தமிழ்நாட்டிலும் இவர்கள்  உட்கார வைக்கப் படலாமே?! 

அண்ணாநகரில் ஒரு பிரபல ஷோரூம் பணியாளரான ஆடவர் சொன்னது, சார், வீட்ல ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க, கல்யாணம் பண்ணனும், கடனைக் கட்டனும். இதெல்லாம் தான் மனசுல இருக்கு. நிற்கத்தான் வேணும்னு சூப்பர்வைஸர்
No more standing at work
No more standing at work
Published on
Updated on
2 min read

கேரள அரசு துணிக்கடைகளில் வேலை செய்யும் பெண்களுக்கு அமர ஒரு இருக்கை தர வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்திருக்கிறது. 

தமிழகத்தில் இந்த சட்டத்தை பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்காகவும் சேர்த்தே கொண்டு வர வேண்டியது அவசியம்.

ஒவ்வொருமுறையும் துணிக்கடைகளுக்குச் செல்லும் போது நானும் என் கணவரும் அங்கிருக்கும் வேலையாட்களிடம் தவறாமல் கேட்கும் கேள்வி;

நீங்கள் ஏன் இப்படி நாள் முழுவதும் நின்று கொண்டே இருக்க வேண்டும்? சிறிது நேரமாவது உட்கார்ந்து கொள்ள ஒரு நாற்காலி கேட்கக் கூடாதா? என்பதாகத்தான் இருக்கும்.

பாடியில் உள்ள பிரபல 9 மாடி ஜவுளிக்கடையில் ஒரு பெண் சொன்னார். அதெல்லாம் கேட்க முடியுங்களா மேம். காலைல சொன்ன நேரத்துக்கு 5 நிமிஷம் லேட்டானாலே சம்பளத்துல கட் பண்ணிடுவாங்க, இதெல்லாம் கேட்டா அவ்வளவு தான் வேலையை விட்டு நிறுத்திடுவாங்க. என்றார்.

அண்ணாநகரில் ஒரு பிரபல ஷோரூம் பணியாளரான ஆடவர் சொன்னது, சார், வீட்ல ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க, கல்யாணம் பண்ணனும், கடனைக் கட்டனும். இதெல்லாம் தான் மனசுல இருக்கு. நிற்கத்தான் வேணும்னு சூப்பர்வைஸர் சொன்னப்புறம் தானே நான் இந்த வேலைக்கு ஒத்துக்கிட்டு வந்தேன், இப்பப் போய் என்னத்தைக் கேட்க?!
- என்றார்.

ஆணோ, பெண்ணோ இவர்களுக்கான அலுவல் நேரம் 10 மணி நேரம் என்று சொல்லக் கேள்வி.

தொடர்ந்து நின்று கொண்டே வேலை பார்க்கும் பெண்களுக்கு உடலின் கீழ்ப்பகுதி கடுமையாக பாதிக்கப்படும். மாதவிடாய் காலங்களில் தீவிர மன அழுத்தத்தோடு உடல் நிலையும் பாதிப்புக்கு உள்ளாகும். சிறுநீர் கழிப்பதை அடக்குவதால் சிறுநீரகப் பிரச்னை ஏற்படக்கூடும்.  மாதவிடாய் சிரமங்கள் தவிர பெண்களுக்கு நிகழ வாய்ப்பிருக்கும் அத்தனை சிரமங்களும் ஆண்களுக்கும் பொருந்தக்கூடியவை தான்.

- என்கிறார்கள் மருத்துவர்கள்.

உலகெங்கும் தொழிலாளர் பிரச்சினைகள முன்னின்று நடத்தி எளிய அப்பாவி மக்களின் வாழ்வில் உழைப்பைக் குறைத்து சற்றே ஆசுவாசம் பெற வழிவகை செய்த பெருமை கம்யூனிஸ்டுகளையே சேரும் என்பார்கள். அப்படியொரு பாரம்பர்யத்தில் வந்தவரான கேரள முதல்வர் பினராயி விஜயன் கேரளத்தில் ஜவுளிக்கடைப் பெண்களின் வலிமிகுந்த  வாழ்வில் உட்கார இருக்கை தந்து ஒளியேற்றி விட்டார். நம் தமிழக முதல்வருக்கு அந்த எண்ணம் தோன்றுவது எப்போது?!

நம் தமிழகத்தின் ஜவுளிக்கடை ஆண்களும், பெண்களும் ஆட்கள் குறைந்த நேரமேனும் சற்றே இளைப்பாற நாற்காலியில் அமர்ந்து தங்களது சோர்வான கால்களை வலி தீர நீவிக் கொள்வது எப்போது?!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com