கோயில் திருவிழா ஆடல், பாடல் நிகழ்ச்சிகள்: நேரடியாக வழக்குத் தொடர முடியாது

கோயில் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும் கிராமிய ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி நேரடியாக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
கோயில் திருவிழா ஆடல், பாடல் நிகழ்ச்சிகள்: நேரடியாக வழக்குத் தொடர முடியாது


கோயில் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும் கிராமிய ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி நேரடியாக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமணன் தாக்கல் செய்த மனுவில், எங்களது கிராமத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயில் திருவிழாவை முன்னிட்டு கிராமிய ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி  

காவல் நிலையத்தில் மனு அளித்தேன். காவல் துறையினர் அனுமதி வழங்கவில்லை எனக் கோரியிருந்தார். இதே கோரிக்கையுடன் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் வெவ்வேறு கோயில் திருவிழாக்களுக்கு கிராமிய ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி இதுபோல கலாசார நடனங்கள், ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என போலீஸாருக்கு உத்தரவிட முடியுமா, என கேள்வி எழுப்பி இதுதொடர்பாக இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணைக்கு மாற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்குப் பரிந்துரை செய்தார். 

இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சி.வி.கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி பொதுநல வழக்குகள் பல தாக்கல் செய்யப்பட்டன. அந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓர் உத்தரவு பிறப்பித்துள்ளனர். 

அந்த உத்தரவில், இந்த வழக்கில்  பொதுநலன் எதுவும் இல்லை. மனுதாரர்களின் கோரிக்கைகளை உரிய காலகட்டத்துக்குள் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பித்திருந்தால், இந்த உயர்நீதிமன்றத்தில் இதுபோன்ற வழக்குகள் தொடர வேண்டிய அவசியமே இருந்திருக்காது. எனவே,  நிகழ்ச்சி நடத்துவதற்கு குறைந்தது இரண்டு வாரத்துக்கு முன்பு அனுமதி கோரி போலீஸாரிடம் மனு கொடுக்க வேண்டும். அந்த மனுவை இரண்டு நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். 

எனவே, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்துள்ள உத்தரவை நாங்கள் ஏற்று, இந்த வழக்குகளை முடித்து வைத்து உத்தரவிடுகிறோம். இனிவரும் காலங்களில் கிராமிய ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரி பொதுமக்கள் உயர்நீதிமன்றத்தில் நேரடியாக வழக்குத் தொடர முடியாது. நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி முதலில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளருக்கு கோரிக்கை மனு கொடுக்க வேண்டும். அந்த மனு கொடுக்கப்பட்ட நாளில் இருந்து இரண்டு வார காலத்துக்குள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி சட்டத்துக்குள்பட்டு பரிசீலித்து தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும். அந்த உத்தரவு மனுதாரர்களுக்கு எதிராக இருந்தால் மட்டுமே உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com