Enable Javscript for better performance
sarayu river..- Dinamani

சுடச்சுட

  
  sarayu_river

  sarayu river

   

  அயோத்தி தீர்ப்பு வெளிவந்து முழுதாக 48 மணி நேரங்கள் கடந்த பின்னும் இன்னும் அதைப் பற்றிய பேச்சுக்கள் ஓயவில்லை. அயோத்தி குறித்தும், ராமஜென்ம பூமி குறித்தும், ஸ்ரீராம அவதாரம் குறித்தும், தீர்ப்பு சரியானதா? பாரபட்சமானதா? எதிர்தரப்பு இந்தத் தீர்ப்பை அப்படியே ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளுமா? தீர்ப்பில் அதிருப்தி கொண்டு சன்னி வக்ஃபு வாரியம் மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்யவிருக்கிறதே? அதற்கான பலன் என்னவாக இருக்கும் என்பதெல்லாம் குறித்து மக்களிடையே விவாதங்கள் ஓடிக் கொண்டே தான் இருக்கின்றன. இதற்கு நடுவில் பாகைத் துரும்பாக சரயு நதி குறித்தும் அவ்வப்போது சில சுவாரஸ்யமான உரையாடல்கள் இடம்பெறுவதைக் காண முடிகிறது.

  சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் செட்டில் ஆன தமிழ்க் குடும்பத்துச் சிறுமி ஒருத்தி சென்னையில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு விருந்தாட வந்திருந்தாள். அவளோடு பேசிக் கொண்டிருக்கையில் அவளது பெயரென்ன என்று கேட்டதற்கு ‘சரயு’ என்று பதில் வந்தது.

  நம்மவர்கள் ‘சரயு’ என்று பெயர் வைக்கிறார்களா? என்று கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது.

  இதிலென்ன பெரிய ஆச்சர்யம்? யமுனா, கங்கா, சரஸ்வதி, நர்மதா என்றெல்லாம் நம்மூர்களில் வட இந்திய நதிகளின் பெயரில் பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் வைக்கப்பட்டிருக்கின்றனவே! என்று நீங்கள் கேட்கலாம்.. அதெல்லாம் சரி தான், ஆனால், சரயு என்று பெயர் வைப்பதெல்லாம் கொஞ்சம் அரிது தான் என்று மனதுக்குப் பட்டது.

  சரயு நதியைப் பொருத்தவரை தமிழகத்தில் இருக்கும் நமக்குப் பெரிதாக என்ன தெரியும்?

  அது ஸ்ரீராமரின் ஜென்ம பூமியான அயோத்தியில் இருக்கிறது. இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் சரயுவின் கரையில் தான் அயோத்தி இருக்கிறது.. என்பது வரை அனேகருக்கும் தெரிந்திருக்கும்.. அதற்கும் அப்பால் அதன் சிறப்பு என்ன?

  வால்மீகி ராமாயணத்தின் படி, தனது அவதார நோக்கம் முடிந்ததும் ஸ்ரீராமர் தமது இளவல்களான பரதன், சத்ருகனன் மற்றும் பல ராமபக்தர்களுடனும் இணைந்து மோட்சம் அடைந்தது இங்கே தான் எனக்கருதப்படுகிறது. ஆம், ராமபிரான், அயோத்தியின் ஆட்சிப் பொறுப்பை தமது வாரிசுகளான லவ, குசனிடம் ஒப்படைத்து விட்டு சரயுவில் இறங்கி தம் அவதாரத்தை முடித்துக் கொண்டு மகாவிஷ்ணுவுடன் ஐக்கியமானார் என்கிறது துளசிதாஸரின் ராம சரித மானஸ்.

  இதே நதிக்கரையில் தான் ஸ்ரீராமர் அவதரித்தார் என்பதையும் நாம் மறந்து விடத் தேவையில்லை.

  இந்த நதியைப் பற்றி இன்னும் சொல்வதென்றால், எந்த புத்திர சோக சாபம் தசரத மகாராஜாவைப் பீடித்ததோ? எந்த புத்திர சாபத்தால் தசரதர் தம் இன்னுயிர் புத்திரன் ஸ்ரீராமனைப் பிரிந்து உயிரிழந்தாரோ அந்த சாபத்துக்குக் காரணமான சிரவண மோட்சம் நடைபெற்றதும் இங்கே வைத்துத் தான் என்கிறது புராணம்.

  ஆம், கண் பார்வையற்ற தனது பெற்றோரை துலாக் கட்டி புஜங்களில் சுமந்து ‘எள் எனும் முன் எண்ணெயாக நின்று’ சேவை செய்து கொண்டிருந்தான் சிரவணன் எனும் சிறுவன். ஒருமுறை அவன் தாகம் என்று தண்ணீர் கேட்ட தன் பெற்றோருக்காக நீரள்ள சரயூவில் குனிந்த போது, அது யானையின் பிளிறலோ என்றெண்ணி அம்பெய்தி வீழ்த்தினான் அயோத்தி மன்னன் தசரதன். ஐயகோ! அம்மா, அப்பா என்று கதறி விழுந்த சிரவணன் அங்கேயே மாண்டான். ஆனால், உண்மை அறிந்ததும் வருந்திய அயோத்தி மன்னன், நீரள்ளி அந்த கண் தெரியாத பெற்றோரிடம் சென்று செய்து விட்ட மாபெரும் பிழையை எடுத்துரைத்து அவர்களிடம் மன்னிப்பு வேண்டி நின்றான். பிள்ளையை இழந்த பெற்ற மனம் மன்னிக்கத் துணியுமோ?! எங்கள் கண்ணின் மணியைப் பிடுங்கி விட்டு, மன்னிப்பா கேட்கிறாய்? என வெகுண்ட அந்த கண்ணற்ற பெற்றோர், மன்னன் தசரதனுக்கு புத்திர சோகத்தால் மாண்டு போகும்படி சாபம் விட்டனர்.

  அந்த துயர நிமிடங்கள் அத்தனைக்கும் மெளன சாட்சியாய் நின்றதும் இதே சரயு நதி தான் என்கிறது புராணம்.

  ஆண்டு தோறும் ராம நவமியன்று இதே சரயுவில் முங்கி எழுந்தால் பாவம் தொலையுமென்பது ராம பக்தர்களின் நம்பிக்கை.

  ராம நவமியை ஒட்டி அயோத்தியில் திரளும் ராம பக்தர்கள், இந்த நதியில் நீராடுவது வழக்கம். இப்போது அயோத்தி தீர்ப்பு வெளிவந்து அங்கே ராமர் கோயில் கட்டிக் கொள்ள அனுமதியும் கிடைத்த பிறகு அயோத்தி இந்தியாவின் மிக முக்கியமான ஆன்மீகச் சுற்றுலாத்தலமாக மாற அனேக வாய்ப்புகள் இருக்கின்றன. 

  அதை முன்னிட்டு சரயு நதியைப் புனரமைக்க திட்டம் தீட்டி வருகிறது உத்தரப்பிரதேச மாநில அரசும், மத்திய அரசும்.

  ஆக ‘சரயு’ என்றொரு நதி இருந்தது. என்ற கதை மாறி தற்போது சரயு நதியைப் பற்றித் தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

  சரயு என்றால் காற்றைப் போலக் கடுகிப் பாயும் நதி என்று அர்த்தமாம். 

  அப்படியா? இல்லையா? என்பதை அதில் முங்கிக் குளித்தவர்கள் தான் சொல்ல வேண்டும்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai