குள் புகுந்த உடைந்த ஊசி! அரசு மருத்துவமனை அவலம்!

கும்பகோணத்தைச் சேர்ந்தவர்கள் சசிகலா, வடிவேல் தம்பதியினர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கையில் சசிகலா மூன்றாவதாகக் கர்ப்பமானார். 

இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் உடல்நலக் குறைவு காரணமாக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கு பணியில் இருந்த செவிலியர்களில் ஒருவர் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் சசிகலாவுக்கு ஊசி போட்டுள்ளார். ஊசி போடும் போது, செவிலியரின் அலட்சியத்தால் ஊசியின் மிக மெல்லிய நுனி உடைந்து சசிகலாவின் கையின் உள்ளேயே தங்கி விட்டது. அதை அறியாத சசிகலா அப்படியே வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.

கையினுள் ஊசி இருப்பது தெரியாமல் வீடு திரும்பிய சசிகலாவுக்கு நாளடைவில் கையில் கடும் வலி ஏற்பட்டிருக்கிறது. மீண்டும் அவர் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கே சிகிச்சைக்கு வர, அப்போது அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அந்த எக்ஸ்ரேவில் சசிகலாவின் கையினுள் உடைந்த ஊசி இருப்பது தெரிய வந்தது. அதைக் கண்டதும் சசிகலாவும், அவரது கணவர் வடிவேலுவும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். 

ஆனால், சசிகலாவின் எக்ஸ்ரேவைச் சோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சி எதுவும் அடையாமல் அவர்களை , கையிலிருக்கும் ஊசியை அறுவை சிகிச்சை மூலம் நீக்குவதற்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அங்கே சசிகலாவுக்கு கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஊசி அகற்றப்பட்டதாகக் கூறிய மருத்துவர்கள் இனிமேல் ஆபத்தில்லை எனக்கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது கர்ப்பிணியாக உள்ள சசிகலாவுக்கு சமீபத்தில் நெஞ்சில் கடுமையான வலி ஏற்படவே, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் காட்டியுள்ளனர். அப்போது மீண்டும் அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட, அந்த எக்ஸ்ரேவில் சசிகலாவின் கையில் இருந்து அகற்றப்பட்டதாகக் கூறப்பட்ட உடைந்த ஊசி தற்போது அவரது நெஞ்சுப் பகுதியில் இருப்பது தெரிய வந்திருக்கிறது.

கடந்த ஒரு மாதமாக வேலைக்கே செல்ல முடியாமல் தன் மனைவியை உயிருடன் காப்பாற்றுவதற்காக அவருடன் மருத்துவமனைகளில் அலைந்து கொண்டிருக்கிறார் கணவர் வடிவேல். இவ்விஷயம் தொடர்பாக அவர்கள் கும்பகோணம் மாவட்ட ஆட்சியர் அண்ணாத்துரையிடம் மனு கொடுத்திருக்கிறார்கள்.

முதலில் சிகிச்சை எடுத்துக் கொண்ட கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கும் சென்று வடிவேல் தம்பதியினர் இது விஷயமாக மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர்கள், சசிகலாவின் உடலில் ஊசி நகர்ந்து கொண்டே இருக்கிறது. அறுவை சிகிச்சையின் போதும் அது நகரக்கூடும். அதனால் இந்த அறுவை சிகிச்சையைப் பொறுமையாகத் தான் செய்ய வேண்டும். அதற்கு முன்பு சசிகலாவின் கருவில் இருக்கும் குழந்தையை அபார்ஷன் செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். என்று பொறுப்பற்று பதில் அளித்திருக்கிறார்கள்.

ஏழை, எளியவர்களுக்கு அவர்களது உடல் ஆரோக்யம் தான் மிகப்பெரிய சொத்து. அதையும் அரசு மருத்துவமனை செவிலியர்கள் அலட்சியத்தால் துன்பத்துக்குள்ளாக்கினால் அவர்கள் யாரை நம்பி சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும்?!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com