இரவு உணவை சீக்கிரம் சாப்பிட வேண்டும், ஏன்?

நம் முன்னோர்கள் பெரும்பாலாக மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன்னதாகவே இரவு உணவை சாப்பிட்டுவிடுவதுண்டு. அதுபோல இரவு சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். 
இரவு உணவை சீக்கிரம் சாப்பிட வேண்டும், ஏன்?
Published on
Updated on
2 min read

நம் முன்னோர்கள் பெரும்பாலாக மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன்னதாகவே இரவு உணவை சாப்பிட்டுவிடுவதுண்டு. அதுபோல இரவு சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழும் பழக்கத்தையும் கொண்டிருந்தனர். 

ஆனால், வேலை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக தற்போதைய காலகட்டத்தில் இரவு உணவு உட்கொள்வது தாமதமாகிறது. இரவு 10-11 மணியைத் தாண்டி இப்போதெல்லாம் 'மிட் நைட் தபா'க்கள் வந்துவிட்டன. நள்ளிரவில் சென்று அசைவ உணவுகளைச் சாப்பிடும் கலாசாரம் அதிகரித்து வருகிறது. 

இம்மாதிரியான பழக்கவழக்க மாற்றங்கள் உடலில் இயங்கும் உயிரியல் கடிகாரத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இவை உடல் உபாதைகள், நோய்கள் ஏற்படக் காரணமாகின்றன. குறிப்பாக இரவு தூக்க நேரத்தில் வயிற்றுப் பிரச்னைகள், செரிமானக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. 

எனவே, முடிந்தவரை இரவு உணவை சீக்கிரமாக சாப்பிட்டுவிட வேண்டும். தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக இரவு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர் மருத்துவர்கள்.

இரவு உணவுக்கும் காலை உணவுக்கும் 12 மணி நேர இடைவெளி வரை எடுத்துக்கொள்ளலாம். அதாவது இரவு 8 மணிக்குச் சாப்பிட்டால் அடுத்ததாக காலை 8 மணிக்கு சாப்பிட வேண்டும்.

இந்த நடைமுறை ஒரு சில நாள்கள் கடினமாக இருப்பது போன்று உணரலாம். ஆனால் பழகிவிட்டால் இயல்பாக மாறிவிடும். அதுமட்டுமின்றி உங்கள் உடல்நலனுக்கு இது மிகவும் நல்லது. 

இரவு சீக்கிரம் சாப்பிட வேண்டும், ஏன்?

இரவு உணவை சீக்கிரமாகவே சாப்பிடும்போது உறங்குவதற்கு முன்னதாகவே உணவு முழுவதும் நன்றாக செரிமானம் அடைகிறது. ஆம் , கிட்டத்தட்ட வெறும் வயிற்றில்தான் உறங்கச் செல்ல வேண்டும். இதனால் செரிமான உறுப்புக்கள் அமைதி நிலைக்குச் செல்கின்றன.

நல்ல உறக்கம் இருக்கும்போது உடலில் ஏற்படும் கோளாறுகள் சரியாகிறது. உடல் கோளாறுகள் சரிசெய்யப்படும் நேரம் இது. இதனால் அடுத்த நாள் காலை புத்துணர்ச்சியுடன் எழ முடியும். 

சாப்பிட்டவுடன் உறங்குவதால் உணவு செரிக்காமல் வயிற்றில் படிந்துவிடும் அல்லது உறங்கும்போது செரிமானம் தொடங்குவதால் தூக்க கலக்கம் ஏற்படும்.

இரவில் அதிக கொழுப்பு, கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. எளிதாக செரிமானம் அடையக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். திடமான உணவுகளைச் சாப்பிடுவதால் தூக்கத்தின் தரம் தடைபடுகிறது. 

சூரியன் மறைவுக்குப் பிறகு, உடலில் மெலடோனின் சுரப்பு வெளியாகத் தொடங்குகிறது. இது செரிமான நொதிகளைக் குறைக்க குடலுக்கு சமிக்ஞை செய்கிறது. இதனால் செரிமான செயல்முறை குறைகிறது. ஏனெனில், மெலடோனின் இந்த நேரத்தில் உடலை குணப்படுத்தத் தொடங்குகிறது.

சூரியன் மறைவுக்குப் பின்னர் பொதுவாகவே குறைவாக எளிதாக ஜீரணம் அடையக்கூடிய உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். 

இதனால் உணவு செரிமானம் அடைவதுடன் அமிலத்தன்மை, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். 

இரவு தாமதமாக உண்பது உடல் வீக்கம், உயர் ரத்த அழுத்தம், இதய பிரச்னைகள், உடலில் உப்பு சேர்தல் ஆகியவற்றுக்கு வழிவகுக்குகிறது. 

சரியான நேரத்தில் சரிவிகித உணவை நம் உடலுக்கு ஊட்டுவது முக்கியம். அதிலும் தூங்கச் செல்வதற்கு முன்னதாக எடுத்துக்கொள்ளும் இரவு உணவில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். உடலுக்கு ஏற்றவாறு நீங்கள் செயல்பட்டால் உங்கள் பேச்சை அது கேட்கும். இல்லையெனில் அதன்வழியில் நீங்கள் பயணிக்க நேரிடும். எனவே, இரவு உணவை குறைந்தது உறங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னதாக எடுத்துக்கொள்வதுடன் சீக்கிரம் தூங்கி அதிகாலையில் விழியுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com