சுருட்டை முடி அழகுதான் ஆனால் பராமரிப்பு? இதோ 5 குறிப்புகள்

சுருட்டை முடி பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அதைப் பராமரிப்பது கடினம்தான்.
சுருட்டை முடி அழகுதான் ஆனால் பராமரிப்பு? இதோ 5 குறிப்புகள்

ஒருவருக்கு சுருட்டை முடி இருந்தால், அது மற்றவர்களை விட தனித்துக் காட்டும். ஸ்ப்ரிங் முடி என்று சிலர் கேலி செய்தாலும், சுருட்டை முடி பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் அதைப் பராமரிப்பது சற்றுக் கடினம்தான். சுருள் சுருளாக கட்டுக்கடங்காததாக இருப்பதால் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவைப்படலாம். ஆனால் அது உங்கள் ஆளுமைக்கு வலு சேர்க்கும் இயற்கையான விஷயம் என்றால் மிகையில்லை. சுருட்டை முடியை வழிக்குக் கொண்டு வர சில வழிகள் உள்ளன :

தரமான ஷாம்பு மற்றும் கண்டிஷனர்

சுருட்டைத் தலைமுடிக்கு ஏற்ற ஷாம்பு, கண்டிஷனர் மற்றும் சீரம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் தலைமுடி பராமரிப்புப் பொருட்களில் கூடுதல் ஊட்டச்சத்து இருக்கிறதா என்பதைக் கவனித்து வாங்க வேண்டும். உச்சந்தலையில் இருந்து உற்பத்தி ஆகும் இயற்கை எண்ணெய் கூந்தலை அடையாது, மேலும் சுருட்டை முடிக்கு நிறைய ஈரப்பதம் தேவைப்படுகிறது, அதனால்தான் சுருள் முடி மிகவும் சிக்கலாகவும், கடினமாகவும் இருக்கும். உங்கள் சுருட்டை முடியை சீராக வைத்திருக்கப் பால் கிரீம் கண்டிஷனர் நல்ல தேர்வு.

தரமான சீப்பைப் பயன்படுத்தவும்

உங்கள் தலைமுடியை வேர்களிலிருந்தோ அல்லது தலைமுடியின் நடுவிலிருந்தோ வாறத் தொடங்க வேண்டாம். எப்போதும் உங்கள் தலைமுடியை முனைகளிலிருந்து துவங்கி, மெதுவாக உங்கள் வேர்களுக்கு மேலே செல்லுங்கள். உங்கள் சுருள் முடிக்கு அப்படித்தான் படிய வைக்க வேண்டும்.

ஹேர் மாஸ்க்

உச்சந்தலையில் இருந்து இயற்கையான எண்ணெய் உங்கள் தலைமுடியை எட்டாததால் சுருள் முடி மிக விரைவாக வறண்டு போகும் என்று கூறப்படுகிறது, எனவே தேங்காய் எண்ணெய், ஆர்கன் போன்ற எண்ணெய் சார்ந்த கண்டிஷனர்கள் மூலம் உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.  அதே கண்டிஷனரை நீங்கள் ஹேர் மாஸ்காகவும் பயன்படுத்தலாம். மேலும் 10-15 நிமிடங்கள் உட்கார்ந்து அதை நன்கு கழுவவும். இந்த முறை சில்கியான சுருட்டை முடிகளைத் தருவது மட்டுமல்லாமல் தலைமுடி அலை அலையாகக் கலைவதைத் தடுக்கும்.

அதிக வெப்பத்தைத் தவிர்க்கவும்

சுருள் முடி எளிதில் சேதமடையக் கூடும், மேலும் அதை வெப்பமூட்டும் கருவிகள் மற்றும் ஸ்டைலிங் தயாரிப்புகளை வைத்து சிகிச்சையளித்தால் அது அதன் அமைப்பையும் தரத்தையும் இழக்கக் கூடும். ப்ளோ ட்ரையர்கள், டிஃப்பியூசர்கள் போன்ற வெப்பமூட்டும் கருவிகளைத் தவிர்ப்பது நல்லது. மேலும், சுருட்டை முடி சேதமடையாமல் பாதுகாக்கும் ஸ்ப்ரேக்கள் மற்றும் ஜெல் உள்ளிட்ட ஸ்டைலிங் தயாரிப்புகள் அதன் தரத்தைப் பொருத்து பயன்படுத்தலாம். உங்கள் சுருள் முடியை இயற்கையாக உலர வைக்கவும்.

தூக்க நேரம்

ஒவ்வொரு இரவும் தூங்குவதற்கு முன் உங்கள் சுருட்டை முடியை கவனித்துக் கொள்வது முக்கியம். அப்படிச் செய்தால் சிக்கலான கூந்தலுடன் எழுந்திருக்க வேண்டாம். இரவு தூங்கும் போது பன் கொண்டை போட்டுவிட்டுத் தூங்கவும். தலைமுடி சிறியதாக இருந்தால் ஒரு சாடின் துணியால் சுற்றி படுக்கவும். காலையில் எழுந்திருக்கும் போது தலைமுடியைப் பராமரிக்க எளிதாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com