Enable Javscript for better performance
Naidu's praja vedika to be pulled down by CM jagan reddy!- Dinamani

சுடச்சுட

  

  நாயுடுவின் வீடு - அலுவலகத்தை இடிக்க உத்தரவு... பொது நலம் பேணுதலா அல்லது பழிவாங்கும் நடவடிக்கையா?! 

  By RKV  |   Published on : 25th June 2019 03:53 PM  |   அ+அ அ-   |  

  PRAJA_VEDIKA

   

  கிருஷ்ணா நதிக்கரையில் சட்டத்தை மீறிக் கட்டப்பட்டிருக்கும் அனைத்து கட்டிடங்களையும் இடித்துத் தள்ள ஆணை! இப்படி ஒரு ஆணை எதற்காக? ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சமீபத்தில் பிறப்பித்த இந்த ஆணை வெளிப்படையாகப் பார்ப்பதற்கு பொதுநல நோக்குடன் இடப்பட்டதாகத் தெரிந்தாலும் உண்மையில் ஆணையின் அடித்தளத்தில் கனன்று கொண்டிருப்பது முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீதான வஞ்சம் என்று கருதுவதற்கான வாய்ப்புகளுள் ஒன்றாகத் திகழ்வதாகவே தோன்றுகிறது. காரணம் கிருஷ்ணா நதிக்கரையில் நாயுடுவுக்குச் சொந்தமான கட்டடங்கள் மட்டும் இல்லை பல தன்னார்வ நிறுவனங்களும், அனாதை ஆசிரமக் கட்டடங்களும், மருத்துவமனைகளும் கூட இயங்கி வருகின்றன. அத்தனையையும் இடிக்கச் சொல்லி ஆணையிடுவாரா ஜெகன் மோகன் ரெட்டி. சொல்லப்போனால் கடந்த 50 ஆண்டுகளாக இங்கே கிருஷ்ணா நதியில் வெள்ளம் வந்து மக்கள் அவஸ்தைப்பட்ட வரலாறு ஏதும் இல்லை என தெலுங்கு தேசம் கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான கோரண்ட்ல புச்சையா செளத்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.

  கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள சந்திரபாபு நாயுடுவுக்குச் சொந்தமான பிரஜா வேதிகா எனும் அரண்மனை போன்ற பரந்து விரிந்த கட்டடம் நாயுடு முதல்வராக இருந்த காலகட்டத்தில் அவர் மக்களைச் சந்திக்கும் மாளிகையாக அனுசரிக்கப்பட்டு வந்தது. தவிர தெலுங்கு தேசம் கட்சி சார்ந்த நடவடிக்கைகளும் இவ்விடத்தில் வைத்து தான் நிகழ்த்தப்பட்டன. 2017 ஆம் ஆண்டு வாக்கில் கிருஷ்ணா நதிக்கரையில் தனது வீட்டின் அருகிலேயே சந்திரபாபு நாயுடு இப்படி ஒரு மாளிகையை நிர்மாணித்ததன் அடிப்படைக் காரணம் மக்களைச் சந்திக்க தனியே ஒரு அலுவலகம் வேண்டும் எனும் பொதுநல நோக்கத்தினால் மட்டுமே. ஆனால், ஒய் எஸ் ஆர் சி கட்சியைச் சார்ந்த சட்ட வல்லுனர்களில் ஒருவரான மங்கலகிரி அல்ல ராமகிருஷ்ண ரெட்டி என்பவர் நாயுடு ஆட்சிக் காலத்திலேயே உச்சநீதிமன்றத்தில் நாயுடுவின் பிரஜா வேதிகா மாளிகை மட்டுமல்ல அதனருகில் கட்டப்பட்டிருக்கும் அவரது வீட்டையும் சேர்த்து அங்கு இடம்பெற்றிருக்கும் பல மாளிகைகள் சட்டத்திற்குப் புறம்பாக விதிமீறல்களுடன் கட்டப்பட்டவை எனவே அவற்றை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரி பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு இன்றும் கூட உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் திடீரென ஆந்திர முதல்வர் ஒய் எஸ் ஆர் ஜெகன் ரெட்டி இப்படி அறிவித்திருப்பது தெலுகு தேசம் கட்சித் தலைமையை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

  கிருஷ்ணா நதிக்கரையில் நாயுடுவுக்குச் சொந்தமான கட்டடங்கள் தவிர்த்து பல வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் மாளிகைகளும், அரசியல் கட்சிப் பிரமுகர்களின் வீடுகளும், மிகப்பிரமாண்டமான நேச்சர் க்யூர் மருத்துவமனை வளாகம் ஒன்றும், ஆதரவற்றோர் இல்லம் ஒன்றும் கூட இடம்பெற்றிருக்கிறது. இவை அனைத்துமே சட்டத்திற்கு புறம்பாகக் கட்டுமானம் செய்யப்பட்டவையே என்பதால் எல்லாவற்றையும் இடிக்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறாராம் தற்போதைய முதல்வர் ஜெகன் ரெட்டி.

  தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு தற்போது வசித்து வரும் இல்லம் ஆந்திராவின் பிரபல உள்கட்டமைப்பு நிபுணரான லிங்கமேனி ரமேஷிடம் இருந்து 2015 ல் குத்தகைக்கு பெறப்பட்டதாகத் தகவல்.

  முன்னதாக கடந்த திங்களன்று பிரஜா வேதிகா மாளிகையில் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கான சந்திப்பை நிகழ்த்திய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, இந்த மாளிகையில் நிகழும் கடைசி நிகழ்வாக இது அமையலாம். ஏனெனில் கிருஷ்ணா நதிக்கரையில் சட்டத்திற்குப் புறம்பாக விதிமீறல்களுடன் கட்டப்பட்ட கட்டடப் பட்டியலில் இதுவும் ஒன்று என்பதால் வரும் புதன்கிழமை முதல் இவற்றை இடித்து தரைமட்டமாக்கும் வேலை தொடங்கப்படவிருக்கிறது. என்று தெரிவித்தார். அதுமட்டுமல்ல, இந்தக் கட்டடங்களைக் கட்ட சுமார் 5 கோடி முதல் 8 கோடி வரை அரசுப் பணம் செலவிடப்பட்டுள்ளது. ஆனாலும், இது நதிக்கரையை ஆக்ரமிக்கும் செயலாகக் கருதப்படுவதால் அரசு இதை இடிக்க உத்தரவிடுகிறது. எத்தனை கோடி பணம் செலவிடப்பட்டிருந்தாலும் விதி மீறல்கள் நிகழ்ந்திருப்பதால் தாட்சண்யமின்றி இந்த உத்தரவை இடுவதாக ஜெகன் தெரிவித்திருக்கிறார்.

  இதிலிருந்து பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த ஆட்சி இந்தக் கட்டடங்களைக் கட்டுவதற்கு எத்தகைய விதிமீறல்களில் எல்லாம் ஈடுபாட்டுடன் இறங்கியிருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று ஜெகன் ரெட்டி தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai