'உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையால் எலும்புகளில் பாதிப்பு ஏற்படும்'

அறுவை சிகிச்சை மூலம் உடல் எடை குறைந்தாலும் இது பிற்காலத்தில் பல்வேறு உடல்நலப் பிரச்னையை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தற்போதைய காலகட்டத்தில் இளம்பருவத்தினரிடையே உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்துகொள்வது அதிகரித்து வருகிறது. 

ஆனால், அறுவை சிகிச்சை மூலம் உடல் எடை குறைந்தாலும் இது பிற்காலத்தில் பல்வேறு உடல்நலப் பிரச்னையை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஸ்லீவ் காஸ்ட்ரெக்டோமி(sleeve gastrectomy) எனப்படும் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை பிற்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வழிவகுக்கும் என்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

குழந்தைப் பருவ உடல் பருமன் என்பது கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ள பொதுவான ஒரு சுகாதாரப் பிரச்னை என்று பாஸ்டனில் உள்ள ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் கதிரியக்கவியல் பேராசிரியரும் முன்னணி ஆய்வாளருமான மிரியம் ஏ. ப்ரெடெல்லா கூறினார்.

ஸ்லீவ் காஸ்ட்ரெக்டோமி என்பது குழந்தைகள் மற்றும் பெரியவர்களில் செய்யப்படும் மிகவும் பொதுவான பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறை. 

ஸ்லீவ் காஸ்ட்ரெக்டோமியில், உணவு உட்கொள்ளலை கட்டுப்படுத்தவும் எடை இழப்பைத் தூண்டவும் சுமார் வயிற்றுப்பகுதியில் உள்ள 75% தசைப்பகுதி நீக்கப்படுகிறது. இளம்பருவத்தில் செய்யப்படும் ஸ்லீவ் காஸ்ட்ரெக்டோமி நடைமுறைகளின் எண்ணிக்கை 2005 முதல் 2014 வரை 100 மடங்கு அதிகரித்துள்ளது. 

பெரியவர்களில் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை எலும்பில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும். இது அதிக எலும்பு முறிவு அபாயத்திற்கு வழிவகுக்கும். இதுவே இளம்பருவத்தினரிடம் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அறிய ஆய்வு மேற்கொண்டதாக டாக்டர் ப்ரெடெல்லா கூறினார்.

இந்த ஆய்வில் மிதமானது முதல் அதிக உடல் பருமன் கொண்ட 52 இளம் வயதினர் பங்கேற்றனர். இவர்களில் 26 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மீதியுள்ள 26 பேர்  கண்காணிப்பில் மட்டுமே இருந்தனர். இவர்களின் சராசரி வயது 17.5 ஆண்டுகள் மற்றும் சராசரி உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) 45.30 அல்லது அதற்கு மேல் இருந்தது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 38 பேர் பெண்கள்.

அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து ஒரு வருடம், ஸ்லீவ் காஸ்ட்ரெக்டோமிக்கு உட்பட்ட இளம் பருவத்தினர் 34 கிலோ வரையில் உடல் எடை குறைந்தனர். 

தொடர்ந்து 12 மாதங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட எலும்பு மஜ்ஜை குறித்த பரிசோதனையில் மாற்றம் இருப்பது தெரியவந்தது. அதாவது அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு இடுப்பு எலும்பு மஜ்ஜை மிகவும் குறைந்திருந்தது கண்டறியப்பட்டது. 

மற்றொரு குழுவில் உள்ள 26 பேரில் யாரும் குறிப்பிடத்தக்க அளவு எடை குறையவில்லை. அதேபோன்று அவர்களின் எலும்பு மஜ்ஜையில் மாற்றம் ஏற்படாமல் வழக்கமான அளவு இருந்தது. 

எடை இழப்பு அறுவை சிகிச்சை, எடை இழப்பு மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகளை மேம்படுத்துவதில் வெற்றிகரமாக இருந்தாலும், இது எலும்பில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது இந்த ஆய்வின் மூலம் உறுதியாவதாக டாக்டர் ப்ரெடெல்லா கூறினார்.

மேலும் எலும்பு இழப்பைத் தடுக்கவும், உடல் பருமன் கொண்ட இளம் பருவத்தினருக்கு எலும்பு ஆரோக்கியத்தைப் பற்றி மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த ஆய்வின் முடிவுகள் உதவும் என்றும் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com