இனவெறி பிடித்த We Qutub உணவகத்துக்கு சீக்கிய இளைஞர் வைத்த செக்!

செய்த தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்பதென்பது வேறு, ஒப்புக்கு மன்னிப்புக் கேட்டு விஷயத்தை மூடி மறைக்க நினைப்பதென்பது வேறு, அதனால் யாருக்கும் எந்தவிதமான பலனும், நீதியும் கிடைக்க வாய்ப்பில்லை
இனவெறி பிடித்த We Qutub உணவகத்துக்கு சீக்கிய இளைஞர் வைத்த செக்!
Published on
Updated on
2 min read

பரம் சாகிப் எனும் சீக்கிய இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் டெல்லியில் இருக்கும் We Qutub உணவகத்திற்கு இரவு உணவுக்காகச் சென்றார். ஆனால், அங்கே அவருக்கும் அவரது நண்பர்களுக்கும் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. காரணம் பரம் சாகிப்பின் தோற்றமும், அவரது சீக்கிய அடையாளமும் தான். சீக்கியர்கள் நீண்ட தாடி வளர்த்து தலையில் டர்பன் கட்டிக் கொள்வது வழக்கம். இது அவர்களது மத அடையாளம் மட்டுமல்ல, நம்பிக்கையும் கூட. இதைக் காரணம் காட்டித்தான் We Qutub உணவக வரவேற்பறை அலுவலர் பரம் சாகிப் மற்றும் அவரது நண்பர்களுக்கு உள்ளே நுழைய அனுமதி மறுத்திருக்கிறார். எதிர்த்துக் கேள்வி எழுப்பிய பரம் சாகிப்பிடம், நீண்ட தாடி வளர்த்து தலையில் டர்பன் கட்டிய சீக்கியர்கள் சுத்தமற்றவர்கள், அவர்களை நாங்கள் எப்போதும் உள்ளே அனுமதிப்பதில்லை என்ற பதில் கிடைத்திருக்கிறது. அது மட்டுமல்ல  இந்துக்களைப்போல அல்ல சீக்கிய சர்தாஜிக்கள் மிகவும் முரடானவர்கள் என்றும் அந்த உணவகப் பணியாளர் பதிலளித்துள்ளார்.

பரம் சாகிப்
பரம் சாகிப்

இதனால் மிகுந்த மன வருத்தமும், கோபமும் அடைந்த பரம் சாகிப், We Qutub உணவகம் குறித்த தனது வருத்தத்தையும், கண்டனங்களையும் சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தார். இவரது கண்டனப் பதிவுக்குப் பின்பு அதே உணவகத்தைப் பற்றி மேலும் பலரும் கூட இதே விதமான குறைகளைக் கூறத் தொடங்கினர். அதைத் தொடர்ந்து இந்தச் செய்து காட்டுத்தீ போல பரவத் தொடங்க, தங்கள் உணவகத்துக்கு கிடைத்து வரும் இந்த எதிர்மறை பப்ளிசிட்டியைக் கண்டு துணுக்குற்ற We Qutub உணவக உரிமையாளர்கள் தரப்பு, பரம் சாஹிப்பிடம் தங்களது தவறுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டது. ஆயினும், தற்போது பரம் சாகிப், அவர்களை மன்னிப்பதாக இல்லை. 

அவர் என்ன சொல்கிறார் என்றால்? செய்த தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்பதென்பது வேறு, ஒப்புக்கு மன்னிப்புக் கேட்டு விஷயத்தை மூடி மறைக்க நினைப்பதென்பது வேறு, அதனால் யாருக்கும் எந்தவிதமான பலனும், நீதியும் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே, நான் அவர்களை மன்னிப்பதாக இல்லை. நான் இந்த விஷயத்தைப் பற்றி மேலும் பேசாமல் இருக்க வேண்டுமென்றால் குறைந்த பட்சம் நூறு ஆதரவற்ற குழந்தைகளுக்காவது அந்த உணவகம் சார்பாக கூட்டு உணவு வழங்கப்பட வேண்டும். அத்துடன் இப்படி மேம்போக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டிராமல், தங்களது உணவு நிறுவனத்தின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வ மன்னிப்புக் கடிதம் ஒன்றை அவர்கள் பதிவிட வேண்டும்.

எனக்கு ஏன் இந்தப் பிடிவாதம் என்றால், இப்படி ஒரு அவமரியாதை என்னைப் போல இனி யாருக்கும் நேர்ந்து விடக்கூடாது. உணவகங்களில் இனவெறியை அப்பட்டமாக வெளிப்படுத்தி வரும் இவர்களைப் போன்றவர்களின் துஷ்டத்தனம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். 
- என பரம் சாகிப் தெரிவித்தார்.

இது குறித்து உணவக நிர்வாகத்திடம் பதில் பெற முயன்ற போது அவர்கள் உடனடியாகப் பதிலேதும் அளிக்க முயற்சிக்கவில்லை என ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com