ஓரிடத்தில் சற்று வயதான குரங்குக்கும், துடிப்பான இளம் குரங்குக்கும் பலத்த சண்டை நடந்து கொண்டிருந்தது. துடிப்பான இளம் குரங்கு மூர்க்கத்தனத்துடன் சண்டையிட்டதில் வயதான குரங்குக்கு உடல் முழுதும் விழுப்புண்கள். ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. அந்த சமுதாயத்தைச் சேர்ந்த பிற குரங்குகள் சண்டையை விலக்கி விட முயன்று கொண்டிருந்தன. அப்போது அதன் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் குரங்கும் குட்டிக் குரங்கும் வயதான குரங்கின் அருகில் அரவணைத்து அமர்ந்து கொண்டு அதன் காயங்களை வருடிக் கொண்டும், இன்னும் வேறு எங்கெல்லாம் காயமிருக்கிறது என்று சோதித்துக் கொண்டும் இருந்த காட்சியை நாங்கள் கண்டோம். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. மிருகங்களுக்கு பரிதாப உணர்ச்சி இல்லை என்று யார் சொன்னது? இதோ கண்ணெதிரே காட்சியாக விரிகிறதே அவற்றுக்கிடையிலிருக்கும் பாச உணர்வும், அரவணைப்பு உணர்வும். சொல்லப்போனால் மனிதர்களிடத்தில் தான் வர வர இந்த உணர்வு குறைந்து கொண்டே வருகிறதோ என்னவோ?