கள்ள உறவை ஊக்குவிக்கின்றனவா தொலைக்காட்சி மெகாத் தொடர்கள்? மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

இந்த ஒரு கேள்வி மட்டுமல்ல இது தொடர்பாக மொத்தம் 18 கேள்விகளை நீதியரசர்கள் என் கிருபாகரன் & அப்துல் குத்தூஸ் இருவரும் மத்திய, மாநில அரசுகளைப் பதிலளிக்குமாறு கேட்டிருக்கின்றனர்.
கள்ள உறவை ஊக்குவிக்கின்றனவா தொலைக்காட்சி மெகாத் தொடர்கள்? மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!
Published on
Updated on
2 min read

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் மெகாத்தொடர்கள் அதைத் தொடர்ந்து பார்த்து வருபவர்களிடையே கள்ள உறவுகளை ஊக்குவிக்கும் விதமாக அமைந்து இருக்கின்றனவா? எனும் கேள்வியை இன்று சென்னை உயர்நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளிடம் எழுப்பியுள்ளது. 

இந்த ஒரு கேள்வி மட்டுமல்ல இது தொடர்பாக மொத்தம் 18 கேள்விகளை நீதியரசர்கள் என் கிருபாகரன் & அப்துல் குத்தூஸ் இருவரும் மத்திய, மாநில அரசுகளைப் பதிலளிக்குமாறு கேட்டிருக்கின்றனர்.

கள்ளத் தொடர்பு காரணமாக கொலை வழக்கொன்றில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் ஒருவர் மீதான விசாரணைத் தடுப்பு ஆணையை ரத்து செய்யக்கோரிய மனுமீதான விசாரணையின் போது அவ்வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்த நீதிபதிகள், திருமணத்திற்கு அப்பாற்பட்ட கள்ளத்தொடர்பால் தொடர்ந்து அதிகரித்து வரும் கொலைகளைப் பற்றி செய்தித்தாளில் வெளியான கட்டுரை ஒன்றை மேற்கோள் காட்டி, இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள கொலைகளில் பெரும்பாலானவற்றில் கொலை செய்யப்படுபவர்கள் கணவன் அல்லது மனைவியாகவும், கொலை செய்யப்படுபவர்களும் கணவன், மனைவி மற்றும் அவர்களது குழந்தைகளாகவும் இருப்பதைப் பற்றி மத்திய, மாநில அரசுகளை விளக்கம் கேட்டுள்ளனர்.

இத்தகைய கொலைகளுக்குக் காரணமாக இருப்பது கள்ள உறவாக இருக்கும் பட்சத்தில் கொலையாளிகள் தங்களது சொந்தக் கணவரையும், மனைவியையும் ஏன் குழந்தைகளையும் கூட தங்களது உறவுக்கு இடைஞ்சலாக இருப்பதாகக் கருதி கொலை செய்து விடுகின்றனர். இதற்கு பிரதான காரணங்களாக அமைவது சமீப காலங்களில் அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகி வரும் மெகாத் தொடர்களே! பெரும்பாலான தொடர்களில் கள்ள உறவை சர்வ சகஜமாக காட்சிப் படுத்துகின்றனர். அத்துடன் டி ஆர் பி ரேட்டிங்கை உயர்த்திக் கொள்வதற்காக அத்தகைய கள்ள உறவு கொள்ளும் கதாபாத்திரங்களை முற்றிலும் குரூரமாகவும், மிகக் கொடூரமாக சொந்த வீட்டிலேயே வில்லத்தனம் செய்யும் நபர்களாகவும் சித்தரிக்கின்றனர், கொலை செய்யத் தயங்காத அத்தகைய கதாபாத்திரங்களால் தூண்டப்பட்டு தான் இன்று நாட்டில் கள்ள உறவின் அடிப்படையிலான கொலைகள் அதிகரித்து விட்டன என்றொரு குற்றச்சாட்டை பத்திரிகை கட்டுரைகள் முன் வைக்கின்றன. வெறும் பத்திரிகை கட்டுரை என்று இதை அப்படியே விட்டு விட முடியாது.

இந்தியாவில் திருமண உறவு என்பது புனிதமானது. அன்பு, நம்பிக்கை, நன்னடத்தை உள்ளிட்ட நியாயமான எதிர்பார்ப்புகளை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப் படுகிறது. அப்படி கட்டமைக்கப்படும் திருமண பந்தம் புனிதமானதாகவும் கருதப்படுகிறது. அப்படிப் புனிதமாகக் கருதப்பட்டு வந்த ஒரு பந்தம் இன்று பயந்து நடுங்கச் செய்யும் ஒரு உறவாக மாறியமைக்கு கள்ள உறவுகளே காரணமாக அமைகின்றன. சமூக விரோதத் தன்மை கொண்ட கள்ள உறவுகளின் மீது சுவோ மோட்டோவின் கீழ் கேள்வி எழுப்பியுள்ள நீதிபதிகள் அதற்கு பதிலளிக்கும் கட்டாயப் பொறுப்பை மத்திய மாநில அரசுகள் மேல் சுமத்தியிருக்கின்றனர்.

கள்ள உறவின் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில்  நிகழ்ந்துள்ள கொலைகள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் பற்றிய பட்டியல், கொலைக்கு கூலிப்படையினரை ஏவிய கணவன் அல்லது மனைவிகள் எத்தனை பேர் என்பது மாதிரியான உறுதியான தகவல்கள் சார்ந்த பட்டியல் போன்ற பல கேள்விகளை உயர்நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுள்ளது. கேள்விகளுக்கான பதிலை வரும் ஜூன் மாதத்திற்குள் தாக்கல் செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com