/

கரோனாவால் 100 கோடி பேர் மனநலம் பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு தகவல்

கரோனா தொற்று நோய் மில்லியன் கணக்கான மக்களின் மன நலனை பாதித்துள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 

News image

உலக சுகாதார அமைப்பு

Updated On :28 ஆகஸ்ட் 2020, 1:02 pm

கரோனா தொற்று நோயால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இதுகுறித்து கூறுகையில், 

'தொற்று நோயால் மக்கள் யாரும் ஒருவரையொருவர் தொடர்புகொள்ள முடியாத சூழ்நிலை இருக்கிறது. சமூகத் தொடர்பு இல்லாதது அவர்களின் மன நலனில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரோனாவை எதிர்த்து போரிடுவதில் மன ஆரோக்கியமும் மிகவும் முக்கியம். பராமரிப்பு இல்லங்கள் மற்றும் மனநல காப்பகங்களில் உள்ளவர்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம். கரோனா வைரஸ் தொற்று காரணமாக மனநல ஆலோசனை மையங்கள் பல மூடப்பட்டுள்ளன. இதுவும் ஒரு காரணம். ஆரம்ப காலத்தில் தொற்று நோய் ஏற்பட்ட பலர் புறக்கணிக்கப்பட்டதால் அவர்களுக்கு மன ரீதியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில், 75 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் எந்த சிகிச்சையும் பெறவில்லை' என்று தெரிவித்தார். 

மேலும், வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி உலக மனநல தினத்தை முன்னிட்டு உலக சுகாதார அமைப்பு, அதன் கூட்டு அமைப்புகளுடன் இணைந்து மனநலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றும் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.