பொதுவாக உடல்நலத்தைப் பாதுகாக்கவும் நோய்களில் இருந்து தப்பித்துக்கொள்ளவும் வெள்ளையாக இருக்கும் பொருள்களை உணவில் அதிகம் சேர்க்கக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுவதுண்டு.
குறிப்பாக உப்பு, வெள்ளைச் சர்க்கரை, பால் பொருள்கள் ஆகியவற்றை முடிந்தவரை குறைவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் விஷயம்.
அதேபோன்றுதான் அரிசியும் கார்போஹைடிரேட்டுகளை அதிகம் கொண்டுள்ளதால் உடல் பருமன் கொண்டவர்கள், நீரிழிவு நோயாளிகள் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரைகளில் ஒன்று.
ஆனால், வெள்ளை அரிசிக்குப் பதிலாக சிவப்பு அரிசி பயன்பாடு அந்தக்காலத்தில் இருந்து வந்ததும் இதனால் பெரும்பாலாக இதய நோய், நீரிழிவு நோய் குறைவாக இருந்ததும் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம்.
சிவப்பு அரிசி, சிவப்பு நிறங்களில் பல பெயர்களில் உள்ளன. சிவப்பு அரசியில் உள்ள 'அந்தோசயனின்' எனும் மூலக்கூறே இதற்கு சிவப்பு நிறத்தை அளிக்கிறது. இதுவே நோயெதிர்ப்பு சக்திக்கும் காரணமாகிறது.
இதையும் படிக்க | செயற்கை குளிர்பானங்கள் அதிகம் அருந்துவதற்கு காரணம் இதுதான்!
சிவப்பு அரிசி சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள்
♦மற்ற அரிசியில் இல்லாத அளவுக்கு சிவப்பு அரிசியில் குறைவான கார்போஹைட்ரேட், வைட்டமின் பி1, பி3 பி6, இரும்புச்சத்து மெக்னீசியம், துத்தநாகம், மாங்கனீசு உள்ளிட்ட சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன.
♦ புரதம், நார்ச்சத்து நிறைந்து காணப்படும் அரிசி என்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
♦ரத்தத்தில் உள்ள கொழுப்புகளின் அளவைக் குறைப்பது மட்டுமின்றி சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய உணவாக இருக்கிறது.
♦எளிதாக ஜீரணமடையும் என்பதால் செரிமானக் கோளாறுகள் ஏற்படாது. வயிறு எளிதாக இருப்பது போல தோன்றும்.
♦நல்ல ஆரோக்கியம், குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி, உடல் உறுப்புகளின் செயல்பாடு சீராக இருத்தல் ஆகியவற்றுக்கு உகந்தது.
♦உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இந்த அரிசியை சாப்பிடலாம். இத்துடன் உடற்பயிற்சியையும் மேற்கொண்டால் உடல் எடை குறையும்.
♦உடல் பலம் பெறவும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.
♦அடுத்ததாக உடலுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது. வெயில் காலத்தில் உடல் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுவதால் உடல் உபாதைகள் ஏற்படும். ஆனால், சிவப்பு அரிசி உடல் உஷ்ணத்தைத் தடுக்கிறது.
♦பெண்கள், குறிப்பாக தாய்மார்கள் சிவப்பு அறியாய் உண்டால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். இதர உடல் பிரச்னைகளும் சீராகும்.
♦நீரிழிவு நோயாளிகள், அதிக ரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு சிறந்த உணவு.
♦மேலும், புற்றுநோயைத் தடுக்கிறது, முடி வளர்ச்சிக்கு உதவுகிறது, எலும்புகளை வலுப்படுத்துகிறது.
♦சிவப்பு அரிசியில் கஞ்சி, களி, தோசை, புட்டு, இடியாப்பம் ஆகியவை செய்து சாப்பிடலாம். காலை உணவாக சாப்பிட்டால் மிகவும் நல்லது என்கின்றனர் உடல்நல நிபுணர்கள்.
இதையும் படிக்க | மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதற்கான 12 அறிகுறிகள்! தீர்வு என்ன?