பைஜூ பாவ்ரா.. இசையரசர் தான்சேனை இளைஞன் ஒருவன் பலிவாங்கிய கதை!

இதில் நடிக்க ஆரம்பித்தில் விஜய் பட் தேர்வு செய்து வைத்திருந்த நாயக, நாயகிகள் திலீப் குமார் மற்றும் நர்கீஸ். ஆனால், கால்ஷீட் ஒத்துவராத காரணத்தாலும், பட்ஜெட் ஒத்துழைக்காத காரணத்தாலும்
பைஜூ பாவ்ரா.. இசையரசர் தான்சேனை இளைஞன் ஒருவன் பலிவாங்கிய கதை!

ரன்வீர் சிங், சஞ்சய் லீலா பன்சாலி வெற்றிக்கூட்டணியின் அடுத்த முயற்சியாக வெளிவரவிருக்கிறது ‘பைஜூ பாவ்ரா’ என்றொரு இந்தித் திரைப்படம். இது 1952 ஆம் ஆண்டிலேயே மீனாகுமாரி, பரத் பூஷன் நடிப்பில் விஜய் பட் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம். அந்தக் காலத்தில் இது வசூலித்துத்தந்த தொகை 1.25 கோடி. மியூசிக்கல் மெகா ஹிட் திரைப்படமான இதில் நடிக்க ஆரம்பித்தில் விஜய் பட் தேர்வு செய்து வைத்திருந்த நாயக, நாயகிகள் திலீப் குமார் மற்றும் நர்கீஸ். ஆனால், கால்ஷீட் ஒத்துவராத காரணத்தாலும், பட்ஜெட் ஒத்துழைக்காத காரணத்தாலும் இறுதியாக மீனாகுமாரியை வைத்து எடுத்தார். படம் மெகா ஹிட். இதன் அன்றைய இசையமைப்பாளர் நெளஷத். இந்தப் படத்திற்கு முன்பு வரை நெளஷத் கிராமிய இசைக்கே முன்னுரிமை அளித்து இசையமைக்கக் கூடியவர். இவருக்கு அது மட்டும் தான் அத்துப்படி என்றொரு பேச்சிருந்தது பாலிவுட்டில். ஆனால், பைஜூ பாவ்ரி முற்றிலுமாக பாரம்பர்ய ஹிந்துஸ்தானி இசையை மையமாகக் கொண்டு வெளிவந்து பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனதும் நெளஷத்தின் இசைத்திறன் பற்றிய இந்திப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் கண்ணோட்டம் மாறியது என்கிறார்கள். 

அந்தக் கால பைஜூ பாவ்ரா..
அந்தக் கால பைஜூ பாவ்ரா..

எது எப்படியோ இந்தப் படம் அந்தக்காலத்தில் மட்டுமல்ல, இப்போது திரைப்படமாக்கப்பட்டாலும் இதற்கான ரசிகர்கள் கூட்டம் அப்படியே திரளும் என்ற நம்பிக்கை சஞ்சய் லீலா பன்சாலிக்கு நிறையவே இருக்கிறது. அதனால் தான் தனது லக்கி ஸ்டாரான ரன்வீர் சிங்கை பைஜூவாக்கி இத்திரைப்படத்தை மீண்டும் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இதற்கான அறிவிப்பு தீபாவளியன்று வெளியானது. படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்கலாம். அதற்கு முன்பு தற்போது கைவசமிருக்கும் திரைப்படங்களை விரைந்து முடிப்பதில் இயக்குனரும், ஹீரோவும் மும்முரமாக இருப்பதாகத் தகவல்.

பைஜூ பாவ்ரா போஸ்டர்..
பைஜூ பாவ்ரா போஸ்டர்..

பைஜூ பாவ்ரா திரைப்படத்தின் கரு... பைஜூ எனும் இளைஞன், அக்பரின் அரசவையில் நவரத்னங்களில் ஒருவராக அலங்கரித்துக் கொண்டிருக்கும் இசையரசர் தான்சேனை தன்னுடன் ஒற்றைக்கு ஒற்றை போட்டிக்கு வருமாறு அறைகூவல் விடுக்கிறான். அவனது அறைகூவலுக்கான காரணம், அவனது பால்யத்தில் தான்சேனுடன் நேரடி இசைப்போட்டியொன்றில் கலந்து கொண்டு தோற்ற தன் தந்தை தோல்வி தந்த அவமானத்திலேயே உழன்று மரணத்தைத் தழுவ, மரணத்தைத் தழுவும் முன் மகனது கையடித்துச் சத்தியம் பெறுகிறார். நீ என்றாவது ஒருநாள் எனது தோல்விக்கும், மரணத்துக்கும் காரணமான அந்த தான்சேனை இசைப்போட்டியில் வென்றே ஆக வேண்டும், எனது தோல்விப்பழியைத் துடைத்தே ஆக வேண்டும், அப்போது தான் எனது ஆன்மா சாந்தியடையும் என்ற ரீதியில் வாக்குப் பெற்றுக் கொண்டு மரணிக்க. தந்தையின் வாக்கைக் காப்பாற்ற பைஜூ, தான்சேனை இசைப்போட்டிக்கு அழைக்கிறான். இப்படிச் செல்கிறது கதை. இதில் பைஜூ, தான்சேனை ஜெயித்தானா? பலிவாங்கினானா? என்பதை அடுத்தாண்டு வெளிவர இருக்கும் சஞ்சய் லீலா பன்சாலியின் ‘பைஜூ பாவ்ரி’ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

தான்சேனாக நடிக்க அஜய் தேவ்கன்னிடம் பேசப்பட்டது. ஆனால், என்ன காரணத்தாலோ அவரில்லை படத்தில் என்கிறார்கள். இன்னும் நாயகி யாரெனும் அறிவிப்பும் வெளிவரவில்லை. ஒருவேளை கணவருக்கு இணையாக தீபிகாவே நடிக்கலாம் அல்லது சமீப காலங்களில் தன்னை ஒரு பாடகியாகவும் நிலைநிறுத்திக் கொண்டுள்ள ப்ரியங்கா சோப்ராவும் கூட தேர்வாகலாம். எப்படியோ மீண்டுமொரு இசை விருந்துக்கு தயாராகவிருக்கிறது பாலிவுட் என்பது மட்டும் நிஜம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com